இந்தப் படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லஷ்மி, ஜோஷப் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி, ரோமன் ஃபியோரி, சவுந்தர்ராஜா, துரை ராமச்சந்திரன், மாஸ்டர் அஷ்வத் ஆகியோர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ், இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பு : விவேக் ஹர்ஷன்.
தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்கு கொள்ளும், லோக்கல் கேங்ஸ்டர் சுருளியின் மிகப் பெரிய பயணத்தை சொல்கிறது இந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில், ரசிகர்களை மயக்கும் அற்புத பாடல் தொகுப்பினை கொண்டுள்ளது, இந்த திரைப்படம்.
இந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் வெவ்வேறு காலக்கட்டங்களின் பின்னணியில் அமைந்ததுபோல 8 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இப்படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ‘ரகிட ரகிட’ பாடல் மொத்த தேசத்தையும் கட்டிப் போட்டு, அனைவரையும் முணுமுணுக்க வைத்த நிலையில், சமீபத்தில் வெளியான ‘நேத்து’ என்னும் பாடல், காதலர்களின் கீதமாக ரொமான்டிக் மெலடியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்படத்தில் மொத்தமாக இதே போல் தனித்தன்மை மிக்க சிறப்பு மிக்க பாடல்கள் உள்ளன.
இந்த இசை வெளியீடு குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் பேசும்போது, “இப்படத்தின் ஒவ்வொரு பாடலையும், ஸ்டுடியோவில் மிகப் பெரும் உழைப்பில், அதிக நேரத்தை செலவளித்து உருவாக்கினோம். இசையில் நான் நினைத்த பல விசயங்களை செய்து பார்க்கும் சுதந்திரம், இப்படத்தில் கிடைத்தது. இப்படத்தின் பாடல் உருவாக்கம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான ‘ரகிட ரகிட’ மற்றும் ‘புஜ்ஜி’ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், ரசிகர்கள் இப்போது மொத்த ஆல்பத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.
‘ரகிட ரகிட’ பாடல் வெளியானபோது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இப்போது மொத்த ஆல்பமும் வெளிவரும் நிலையில் மற்ற பாடல்களையும் அதே போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
எதிர்பார்ப்புமிக்க இந்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.