full screen background image

தெனாலிராமன் கற்பனைக் கதையே-தயாரிப்பாளர்கள் அறிக்கை..!

தெனாலிராமன் கற்பனைக் கதையே-தயாரிப்பாளர்கள் அறிக்கை..!

வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரைக்கு வரக் காத்திருக்கும் வைகைப் புயல் வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ திரைப்படத்திற்கு தெலுங்கு மக்கள் அமைப்பினர் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திராவில் கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையில் மதியூகி அமைச்சராக இருந்த ‘தெனாலிராமன்’ பற்றிய கதைகள் அங்கே ரொம்பவே பிரபலம். அதேபோல் கிருஷ்ணதேவராயரும் நம்மூர் ராஜராஜசோழனை போல அவ்வளவு பிரசித்தம். பல மாவட்டங்களில் தெய்வமாக வழிபாடுகிறார்கள்.

அப்பேர்ப்பட்ட இருவரையும் வடிவேலு இரட்டை வேடம் பூண்டு தமிழ்ச் சினிமா பாணியில் கலாய்த்திருப்பதை ஏற்க முடியாது என்று தெலுங்கு அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பாக தமிழகத் தலைமைச் செயலாளரை சந்தித்த தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பினர் இப்படத்திற்கு எதிராக மனு அளித்துள்ளனர்.

அதில், “தற்போது தமிழகத்தில் 2 கோடி தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர். தற்போது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலம் எங்களது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன.

16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் என்ற ராஜாவின் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். சிறந்த அரசாட்சியையும், நிர்வாகத்தையும் வழங்கி, திராவிட மொழிகளை ஆதரித்த அரசனை நகைச்சுவை வேடத்தில் பயன்படுத்துவது, அவரை அவமதிப்பதாகும்.

கிருஷ்ண தேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பதாக படத்தில் காட்டுகின்றனர். ஆனால் அவருக்கு உண்மையில் அவ்வளவு மனைவி, குழந்தைகள் இருந்ததில்லை. ஆனால் கிருஷ்ண தேவராயர் பற்றிய படம் இதுவல்ல என்று தயாரிப்பாளர்களின் தரப்பு மறுக்கிறது. வரலாற்று சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தால், அந்த படம் அவரைத்தான் சுட்டிக் காட்டுகிறது என்பது புரியும்.

எனவே எங்கள் சந்தேகம் தீர்க்கப்படும் வகையில், தெனாலிராமன் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு, வரலாற்று ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பினரை கொண்ட குழு, அந்த படத்தை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதன் பின்னர், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும். அந்த இரண்டு பேரின் வேடமும் திரைப்படம் முழுவதும் தொடருமானால், முழு படத்தையும் திரையிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் சுயமரியாதை கேள்விக்குரியதாகிவிடும்…” என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்தப் படம் மிகப் பெரிய பட்ஜெட் என்பதால் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிடலாம் என்கிற விருப்பத்தில் இருந்த தயாரிப்பாளர்களுக்கு இந்த எதிர்ப்பு மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில் ‘தெனாலிராமன்’ படத்தின் தயாரிப்பாளர்கள் இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

“இத்திரைப்படம் ‘தெனாலிராமன்’ மற்றும் இன்ன பிற நீதிக் கதைகளைத் தழுவிய ஒரு கற்பனைக் கதை. இப்படம் தெனாலிராமனின் பற்றிய வாழ்க்கையையோ, அல்லது  அவர் சம்பந்தப்பட்ட முக்கியப் பிரமுகர்களின் வரலாற்றையோ பதிவு செய்யும் படமல்ல. கி.பி. 15-ம் நூற்றாண்டில் நடைபெற்ற வாழ்க்கை முறையைப் பின்புலமாகக் கொண்டு தற்காலிக நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு புனைவுக் கதை.

இத்திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே. பெயர்களும், சம்பவங்களும் எவரையும் குறிப்பி்ட்டு அமைக்கவில்லை. அப்படி ஒத்திருந்தாலும் அது தற்செயலே..”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

டிரெயிலரிலேயே இது ‘தெனாலிராமனின்’ கதை என்றே தெரிகிறது. அப்படியானால் ‘தெனாலிராமன்’ அமைச்சராக இருக்கும் அமைச்சரவை கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையாகத்தானே இருக்க முடியும். அரசராக வீற்றிருப்பவரும் கிருஷ்ணதேவராயர்தானே.. பின்பு எப்படி இல்லை என்று மறுக்க முடியும் என்று எதிர்க்குரலை எழுப்புகிறார்கள் தெலுங்கு அமைப்பினர்.

நாடு போகிற போக்கைப் பார்த்தால்… இங்கே.. கோடம்பாக்கத்தில் பிட்டு படங்களை மட்டுமே சங்கடமில்லாமல், எதிர்ப்பில்லாமல் எடுக்க முடியும் போலிருக்கிறது..!

Our Score