full screen background image

தரைப்படை – சினிமா விமர்சனம்

தரைப்படை – சினிமா விமர்சனம்

ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.B.வேல்முருகன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில்  ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக சாய் தன்யா, மோகனா, ஷாலினி என்ற மூன்று புதுமுக கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குநர் ராம் பிரபா இயக்கியுள்ளார். இயக்குநர் ராம்பிரபாவுடன் சுரேஷ்குமார் சுந்தரம், மனோஜ் குமார் பாபு, ராம்நாத், ரவீந்திரன்,  மிரட்டல் செல்வா, S.V.ஜாய்மதி, ராக் சங்கர், சரண் பாஸ்கர், ராஜன் ரீ,குருதர்ஷன், மேகமூட்டம் வைத்தி, நித்திஷ் ஸ்ரீராம், பவிஷி பாலன், ஸ்ரீசாய் ஸ்டுடியோ, வெங்கட் எனப் பல்வேறு  திறமைசாலிகளுடன் கூட்டணி சேர்த்துக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு கேங்ஸ்டர் சம்பந்தமான கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல் மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து இந்த கேங்ஸ்டர் கும்பல் அந்தப் பணத்தைக் கைப்பற்றுகிறது.

இப்படி அந்தப் பணம் மாறி, மாறி மனிதர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இறுதியில் எங்கே செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பயணம் நிகழ்கிறது.

ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார்? வில்லன் யார்? என்று தெரிந்துவிடும். அப்படி வழக்கமான அதே வார்ப்பில்தான் எல்லா திரைப்படக் கதைகளும் அமைக்கப்படுகின்றன. படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் இவர் ஹீரோ, இவர் வில்லன்  என்று படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே தெரிந்துவிடும்.

ஆனால் ஒரு கதையில் யார் கதாநாயகன்? யார் வில்லன்? என்று தெரியாத வகையில் அந்தந்த கதாபாத்திரத்தின் கறுப்பு, வெள்ளைப் பக்கங்களைப் புரட்டிக் காட்டப்படுகின்றன. ரசிகர்களுக்கு யார் நேர்நிலை நாயகன்..? யார் எதிர்மறை நாயகன்..? என்பது புரியாது. அப்படி ஒரு கதையில்தான் இந்த தரைப்படைபடமும் உருவாகியுள்ளது.

படத்தின் கதையையும், காட்சிகளையும் பார்க்கும்போது யார் நல்லவன்..? யார் கெட்டவன்?.. என்று தெரியாத வகையில் விறுவிறுப்புடன் இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை, மொழியைத் தாண்டி ரசிக்கப்படும் என்பதால் தமிழ் மட்டுமல்ல; தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரு பான் இந்தியா படமாக இது வெளியாகியுள்ளது.

டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி பணம் தருவதாக சொல்லி நிறைய பணத்தை வசூலித்து விட்டு இரவோடு, இரவாக கம்பெனியை மூடி விட்டுப் போகும் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பற்றிய கதையை தினமும் நீங்கள் பத்திரிகைகளில் படித்திருக்கலாம். தொலைக்காட்சி செய்தியில் கேட்டிருக்கலாம். பார்த்திருக்கலாம். அப்படி ஒரு சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்த தரைப்படை படம் உருவாகியுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டியாக தருவதாக சொல்லி பணம் வசூல் செய்கிறார்கள் ஒரு ஆறு பேர் கொண்ட கும்பல். இந்தக் கும்பலுக்கு ஒரு மார்வாடி தலைவனாகிறான். இவர்கள் மொத்தமாக ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடம் இருந்து வசூலித்துவிட்டு ஒரு நாள் கம்பெனியை பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.

அப்படி எஸ்கேப் ஆன மார்வாடி அந்த ஆயிரம் கோடி ரூபாயையும் தந்திரமாக தங்க கட்டிகளாக மாற்றி ஒரு சூட்கேஸில் அடைத்து யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சரண்டர் ஆகிறார்.

ஆறு மாத காலம் கழித்து சிறையில் இருந்து வெளியே வரும் அந்த மார்வாடி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பித்து சென்ற பொழுது டேவிட் என்ற ஒரு கூலிப் படை தலைவன் அவரை சுடுகிறான். ஆனாலும் அந்த துப்பாக்கிச் சூட்டில் தப்பித்து உயிர் பிழைத்து விடுகிறார் மார்வாடி. ஆனால் அவருடைய அந்த ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் டேவிட் வசம் செல்கிறது.

இன்னொரு பக்கம் லோக்கல் ரௌடியான விஜய் விஷ்வா தன்னுடைய காதலியுடன் இணைந்து அந்தத் தங்கக் கட்டிகளைத் தேடத் துவங்குகிறார்

அதே சமயம் தன்னுடைய குடும்பத்தையே காணாமல் தவிக்கும் நடிகர் ஜீவா மும்பையில் இருந்து இங்கு வந்து அந்த மார்வாடியை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தூக்கி வந்து தன்னுடைய வீட்டில் வைத்து ரகசியமாக சிகிச்சை அளித்து வருகிறார். மார்வாடி பிழைத்தவுடன் அவரை வைத்து அந்தப் பணத்தை கைப்பற்ற நினைக்கிறார்.

இந்த மூவரின் வாழ்க்கை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்து இருக்க… அந்த ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடைசியாக யார் கைக்கு வந்து சிக்கியது..? யார் அதை கைப்பற்றியது..? என்பதை பக்காவான தரை லோக்கல் கமர்சியல், ஆக்ஷன் காட்சிகளுடன் சொல்வதுதான் இந்த தரைப்படை’ திரைப்படம்.

படத்தில் மூன்று கதாநாயகர்கள் நடித்திருந்தாலும், மூன்று பேருமே வில்லன்களாக வருவதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

டேவிட்டாக நடித்திருக்கும் பிரஜின் படம் முழுவதும் சிகரெட் பிடித்துக் கொண்டே ஸ்டைலாக வருகிறார் துப்பாக்கியை எடுக்கிறார். சுடுகிறார். கொல்கிறார். பெட்டியை எடுக்கிறார். கைமாற்றுகிறார் அவ்வளவுதான். இதையேதான் படம் நெடுகிலும் செய்திருக்கிறார்.

இன்னொரு வில்லனாக நடித்திருக்கும் விஜய் விஸ்வாவும் தன் பங்குக்கு கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சகட்டு மேனிக்கு அனைவரும் சுட்டு தள்ளுகிறார். தன்னுடைய காதலியுடன் ரொமான்ஸில் பின்னிப் பிணைந்து இருக்கிறார். இவரும் அந்தப் பெட்டியை தேடியலைந்து அலைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் போகிறார்.

பாட்ஷா ரஜினிக்கு ஜெராக்ஸ் காப்பியாக நடித்திருக்கிறார் நடிகர் ஜீவா. ரஜினி போலவே கோட், சூட் அணிந்து கொண்டு அடியாட்களுடன் வலம் வருவது, நடப்பது, நிற்பது, உட்காருவது, சிகரெட் குடிப்பது என்று அத்தனையையும் ரஜினியை இமிடேட் செய்தே படம் முழுவதும் நடித்திருக்கிறார். இவருடைய பங்கில் ரசிக்கும்படி இருந்தது கடைசியாக இவர் சிரிக்கின்ற சிரிப்புதான்.

இவர்களின் காதலிகளாக நடித்தவர்களும் ஓரளவுக்கு தங்களுடைய நடிப்பை தங்கள் வருகின்ற காட்சிகளில் காண்பித்திருக்கிறார்கள். கூடவே மோகனா என்ற விஜய் விஸ்வாவின் காதலி ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகளும் ஒரு சாதாரண கமர்சியல் படத்தில் எப்படி வருவார்களோ.. எப்படி நடிப்பார்களோ.. அதைத்தான் செய்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் துப்பாக்கி சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பதால் அதற்கேற்ற மாதிரியே வேகவேகமான காட்சிகளை எழுதி இருக்கிறார் இயக்குநர். அதேபோல் படமும் சேசிங் ஆகவும், ரன்னிங் ஆகவும் போய்க் கொண்டிருப்பதும் போல் திரைக்கதை அமைந்திருப்பது இயக்குநருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்.

சின்ன பட்ஜெட் படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவை காண்பித்திருக்கிறார்கள். பரவாயில்லை என்று சொல்லலாம். மனோஜ் குமார் பாபு இசையில், பாடல்களும் பின்னணி செய்யும் பரவாயில்லை என்ற ரகம். ஆனால் பாடல்கள் மூன்றுமே திரும்பவும் ஒரு முறை கேட்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறது.

மிரட்டல் செல்வாவின் சண்டை பயிற்சி இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நம்மை சொல்ல வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் லேசான ஆக்சன் காட்சிகளாக சண்டை காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

இயக்குநர் எடுத்துக் கொடுத்த காட்சிகளை எல்லாம் படத் தொகுப்பாளர் தொகுத்தளித்து அடுத்தடுத்த காட்சிகளில் அந்தத் தங்க கட்டிகளை மட்டுமே மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பதால் சுவாரசியமான ஒரு திரைக்கதைக்கு அடித்தளம் போட்டிருக்கிறார் படத் தொகுப்பாளர்.

தங்கக் கட்டிகளைத் தேடி மூன்று குழுக்கள் எப்படியெல்லாம் போராடுகின்றன என்பதை சொல்ல வந்த இயக்குனர் தன்னால் முடிந்த அளவுக்கு ஒரு இயக்கத்தை கொடுத்து முடித்தளவுக்கு நடிப்பை வரவழைத்து படத்தை முடித்து இருக்கிறார்.

ஆனால் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பதைப் போல இந்தப் படம் வந்திருப்பதுதான் காமெடியாகிவிட்டது. படத்தில் ஏதோ குருவியைச் சுடுவதுபோல துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பதெல்லாம் நடக்கின்ற காரியமா.. அதிலும் இந்தப் படத்தில் மருந்துக்குக்கூட போலீஸை காட்டவே இல்லை என்பது மிகப் பெரிய நகைச்சுவை.

இந்தப் படத்தில் காமெடியே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தப் படமே ஒரு காமெடி படம்தான் என்பதை படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நீங்கள் நிச்சயமாக உணரலாம்.

RATING : 2.5 / 5

Our Score