full screen background image

“என் படத்தைத் தயாரிப்பாளரே சிதைத்துவிட்டார்..” – ‘தொப்பி’ படத்தின் இயக்குநர் யுரேகா கண்ணீர் புகார்..!

“என் படத்தைத் தயாரிப்பாளரே சிதைத்துவிட்டார்..” – ‘தொப்பி’ படத்தின் இயக்குநர் யுரேகா கண்ணீர் புகார்..!

தன்னிடம் சொல்லாமல் ‘தொப்பி’ படத்தில் 15 நிமிட காட்சிகளை படத்தின் தயாரிப்பாளரே தாறுமாறாக நீக்கம் செய்து தனது ‘தொப்பி’ படத்தை சிதைத்துவிட்டார் என்று இந்தப் படத்தின் இயக்குநர் யுரேகா குற்றம்சாட்டியுள்ளார்.

Thoppi-Poster-1

இன்று மதியம் நுங்கம்பாக்கம் போர் பிரேம்ஸ் தியேட்டரில் ‘தொப்பி’ படத்தின் பத்திரிகையாளர் காட்சி காண்பிக்கப்பட்டது. படத்தின் இடைவேளையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய படத்தின் இயக்குநர் யுரேகா, படம் பற்றிய அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தார்.

“படம் 2 மணி 30 நிமிடம் உள்ளது. ஆனால் படத்தின் ஓட்டம், சுவையான திரைக்கதையினால் நேரம் போவதே தெரியாத அளவுக்குத்தான் உள்ளது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எனக்கே தெரியாமல் நீளத்தைக் குறைக்க வேண்டும் என்று நினைத்து படத்தில் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் தாறுமாறாக கத்தரித்துவிட்டதால் படம் கந்தர கோலமாகிவிட்டது.

இன்று காலையில் நான் படத்தின் ரிசல்ட் பற்றி தெரிந்து கொள்வதற்காக ‘உதயம்’ தியேட்டருக்கு சென்றிருந்தபோது படம் முடிந்து வந்த ரசிகர்கள் ‘படம் புரியவில்லை.. குழப்பமாக இருக்கிறது..’ என்றெல்லாம் பதில் சொன்னார்கள். பல நாட்கள் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை படமாக்கியிருக்கிறேன். கடைசி நேரத்தில் படத்தின் தயாரிப்பாளரே இப்படி செய்வார் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.

பத்திரிகையாளராகிய நீங்கள் இப்போது தொடர்ந்து படத்தைப் பார்க்கப் போகிறீர்கள். பாருங்கள். என் படம் எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். இதனைத் தெரிந்து கொண்டு தயவு செய்து இதனை பற்றிய செய்தியை வெளியிட்டு படத்தைக் காப்பாற்றுங்கள்..” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் யுரேகா சொன்னது போலவேதான் படத்தின் முடிவும் இருந்தது. சுமார் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதால் படம் முழுமையாக இல்லை. கதையின் முடிச்சு என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.. விமர்சனமாக எழுதினால்கூட முக்கால்வாசி மட்டுமே எழுத முடியும். அந்த அளவுக்கு அலங்கோலமாக கத்திரி போட்டிருக்கிறார் தயாரிப்பாளர்.

2 மணி 30 நிமிடம் என்று சென்சார் சர்டிபிகேட் பெற்றிருந்தாலும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று இயக்குநரிடமே சொல்லியிருந்தால், அவரே படம் கெடாத அளவுக்கு சில காட்சிகளைக் குறைத்துக் கொடுத்திருப்பார். அதைவிட்டுவிட்டு தயாரிப்பாளரே செய்தது  முட்டாள்தனமானது.

ஒரு திரைப்படத்தின் சொத்துரிமை தயாரிப்பாளருக்குத்தான் முழுமையானது என்றாலும், அதன் படைப்பாக்கம் இயக்குநருக்கானது. படம் தோல்வியடைந்தாலோ, படம் முழுமையாக இல்லை என்று குற்றச்சாட்டு வந்தாலோ பதில் சொல்ல வேண்டியது இயக்குநரின் கடமை.  இது இயக்குநரின் வாழ்க்கை பிரச்சினை மட்டுமல்ல.. அவரது இயக்கத் திறமை மீதான நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினையும்கூட..

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். தான் பெற்ற பிள்ளையை தானே கொலை செய்தமைக்குச் சமமானது இந்தச் செயல். வன்மையாகக் கண்டிக்கிறோம்..

Our Score