பெங்களூரை சேரந்த கரண் வாசுதேவன் எழுதி இயக்கி இசை அமைத்து ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ள ‘மரணத்தின் ஜகடம்’ என்ற குறும் படத்தின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஏவி.எம். பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
இந்தக் குறும்படத்தை வெளியிட்டு பேசிய இயக்குநர் அமீர் பிரதமர் மோடியை பட்டவர்த்தனமாக தாக்கிப் பேசினார்.
அமீர் பேசும்போது, “இந்த நேரத்தில் மத்திய அரசிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்திருப்பதாக தெரிகிறது. அதாவது திருவள்ளுவர், பாரதியார் இருவரின் நூல்களையும் மத்திய அரசு இந்திய அளவிலான பாடத் திட்டத்தில் சேர்க்கப் போவதாக தகவல் வந்திருக்கிறது.
இது ஒருவகையில் நல்ல விஷயம்தான். ஆனால் இதை அரசியலாகத்தான் நான் பார்க்கிறேன். இத்தனை நாளும் வள்ளுவரையும், பாரதியாரையும் மோடி அரசாங்கத்திற்கு தெரியவில்லையா..? இப்போதுதான் தெரிகிறதா..?
இது அடுத்து வரப் போகிற சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தும் செயல். கூடவே, சமஸ்கிருதத்தை இங்கு திணிப்பதற்கு முயலும் மோடி அரசு, அதற்கு ஈடாக திருக்குறள், பாரதியார் பாடல்களை இந்திய அளவிற்கு எடுத்து செல்வதாக பம்மாத்து செய்கிறது. இதை ஒரு போதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
அது போகட்டும். தமிழர் கரண் வாசுதேவன் உருவாக்கி இங்கு திரையிடப்பட்ட குறும் படத்தை பார்த்தேன். குறும் படம் எடுக்க வரும்போது எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற குறும் படங்களை பார்த்து அவர்களுக்கும் நமக்கும் கதை சொல்வதில் எப்படிப்பட்ட வித்தியாசத்தை காட்டியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு குறும் படத்தை எடுத்து விட்டு இங்கேயே தேங்கி விடக்கூடாது. அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்..” என்றார்.
இயக்குநர் அமீர் அடுத்த சட்ட மன்றத் தேர்தலுக்குள் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து விடுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்..!