பி.எஸ்.என்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் நாசர் பேசும்போது, “எப்போதும் மேடைகளில் வழக்கமான வார்த்தைகள்தான் பகிரபட்டிருக்கும். ஆனால், இந்த விழாவில் பேசியவைகள் அனைத்துமே அனைவரின் உள்ளங்களில் இருந்து வந்த வார்த்தை. இது விஜித்தை அறிமுப்படுத்தும் விழாவாக இருக்கிறது.
என் மகன்தான் இப்போது இங்கே என்னை அழைத்து வந்தான். நான் சிரித்துக் கொண்டே வந்தேன். “ஏன்ப்பா சிரிக்கிறீங்கப்பா..?” என்று கேட்டான் மகன். நான் திரைப்பட கல்லூரியில் முதல் நாள் வகுப்புக்குச் சென்றபோது அங்கே என்னை ராக்கிங் செய்தது தங்கர்பச்சான்தான்.
அன்று “உன் பெயர் என்ன..?” என்று கேட்டார். “நாசர் சார்…” என்றேன். “ஏன் தமிழ் வராதா..?” என்று அதட்டினார். அவர் மூலம் தமிழ் இலக்கிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். யூகியும், தங்கர்ப்பச்சானும் என்னை நண்பர்கள் என்று கூறினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் எனக்கு ஆசிரியர்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
தங்கர்பச்சானிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் இன்றுவரையிலும் தன்னிலை மாறாமல் இருப்பதுதான். இன்றுவரை அவரது இதயமும், அறிவும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
விஜித் நடிக்க வரும்போது முதலில் வேண்டாம் என்று கூறியது நான்தான். “வேறு எதாவது கற்றுக் கொண்டு பின்பு நடிக்க வா…” என்றேன். என் பிள்ளைகளிடமும் இதையேதான் கூறினேன். ஆனால், இந்த கால குழந்தைகள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இது என்னுடைய குடும்ப விழா போன்று தோன்றுகிறது. இங்கே அனைவருடனும் சேர்ந்து விஜித்தை நானும் மனதார வாழ்த்துகிறேன்..” என்றார்.









