தோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்

 தோழர் வெங்கடேசன் – சினிமா விமர்சனம்

காலா பிலிம்ஸ் பி லிட் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் மாதவி  அரிசங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அறிமுக  நாயகன்  அரிசங்கர்,  அறிமுக  நாயகி  மோனிகா  சின்னகொட்லா இருவரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வேதா  செல்வம், இசை – சகிஷ்னா, படத் தொகுப்பு – மகாசிவன், ராஜேஷ் கண்ணா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – மகாசிவன்.

எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில் ஏற்படும்  ஒரு  விபத்து,  அவருக்கு எந்தவிதமான  வலிகளை,  வேதனைகளை,  வாழ்க்கை பின்னடைவுகளை  ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘தோழர்  வெங்கடேசன்’.

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டதாக எத்தனையோ பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். “விபத்தில் உயிரிழந்தவர் அல்லது காயம்பட்டவருக்கு நஷ்ட ஈடு கொடுக்காத காரணத்தினால்தான் ஜப்தி” என்பதும் சொல்லப்பட்டிருக்கும்.

சாதாரணமாக இரண்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கும் வலியையும், சுமையையும், வேதனையையும் யார் அறிவார்கள்..? அரசு பேருந்தை ஜப்தி செய்யும் நிலைமைக்கு இன்றைய அரசுகள் நிர்வாகம் செய்யும் லட்சணம் நமக்குத் தெரிந்தும் இப்போதுவரையிலும் அரசுப் போக்குவரத்து கழகங்களின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. அவர்களால் பந்தாடப்படும் ஒரு ஏழை இளைஞனின் கதைதான் இந்தத் திரைப்படம்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வரும் நாயகன் வெங்கடேசன் என்னும் அரிசங்கர் யாரிடமும் கை கட்டி வேலை செய்யக் கூடாது. எப்பாடுபட்டாவது சொந்தக் காலில் நின்று முதலாளியாகவே வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற கொள்கையுடையவர்.

சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்து அனாதையாக வாழ்பவர். ஒரேயொரு ஒண்ணுவிட்ட சித்தப்பா ஒருத்தர்தான் இவருக்குத் துணையாக இருக்கிறார்.

அரிசங்கர் தனது தந்தைவிட்டுச் சென்ற சோடா கம்பெனியை தனி ஆளாக நடத்தி வருகிறார். தினமும் 200 அல்லது 300 ரூபாயை சம்பாத்தியமாகப் பெற்று வரும் இவருக்குப் பெண் கேட்டு நிறைய இடங்களுக்குப் போய் அவமானப்பட்டு திரும்பி வருகிறார்கள் இவரும், இவரது சித்தப்பாவும்.

அவர் வீடு இருக்கும் பகுதியில் இரவு நேர பாஸ்ட் புட் கடையை நடத்தி வருகிறார்கள் ஷர்மிளாவும், அவரது மகளான மோனிகாவும். இவர்களது கடையில்தான் இரவு நேரத்தில் சாப்பிட்டு வருகிறார் அரிசங்கர். ஷர்மிளாவுக்கு தனது மகளை அரிசங்கருக்கு கல்யாணம் செய்து வைக்க விருப்பம். ஆனால் மோனிகாவுக்கு இதில் விருப்பமில்லை.

திடீரென்று ஒரு நாள் ஷர்மிளா மாரடைப்பால் இறந்துவிட மோனிகா அனாதையாகிறார். அன்றைய இரவில் மோனிகா தற்கொலைக்கு முயல.. அவரைக் காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் அரிசங்கர்.

சோடா தொழிலில் மோனிகாவும் உதவி செய்து வரும் நேரத்தில் ஒரு நாள் சாலை விபத்தில் தனது இரு கைகளையும் இழக்கிறார் அரிசங்கர். அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று அவரது கைகளைப் பறித்துச் செல்கிறது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அரிசங்கரை, மோனிகா கவனத்துடன் பார்த்துக் கொள்கிறார். நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் படியேறுகிறார் அரிசங்கர். வாய்தா மேல் வாய்தா போட்டு வழக்கை இழுத்தடிக்கிறார்கள் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள். கடைசியாக அரிசங்கருக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

இந்த உத்தரவையும் செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறார்கள் அதிகாரிகள். இதனால் நீதிமன்றம் ஒரு அரசுப் பேருந்தை ஜப்தி செய்து அரிசங்கரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடுகிறது. இதன்படி ஒரு அரசுப் பேருந்து அரிசங்கரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த பேருந்தை தனது வீட்டின் அருகில் நிறுத்தியிருக்கும் அரிசங்கருக்கு பலவித பிரச்சினைகள் எழுகிறது. திடீரென்று பேருந்தே காணாமல் போகிறது.. போலீஸில் புகார் கொடுத்துத் தேட ஆரம்பிக்கிறார்.

இந்தப் பேருந்து கிடைத்தால்தான் அரசின் நஷ்டஈட்டுத் தொகை அரிசங்கருக்குத் தரப்படும் என்பது விதிமுறை என்பதால் பேருந்தை வலைவீசித் தேடுகிறார் அரிசங்கர். இதன் பின்பு என்னாகிறது என்பதுதான் மீதிக் கதை.

அறிமுக நாயகனான அரிசங்கர் பரிதாபமான முகத்துக்கு பொருத்தமான நடிகராக இருக்கிறார். இதற்கு அவருடைய எளிய குடியானவனின் குரலும் இதற்காக பெரிதும் ஒத்துழைத்திருக்கிறது.

வக்கீலிடம் கெஞ்சி, வட்டிக்குப் பணம் கொடுத்தவரிடம் கெஞ்சி, போலீஸ் அதிகாரிகளிடம் அடி வாங்கி, மிதி வாங்கி, அங்கேயும் பிச்சையெடுத்து கெஞ்சி, வக்கீலிடம் கெஞ்சி, நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மன்றாடி.. தனது அக்கம்பக்கத்தினரிடம் போராடி.. பாதுகாப்புக்கு வரும் போலீஸின் மல்லுக்கட்டை சமாளித்து.. ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கையை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் அரிசங்கர்.

தனது கைகளை இழந்த நிலையில், “என்னை ஏன் காப்பாத்துனீங்க..?” என்று மருத்துவமனையில் கதறினாலும் வீட்டுக்கு வந்த பின்பு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வாழ்க்கையின் போக்கில் வாழக் கற்றுக் கொள்ளும் தைரியத்துடன் இருக்கும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்ப்..!

நாயகி மோனிகாவை வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றினாலும் அவரை மனைவியாக்க முயலாமல் முதலில் சம்பாத்தியம்.. பின்பே கல்யாணம் என்பதில் உறுதியாய் இருக்கும் இவரது கொள்கைதான் கொஞ்சம் இடிக்கிறது.

“என்ன வோய்” என்று காஞ்சிபுரம் வட்டார வழக்கில் ஆரம்பித்து.. தனது நண்பர்களிடத்தில் தான் ஒரு முதலாளி என்று சொல்லி பெருமைப்படும் அரிசங்கரின் நடிப்பு கவர்கிறது.

நாயகி மோனிகாவுக்கு முதல் படம் என்றாலும், தெலுங்கு பேசும் பெண் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சில் பெரிய அளவுக்கான நடிப்பை தன் தோளில் சுமந்திருக்கிறார். வருங்கால கணவனுக்காக சோடா கம்பெனியில் உழைத்து, சைக்கிளில் ஊரையே சுற்றி வந்து வியாபாரம் செய்யும் ஒரு இளம் பெண்ணின் கேரக்டரில் குறையில்லாமல் நடித்திருக்கிறார் மோனிகா. சின்னச் சின்ன ஆக்சன்களில் பெரிதும் ரசிக்கும் அளவுக்கு தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார் மோனிகா.

இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் காமெடியை ஏற்றி விட்டிருக்கிறார் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் திலீபன். பேருந்தின் பாதுகாப்புக்காக வந்தவர் செய்யும் அட்டூழியங்கள் கலகலப்பு.. திலீபனுக்கு பெயர் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது.

ஆர்ப்பாட்டமில்லாத உண்மையான வழக்கறிஞராக இயக்குநர்  அமுதேஸ்வர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஊருக்கு இவரைப் போன்ற சில உண்மையான வழக்கறிஞர்கள் இருந்தால் நல்லது என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது இவரது நடிப்பு.

ஒளிப்பதிவும், இசையும் பட்ஜெட் படத்திற்கேற்றபடியே அமைந்திருக்கின்றன. காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் அழகாகக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல்கள் பரவாயில்லை ரகம். முணுமுணுக்க வைக்கவில்லை என்பதை குற்றச்சாட்டாகவே சொல்லலாம்.  

மிக யதார்த்தமான வசனங்கள். காட்சியமைப்புகள்.. திரைக்கதை.. என்று படத்தில் பட்ஜெட் மட்டுமே குறைவு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மகாசிவன்.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்தை மறுநாளை பேருந்து நிலையத்திற்கு ஓட்டிச் சென்று அங்கே நிறுத்தி டிக்கெட் போட்டு பேருந்தை ஓட்ட நினைக்கும் அப்பாவித்தனம்.. இதைத் தொடர்ந்து இந்த டிரைவருடன் நாயகனுக்கு நடக்கும் மல்லுக்கட்டு என்று இடைவேளைக்கு பின்பு காட்சிகளை நகைச்சுவையாகவே நகர்த்தியிருக்கிறார்கள்.

கிளைமாக்ஸில் தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தைத் தொடர்புபடுத்தி பார்ப்பதுபோல காட்சியமைத்து முடித்திருப்பது ஒன்றுதான் கதையுடன் ஒன்றவில்லை. இத்தனை தூரம் கஷ்டப்பட்டவர்களை வாழ வைத்திருக்கலாம். பிரச்சினை பேருந்தில் துவங்கி, பேருந்தினாலேயே மாய்கிறார்கள் என்று முடித்திருப்பது சினிமாத்தனமாக இருக்கிறது.

நீதிமன்றத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடிக்கும் ஊழல்கள்.. தினமும் 8 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்திலேயே இன்னமும் கழகத்தை நடத்தி வரும் முட்டாள் அரசுகள்.. டயரில் இருந்து போல்டு, நட்டுவரையிலும் அங்கே நடக்கும் ஊழல்கள் என்று அனைத்தையும் வசனத்தில் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் மகாசிவன்.

அதோடு படத்தின் முடிவில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மோதி காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் பேட்டியையும் ஒளிபரப்பி இந்த அரசுகள் இப்போதுவரையிலும் இழப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடிக்கும் கொடுமையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்கு ஒரு சல்யூட்.

“தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்” என்பார்கள். அதையே இந்தப் படத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஒரு சாமான்யன் தனக்கு வேண்டிய நீதிக்காக இந்த நாட்டில் எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசும் ஒரு விஷயத்துக்காகவே இந்தப் படம் பாராட்டப்பட வேண்டியதாகிறது. படக் குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

‘தோழர் வெங்கடேசனை’ நாம் அனைவரும் சென்று பார்த்து வாழ்த்த வேண்டும்.

Our Score