full screen background image

மஹாவீர்யர் – சினிமா விமர்சனம்

மஹாவீர்யர் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தைப் பாலி ஜூனியர் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் நிவின் பாலி, இந்தியன் மூவி மேக்கர்ஸுடன் இணைந்து தயாரித்துள்ளார். பி.எஸ்.ஷாம்னாஷும், இயக்குநர் அப்ரீட் ஷைனும் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆசிப் அலி, லால், ஷான்வி ஸ்ரீவத்ஸா, லாலு அலெக்ஸ், சித்திக், விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கராமானா, கிருஷ்ண பிரசாத், சூரஜ் எஸ். க்ரூப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இஷான் சாப்ரா இசையமைக்க, சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக மனோஜும், கலை இயக்குநராக அனீஸ் நாடோடியும் பணியாற்றியுள்ளனர். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் முதலிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய சந்திரகாந்த் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எழுத்தாளர் M. முகுந்தனின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அப்ரீட் ஷைன்.

நிவின் பாலியை நாயகனாக வைத்து, இயக்குநர் அப்ரீட் ஷைன் இயக்கும் மூன்றாவது படமாகும் இது. 2014-ல் வெளிவந்த அப்ரீட் ஷைனின் முதற்படமான ‘1983’, ஒரு ஸ்போர்ட்ஸ் படம்; 2016-ல் வெளியான இரண்டாவது படமான ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு’, காவல் நிலையத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை எதார்த்தமாகக் காட்டிய படம்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், நிவின் பாலியுடன் மீண்டும் இணைந்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு ஃபேன்டசி படத்தைக் கொடுத்துள்ளார் அப்ரீட் ஷைன்.

மனோமாயா எனும் ராஜ்ஜியத்திற்கு ஸ்ரீருத்ர மகாவீர அக்ரசேனா என்பவர் மகாராஜாவாக உள்ளார். இரண்டாயிரம் மனைவிகளையுடைய மகாராஜாவிற்கு, எந்த வைத்தியராலும் குணப்படுத்த முடியாத தொடர் விக்கல் பிரச்சனை எழுகிறது. அந்த நிலையிலும், தனது தளபதி வீரபத்திரனை அழைத்து, ராஜ்ஜியத்திலேயே அழகான பெண்ணை அழைத்து வரும்படி கட்டளையிடுகிறார். நானூறு கிராமங்கள் தாண்டி, நான்கு மலைத் தொடர்களும் மூன்று ஆறுகளும் கடந்து, சித்திரபுரி எனும் கிராமத்திற்கு வருகிறார் வீரபத்திரன்.

காட்சிகளும், காலங்களும் மாறுகின்றன. அபூர்ணாநந்தன் எனும் துறவி ஒரு கிராமத்தின் மரத்தடியில் அமர்ந்துள்ளார். அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலின் விக்கிரகம் காணாமல் போக, அது துறவியின் பையில் கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்படுகிறார்.

அபூர்ணாநந்தன் தன் மேல் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை அவரே வாதாடுகிறார். அவருக்கெதிராக வாக்குமூலம் அளிக்கும் சாட்சியங்களை மிகச் சாதுரியமாகவும், ஐபிசி பிரிவுகளைச் சுட்டிக் காட்டியும் தற்காத்துக் கொள்கிறார். தான் சிலையைத் திருடியதையும் கண்டவர்களில்லை, சிலையிலும் தன் கைரேகையில்லை என காவல் துறை அதிகாரியையே சொல்ல வைக்கிறார் அபூர்ணாநந்தன்.

படத்தின் இடைவேளைக்குப் பின், ஸ்ரீருத்ர மகாவீர அக்ரசேனா, தளபதி வீரபத்திரன், தளபதியால் கவர்ந்து செல்லப்படும் தேவயானி, தேவயானியின் தந்தை, சித்திரபுரி பாடகன், மகாராஜாவிற்கு மயிற்பீலி வீசும் பெண்கள் நீதிமன்றத்துக்குள் வருகின்றனர்.

சமகால நீதி விசாரணைக்கு மகாராஜா ஒப்புக் கொள்ள, தேவயானியின் தந்தை, தளபதி தன் மகளைக் கவர்ந்து சென்றதாகப் புகார் அளிக்கிறார். தளபதி, மகாராஜா என அனைவரும் தன் தரப்பை நீதிமன்றத்தில் வைக்கின்றனர்.

மகாராஜாவால் தவறோ, குற்றமோ இழைக்க முடியாது என்ற ராஜநியதியைச் சுட்டிக் காட்டுகிறார் மகாராஜாவின் சார்பாக வாதாடும் வக்கீல். நீதிபதி, மெதுவாக மகாராஜாவின் கையாளாக மாறுகிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களையும், ஆள்வோருக்குச் சாதகமாக நீதித்துறை வளைந்து கொடுக்கும் போக்கையும் நயமாக கிண்டல் செய்கிறார் அப்ரீட் ஷைன்.

படத்தின் இரண்டாம் பாதியில், மகாராஜாவின் வழக்கு நிகழ்பெறும் போது நிவின் பாலி ஒரு பார்வையாளராக ஒதுங்கியே நிற்கிறார். அதாவது, அவரைக் காலத்தின் குறியீடாகச் சித்தரிக்கிறார் இயக்குநர்.

மன்னர் காலத்தில் இருந்து, தற்காலத்திற்குக் கதை நகரும்பொழுது, அபூர்ணாநந்தனை ஒரு காலவெளியற்ற ஒரு வித்தியாசமான நிலப் பகுதியில் இருப்பதுபோல் காட்டுகின்றனர். அவருக்கு எல்லாம் தெரியும், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனப் புரிந்து கொள்ளலாம்.

அபூர்ணாநந்தனாக நிவின் பாலியும், ஸ்ரீருத்ர மகாவீர அக்ரசேனா மகாராஜாவாக லாலும், தளபதி வீரபத்திரனாக ஆசிப் அலியும், தேவயானியாக ஷான்வி ஸ்ரீவத்ஸாவும், நீதிபதியாக சித்திக்கும், அரசு தரப்பு வழக்கறிஞராக லாலு அலெக்ஸும் நடித்துள்ளனர். முழுமையாக டீட்டெயிலிங் செய்யப்படாததால், எந்தக் கதாபாத்திரமும் மனதில் பதியாமல் போகின்றனர்.

படத்தின் முதற்பாதியைக் கலகலப்பாகக் கொண்டு போயுள்ளனர். நீதிமன்றத்தில் நடக்கும் இன்ன பிற வழக்குகள், நிவின் பாலியின் வாதங்கள் என மென நகைச்சுவை இழையோடுகிறது.

இரண்டாம் பாதி அதற்கு மாறாக, ஃபேன்டசி கலந்து பிரமிப்பில் ஆழ்த்துகிறது. தேவயானியாக நடித்துள்ள ஷான்வி ஸ்ரீவத்ஸா, மெழுகு பொம்மை போல் அறிமுகமாகி மெதுமெதுவாகப் படம் முடிவின் தருவாயில் தன் நடிப்பால் ஈர்த்துவிடுகிறார்.

ஜடாமுடியுடைய சாமியார் வேஷத்திற்குக் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் நிவின் பாலி. மந்தகாசமான புன்னகையுடன் அவர் தனக்காக வாதாடிக் கொள்ளும் காட்சிகளே அதற்கு சான்று. மிகவும் விறைப்புடன், மறந்தும் புன்னகைத்துவிடாத தளபதி பாத்திரத்தில் மிகவும் இறுக்கமான முகத்துடன் வந்து செல்கிறார் ஆசிப் அலி. நீதிபதியாக வரும் சித்திக்கின் அனுபவம் அவரது நடிப்பில் தெரிகிறது. மகாராஜாவான லாலிற்கும், வழக்கறிஞரான லாலு அலெக்ஸ்க்கும் அவர்கள் நடிப்பிற்குத் தீனி போடுமளவு காட்சிகள் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.

டைம் ட்ராவல், ஃபேன்டசி, கோர்ட் டிராமா எனக் கலந்து கட்டி புதிய முயற்சியைத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்ரீட் ஷைன். இயக்குநருக்கும், இயக்குநருக்கு உறுதுணையாக இம்முயற்சிக்குக் கை கொடுத்த தயாரிப்பாளரும் நடிகருமான நிவின் பாலிக்கு வாழ்த்துகள்.

RATINGS : 3 / 5

Our Score