full screen background image

நடிகர்கள் ஸ்ரீகாந்த்-பரத்-ஷாம் மூவரும் மோதவிருக்கும் ஸ்டார் பேட்மிண்டன்..!

நடிகர்கள் ஸ்ரீகாந்த்-பரத்-ஷாம் மூவரும் மோதவிருக்கும் ஸ்டார் பேட்மிண்டன்..!

நட்சத்திர கிரிக்கெட்டை போலவே அடுத்து பிரபலமாகவிருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன்.

Green Group of Company-யின் ஏற்பாட்டில் SBL எனப்படும் ‘ஸ்டார் பேட்மிண்டன் லீக்’ (Star’s Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  வரும் ஜனவரியில் சென்னை வடபழனி போரம் விஜயா மாலிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதன் அறிமுக விழா சென்னை வடபழனி போரம் விஜயா மாலில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடிகை அனுராதா, அவரது மகள் அபிநய, நடிகர்கள் பானுசந்தர், பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகர் அசோக், ப்ருத்வி, கிரண், முன்னா, அருண், சரண், தருண், பிளேடு சங்கர், ஆரி, சூரி, பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் நிரோஷா, ஜெனீபர், மணிஷா, ஸ்வாதி, அலீஷா அப்துல்லா, சஞ்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, யாஷ்மித், சாரா, பாடகர்கள் நவின், க்ரிஷ் ஐயர் , மற்றும் இசையமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, தரண் குமார் ஆகியோரும் மேடையில் தோன்றி அணிகளை  பாராட்டினர். பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர்.

நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டி ஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அறிமுகம் செய்யப்பட்டது. அணியின் டி ஷர்ட்டையும் நிகழ்ச்சி அமைப்பாளர் கணேஷ் அறிமுகம் செய்தார். தொடர்ந்து இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அணி சென்னை பிளிக்கர்ஸ். இதற்கு நடிகர் ஸ்ரீகாந்த் தலைவராக உள்ளார். இரண்டாவது அணி சென்னை ஸ்மாஷர்ஸ். இந்த அணியின் தலைவர் நடிகர் பரத். மூன்றாவது அணி சென்னை ராக்கெட்ஸ். இந்த அணியின் தலைவர் நடிகர் ஷாம்.

‘சென்னை ஃப்ளிக்கர்ஸ்'(Chennai Flickers)   அணியின் தலைவரான  ஸ்ரீகாந்த்,  ‘என் ப்ரண்டப் போல யாரு மச்சான்’ என்ற பாடலைப் பாடிவிட்டு தன் பேச்சைத் துவக்கினார்.

“இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் கணேஷ், தான் ஒரு செயல் வீரர் என்று நிரூபித்திருக்கிறார். இன்று இந்தியாவில் மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப்படுவது விளையாட்டுதான். எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டுதான். கிரிக்கெட் வளர்ந்துவிட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம்முயற்சி வரவேற்புக்குரியது. இது ஒரு ஆரம்பம்தான். பெரிய கட்டத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்; வளரும்.

மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள்தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும். நட்சத்திரங்களை வைத்து ஸ்டார் நைட் போன்ற விழாக்கள் வைப்பதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும். பேட்மிண்டனில் படார் என்று அடிப்பது ‘பிளிக்’. ஆகவே ஜெயிக்க போவது எங்களுடைய பிளிக்கர்ஸ்தான் அணிதான்..” என்றார் நம்பிக்கையுடன்.

‘சென்னை ஸ்மாஷர்ஸ்'(Chennai  Smashers) உரிமையாளரான நடிகர் பரத் பேசும்போது, “கிரிக்கெட் எனக்குப் புதுதில்லை. ஐந்தாண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித் தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகிவிட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்; ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். என்னதான் ராக்கெட் வைத்து ப்ளிக் அடித்தாலும், கடைசியில் ஸ்மாஷ் அடித்தால்தான் சூப்பர். அதனால் நாங்கள்தான் ஜெயிப்போம்…” என்றார் உறுதியாக.

முன்றாவது அணியான ‘சென்னை ராக்கெட்ஸ்’  (Chennai Racquets) அணித் தலைவரான நடிகர் ஷாம் பேசும்போது, “முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷுக்கு நன்றி. பாராட்டுகள். இவர் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட்டையும் நடத்தினார் கணேஷ்.  சின்னத்திரை நட்சத்திரங்களையும், வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். பாண்டிச்சேரியில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அந்தப் போட்டியை பிரம்மாண்டமாக  நடத்தினார். பிரமாதமான வெற்றியையும் பெற்றார். அதில் வசூலான தொகையை ஒரு தொண்டு நிறுவனத்திற்காக எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால்தான் நாங்கள் மூன்று பேருமே இந்தப் போட்டிக்கு மறுக்காமல் ஒப்புக் கொண்டோம்.

ஏதோ நடித்தோம் போனோம் என்ற இல்லாமல் நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும் என்றுதான்  நான் இதற்கு உடனேயே ஒப்புக் கொண்டேன்.

இதில் ஆடும் எங்களுக்குள் ஈகோ, பொறாமை எல்லாம் கிடையாது மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோம். இதில் விளையாடும்போது வயது குறைந்த உணர்வு ஏற்படும். எங்களுக்குள் இருக்கிற சிறு பையனை வெளிக்கொண்டு வரும் உணர்வுதான் வருகிறது. ராக்கெட் இல்லாமல் ப்ளிக்கோ, ஸ்மாஷோ அடிக்க முடியாது. ஏன்.. ராக்கெட் இல்லாமல் பேட்மிண்டனே இல்லை.. ஆக எங்களது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது… ” என்றார்.

ஆக இந்த நாட்டில் சினிமா நடிகர், நடிகைகளால்தான் விளையாட்டையும் பிரபலப்படுத்த முடியும் போலிருக்கிறது..

Our Score