நடிகை தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திறந்திடு சீசே’ திரைப்படம் நாளை (22/05/15)வெளியாகிறது.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளவர் இயக்குநர் ஷங்கரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய நிமேஷ் வர்ஷன்.
இத்திரைப்படத்தில் நடிகை தன்ஷிகா மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் தனது பங்களிப்பு பற்றி தன்ஷிகா பேசுகையில், “உண்மைச் சம்பவங்களை அடிப்படியாக கொண்டு அமைத்திருந்த இந்தப் படத்தின் கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
இதில் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியுமா என்ற ஐயமும் எனக்குள் இருந்தது உண்மைதான். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் இப்போ என்னை பாராட்டுவது பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும், அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது.
குடிப் பழக்கம், பாலியல் வன்கொடுமை என சமூக அவலங்களுக்கு எதிராக கருத்தமைப்பு கொண்ட ஒரு திரைப்படம் ‘திறந்திடு சீசே.’ இது குடும்பங்களுக்கான படம். சமூதாய நோக்குடன் திரைப்படத்தை தயாரித்திருக்கும் இந்த கூட்டணியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது..” என்றார்.