சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான அருள் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் ‘லெஜண்ட்’ படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படம் தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும், கூடுதலாக ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இதையொட்டி பெங்களூரில் நேற்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பில் நாயகன் அருள் சரவணனிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
அண்ணாச்சியிடம் பல கேள்விகள் கேட்டாலும், சில கேள்விகளும் அவர் பதிலும் நச்சென இருந்தது.
“இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள்..? லேட்டாக வந்திருக்கிறோமே என வருத்தமாக இல்லையா?” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அருள் சரவணன், “ஏன் அமிதாப்பச்சனே இன்னும் நடிக்கிறாரே… ரஜினி, கமல், சரத் எல்லோரு என்னைவிட பல மடங்கு வயதானவர்கள். அவர்கள் எல்லோரும் இன்னமும் நடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்விகளை நீங்கள் கேட்பீர்களா…?” என்று எதிர்க் கேள்வி கேட்டார்.
“இல்ல.. நீங்க சீக்கிரமா முன்னாடியே வந்திருக்கலாமே?!!” என்று ஒரு நிருபர் கேட்க, “எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமா ஒரு பெருங்கனவு. ஆனால் அதை அடைய சினிமாவுக்கு வெளியே வியாபாரத்தில் பெரியதாய் உழைக்க வேண்டியிருந்தது. வியாபாரத்தில் ஒரு இடத்தை பிடித்த பின்பே எனக்கான கனவை நோக்கி நான் வர வேண்டும் என்று நினைத்தேன்.. அதற்கான நேரம் இப்போதுதான் கிடைத்துள்ளது.
மேலும் சினிமா என்பது கலைதான் என்றாலும் அது ஒரு பெரும் வணிகம். அந்த வணிகத்தில்கூட என்னை சரியாக நிலை நிறுத்திக் கொள்ள பெரும் திட்டமிடலும், கமர்ஷியலான கதையும் தேவையாக இருந்தது. அது இப்போதுதான் சரி வர அமைந்தது…” என்றார் அருள் சரவணன்.