full screen background image

‘விஸ்வாசம்’ கன்னட டப்பிங் பதிப்பின் விநியோகஸ்தர் ஷேர் வெறும் 5,000 ரூபாய்தானாம்..!

‘விஸ்வாசம்’ கன்னட டப்பிங் பதிப்பின் விநியோகஸ்தர் ஷேர் வெறும் 5,000 ரூபாய்தானாம்..!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான அருள் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் லெஜண்ட்’ படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படம் கர்நாடகாவில் தமிழ்ப் படமாகவே வெளியாகிறது. அதே நேரம் மலையாளத்திலும், ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதையொட்டி பெங்களூரில் நேற்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் இந்தப் படத்தை கர்நாடகாவில் விநியோகம் செய்யும் விநியோகஸ்தரிடம் பத்திரிகையாளர்கள் சராமரியாக கேள்வியெழுப்பினார்கள்.

“பெங்களூரில், சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே கன்னடத்தைத் தவிர எல்லா மொழிகளிலும் வெளியாகியுள்ளன. கன்னட மக்கள் நாங்கள் என்ன பாவம் செஞ்சோம்..? எங்க ஊர்ல.. எங்க மக்கள்.. அவங்க மொழியில பார்க்குற மாதிரி நீங்க ஏன் வேற்று மொழிப் படங்களை கன்னடத்துல டப்பிங் பண்ணி வெளியிடுவதில்லை?” என ஒரு பத்திரிகையாளர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த விநியோகஸ்தர், “கன்னட மொழியில் படங்கள் வெளியிடக் கூடாது என்றெல்லாம் இல்லை. ஆனால், மற்ற மொழிகளில் கவனம் செலுத்துவதைப்போல கன்னடத்தில் வெளியிட நாங்களும் கவனம் செலுத்திதான் வருகிறோம். ஆனால் மக்கள்தான் அது மாதிரியான டப்பிங் படங்களை வரவேற்பது இல்லை. அவர்களுக்கு ஒரிஜினலில்தான் படம் பார்க்கப் பிடிக்கிறது..” என்றார்.

ஆனாலும் பத்திரிகையாளர்கள் விடவில்லை. “யார் சொன்னது? எத்தனை தியேட்டர்களில் எத்தனை டப்பிங் படங்களை வெளியிட்டீர்கள்? நீங்கள் கன்னட மொழியில் டப்பிங் செய்து படங்களை வெளியிடுவது ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டும்தான். அது வெறும் கண் துடைப்பிற்காக.. ஆனால் பரவலாக நீங்கள் தமிழில், தெலுங்கில், ஹிந்தியில்தான் வெளியிடுகிறீர்களே தவிர, கன்னடாவை நீங்கள் இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கிறீர்கள்.. இது முற்றிலும் தவறு…” என்று ஒரு நிருபர் கோபமாய் கேள்வி கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அந்த விநியோகஸ்தர், “விஸ்வாசம் படம் தமிழில் பெரும் வெற்றியடைந்த படம். இந்தப் படத்தை கன்னட மக்களுக்காக ஜக மல்லா’ என்ற பெயரில் டப்பிங் செய்து ஐம்பது ஸ்கிரீன்களில் வெளியிட்டோம். ஆனால், எங்களுக்கு ஷேராக கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா..? வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான். அதனால்தான் இப்போது யோசிக்கிறோம்.

எப்படி ‘K.G.F.’ என ஒரு கன்னடப் படம் வெளியாகி உலகெங்கும் பரவலான கவனம் பெற்றதோ, அதே போல மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களும் விரைவில் கன்னடத்தில் கவனம் பெறும் காலமும் வரும்..” என்றார்.

Our Score