தமிழகத்தின் அனைத்து முக்கியக் கட்சிகள், தலைவர்கள், அமைச்சர்கள், தமிழக அரசு இவற்றின் எதிர்ப்பையும் மீறி ‘தி பேமிலி மேன்-2’ தொடர் அமேஸான் பிரைம் தளத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்ப்புகள் வருகிறதோ அது அந்தப் படத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் விளம்பரம் என்பார்கள். அது இந்த ‘தி பேமிலி மேன்’ தொடருக்கும் கிடைத்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக அமேஸான் தளத்தில் அதிகம் பார்க்கப்படும் இணையத் தொடராக ‘தி பேமிலி மேன்’ வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டது.
அமேஸான் என்பது உலகம் தழுவிய நிறுவனம் என்பதாலும், இது தொலைக்காட்சியாக இல்லாமல் ஓடிடி தளமாக இருப்பதினாலும் தங்களுடைய எதிர்ப்பை எப்படி காட்டுவது என்பது எதிர்ப்பாளர்களுக்கே தெரியவில்லை.
முடிந்த அளவுக்கு அமேஸான் தளத்தின் சந்தாதாரர் பட்டியலில் இருந்து தமிழர்கள் அனைவரும் விலக வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இவர்களால் வைக்க முடிந்திருக்கிறது. இதையும் தங்களுக்குக் கிடைத்த விளம்பரமாக அந்த நிறுவனம் எடுத்துக் கொண்டதுதான் இதில் நகைச்சுவையான ஒரு விஷயம்.
“இப்போது இந்த ‘தி பேமிலி மேன்-2’ தொடரை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன்-2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும். தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும்கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.
அறமும், வீரமும், தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் இத்தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தொடரை உடனேயே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்.
இத்தொடர் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இன மக்களுக்கு எதிரான மன நிலையோடு உருவாக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவீர்கள்.
‘தி பேமிலி மேன்-2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் இத்திரைப்படம் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்பதையும் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்…” என்று அந்த அறிக்கையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.