full screen background image

டெஸ்ட் – சினிமா விமர்சனம்

டெஸ்ட் – சினிமா விமர்சனம்

துணிச்சலான மற்றும் அழுத்தமான கதைகளைத் தயாரித்த ‘YNOT’ ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்  எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.

இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

எழுத்து, இயக்கம்: எஸ்.சஷிகாந்த்தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பு).

இன்று ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டெஸ்ட்திரைப்படம் ப்ரீமியர் ஆகியுள்ளது.  

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி  தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் இந்த டெஸ்ட்படத்தின் கதைக் கரு.

இந்தத் திரைப்படம் பல உணர்வுகள், சூழ்நிலைகளின் முடிவு,  வாழ்க்கை எப்படி அனைவருக்கும் சில சோதனைகளைத் தருகிறது என்பதைத்தான் இந்த டெஸ்ட்திரைப்படம் பேசுகிறது.

அரசியல் வியாதிகளின் லஞ்ச லாவண்ய ஆட்சி அதிகாரிகளின் ஜனநாயக விரோத செயல்.. காவல் துறையின் மந்தமான நடவடிக்கைகள்.. தனி மனிதர்களின் ஈகோத்தனம் இது அத்தனையும் ஒன்று சேர்ந்து மூன்று நாட்களில் நடக்கும் கதகளி ஆட்டம்தான் இந்தப் படம்.

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பெரிய நட்சத்திர வீரராக திகழ்கிறார் சித்தார்த் ஆனால் இப்போது கடைசியாக அவர் தொடர்ச்சியான ஆட்டங்களில் குறைந்த ரண்களே எடுத்திருப்பதால் அவருடைய ஆட்ட காலம் முடிந்து விட்டதாகவே இந்திய கிரிக்கெட் வாரியம் எண்ணுகிறது.

இதனால் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்படி வற்புறுத்துகிறது கிரிக்கெட் வாரியம். ஆனால் இதை ஏற்க மறுக்கும் சித்தார்த், இந்தியா பாகிஸ்தான் உடன் போதும் கடைசி டெஸ்ட் போட்டியில் தான் விளையாடி இந்தியாவுக்கு வெற்றி பெற்று தந்து மிகப் பெரிய பெயரோடு ஓய்வு பெறப் போவதாக சொல்கிறார்.

அமெரிக்காவில் பாஸ்டன் யூனிவர்சிட்டியில் மிகப் பெரிய படிப்பை படித்துவிட்டு சொந்த நாட்டில் தான் மிகப் பெரிய ஒரு சாதனையாளராக வரவேண்டும் வளர வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார் மாதவன். இப்போது பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயு மூலமாக ஒரு புதிய எரிபொருளை கண்டு பிடிக்கிறார் மாதவன்.

மாதவனின் மனைவி நயன்தாரா ஒரு சாதாரண பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் குழந்தை இல்லை. குழந்தை பேருக்காக நயன்தாராவும் மாதவரம் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

மாதவனின் நண்பரான காளி வெங்கட் ஒரு கேண்டின் நடத்துகிறார். அந்தக் கேண்டினுக்காக ஒரு மார்வாடியிடம் பணம் கடன் வாங்கி இருக்கிறார். மார்வாடி கொடுத்த கடனை வைத்துதான் மாதவன் தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார் இப்பொழுது இந்த ஆராய்ச்சியை அமைச்சர் லெவலில் கொண்டு சென்று காட்டிவிட்டார் மாதவன்.

அமைச்சர் இதற்கு ஓகே சொன்னாலும் அமைச்சரின் பி.. இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனில் 50 லட்ச ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கூசாமல் கேட்கிறார்.

இன்னொரு பக்கம் கொடுத்த கடன் 50 லட்சத்தை திருப்பி வை என்று மார்வாடியின் அடியாட்கள் மாதவனையும், காளி வெங்கட்டையும் போட்டு தொலைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் எதிர்பாராத தருணத்தில் தனது கடைசி டெஸ்ட் மேட்ச்சில் விளையாட இருக்கும் சித்தார்த்தை வைத்து மாதவன் விளையாடும் 20 20 கிரிக்கெட் மேட்ச்சுதான் இந்தப் படத்தின் பிற்பகுதியான திரைக்கதை.

அந்த மேட்ச் என்னவானது..? கடைசியாக யாருடைய கனவு ஜெயித்தது…? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் யார் கதாநாயகன்.. யார் வில்லன்.. என்கின்ற கேள்வியை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு முறை நம்முடைய மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு சுவையான, சுவாரசியமான திரைக்கதையை இயக்குநர் சசிகாந்த் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

வில்லனா ஹீரோவா என்பதை தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும்விதமாக மாதவன் ஏற்று நடித்திருக்கும் அந்த விஞ்ஞானி கதாபாத்திரம் மிக மிக சிறப்புதான். ஆனாலும், கேரக்டர் ஸ்கெட்ச் என்கின்ற வகையில் அந்த கேரக்டர் செய்யும் தவறுகள் படத்தின் தன்மையை பெரிதும் பாதித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நடிப்பு என்று பார்த்தால் மற்ற இருவரையும்விட அதிகமான ஸ்கோரை பெறுகிறார் மாதவன்.

தன்னுடைய மனைவி மீதான அவருக்குள்ள பாசமும் அதேபோல் தான் கண்டுபிடித்திருக்கும் திட்டத்தின் மீது அவர் வைத்திருக்கும் விருப்பமும் ஆசையும் கனவும் அந்தக் கனவை அவர் காட்டுகின்ற இடங்களில் எல்லாம் பரவாயில்லை இவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று நம்மையும் சொல்ல வைப்பதுபோல தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் அவர் வில்லனாக பரிணாமித்து, என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பதைகூட உணராமல் அவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு காட்சிகளும், ஒவ்வொரு சின்ன சின்ன ரியாக்சன்களும் பலே என்று சொல்ல வைத்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் மாதவன்.

எப்போதும் வெற்றி பெற்றவன் பின்னால்தான் அனைவரும் ஓடுவார்கள். ஆனால் அந்த வெற்றியை தொடுவதற்கு அவன் எவ்வளவு கஷ்டப்பட்டான் என்பதை யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். இதைத்தான் சித்தார்த்தும் சொல்கிறார். சித்தார்த்தின் வேதனையை அவர் அதிகமாக வெளிப்படுத்தாமல் சின்ன சின்ன ரியாக்சன்களில் காட்டி விட்டுப் போவது அவருக்கு கிடைத்த ஒரு பேக் ட்ராப் என்றே சொல்லலாம். அவருடைய நடிப்பு போதாமையாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் ஒரு சாதாரண பெண்ணாக, சாதாரண மனைவியாக நடித்திருக்கும் நயன்தாரா தன்னுடைய உச்சகட்ட நடிப்பையும் இதில் கொட்டி இருக்கிறார். அவருடைய பொறுமை, அவருடைய சிரிப்பு, அவருடைய காதல் என்று அனைத்திலுமே தன்னுடைய நடிப்பை மிக சிறப்பாகவே காண்பித்து இருக்கிறார்.

கடைசியாக தன்னுடைய கணவரின் கனவுக்காக சட்டவிரோத செயல்களை மறைமுகமாக ஒத்துக் கொள்வதைப் போல அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

மீரா ஜாஸ்மின் மிக நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சித்தார்த்தின் மனைவியாக! மிக அமைதியான கதாபத்திரமாக ஏற்றிருந்து தன் மகன் காணாமல் போய்விட்டதற்கு சித்தார்த்திடம் கோபப்பட்டு கன்னத்தில் அரைந்தபடியே கேள்வி கேட்கும் இடத்தில் மீண்டு வந்துவிட்டார் என்றே நாம் சொல்லலாம்.

மாதவனின் நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட்டும், பணம் வசூல் செய்யவும் அடியாளாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸும் தங்களுடைய இருப்பை மிகச் சிறப்பாக படத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விரஜ் சிங் கோஹ்லியின் ஒளிப்பதிவு அட்டகாசம் என்று சொல்லலாம். மாதவன், சித்தார்த், நயன்தாரா முவரையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார். கிரிக்கெட் போட்டிகளை  படமாக்கியவிதமும் அவ்வளவு அழகாக இருக்கிறது.

நிஜமாக நடந்த போட்டியின் பார்வையாளர்கள் பகுதியையும், இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட போட்டியையும் கொஞ்சமும் வித்தியாசம் தெரியாமல் மிக அழகாக இணைத்து காண்பித்திருக்கும் படத் தொகுப்பாளர் டி.எம்.சுரேசையும் நம் மனதாரப் பாராட்ட வேண்டும்.

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிம்பிளி சூப்பர். அதிலும் பின்னணி இசையை கொஞ்சம் அடக்கமாக வாசித்து நட்சத்திரங்களின் நடிப்பை நன்கு ரசிக்க வைத்திருக்கிறார்.

படத்தை எழுதி இயக்கியிருக்கும் தயாரிப்பாளர் கம் இயக்குநர் எஸ்.சசிகாந்த் தன்னுடைய முதல் இயக்கத்தை மிகவும் சிறப்பாகவே செய்து தந்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

ஒருவன் புகழ் உச்சிக்கு சென்ற பிறகு அந்த இடத்தில் இருந்து உடனடியாக நீ கீழே இறங்கு என்று சொல்லும்போது அவன் மனம் என்ன வேதனைப்படும்.. எப்படி அவன் இறங்குவான்.. அவனால் உடனடியாக இறங்க முடியுமா என்கின்ற இந்த கேள்விக்கெல்லாம் விடையாக சித்தார்த்தை வைத்து அவர் எழுதியிருக்கும் திரைக்கதை சூப்பர் என்றே சொல்லலாம்.

இன்னொரு பக்கம் தன்னுடைய கனவு நொறுங்கிப் போகும் நிலையில், பணத்தை பற்றியே பேசும் அரசியல், அதிகார வர்க்கம் இதை எதிர்த்து அவர்கள் வழியிலேயே நானும் செல்கிறேன் என்று குறுக்கு வழிக்கு செல்லும் ஒரு நல்லவனின் கதையையும் இந்த திரைக்கதையில் இணைத்திருக்கிறார் இயக்குனர்.

வாழ்க்கையில் வெற்றியை பெறுவதற்கு கொஞ்சமும் சோம்பேறித்தனம் இல்லாமல் மேலும், மேலும் உழைத்துக் கொண்டேதான் போக வேண்டும். வெற்றியை அடையும் வரையில் உழைத்தே தீர வேண்டும் என்பதை சித்தார்த்திக் கதாபாத்திரம் மூலமாக சொல்லி இருக்கும் இயக்குநர் சசிகாந்த், அதே பாணியில் நேர்மையான ஒரு வழியை மாதவனின் வாழ்க்கையிலும் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யாமல் மாதவனின் கேரக்டரை மட்டும் சினிமாத்தனமாக மாற்றி அவரை வில்லனாக்கி அவருடைய கதாபாத்திரத்தை சிதைத்து இந்தப் படத்தை வேறு மார்க்கத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பின்னடைவு.

அரசியல் அதிகார வர்க்கத்தின் இந்தக் கேடுகெட்ட செயலை, நேர்மையான வழியிலேயே மாதவனார் சந்தித்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தை நாம் முழுமையாகப் பாராட்டியிருக்கலாம்.

ஆனால், அதை செய்யாமல் குறுக்கு வழியில் ஒரு நல்லவன் மனம் மாறுகிறது என்பதை சொல்லிவிட்டு அதற்கு அடிப்படையான காரணம் அந்த அதிகார வர்க்கம் அரசியல் தளம் என்பதை சொல்லாமல் மாதவன் என்னும் தனி மனிதன் தனது ஆசை.. விருப்பு, வெறுப்புகளால் அவனே அழிந்துவிட்டான் என்ற ஒரு மிகப் பெரிய பொய்யை அவன் தலையில் சுமத்தி இருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை இயக்குநரே!!.

படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற வகையில் இருந்தாலும், மாதவனின் கேரக்டரை சிதைத்துவிட்டார் என்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காக இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.!!!

RATING : 3.5 / 5

Our Score