full screen background image

பேரன்பும் பெருங்கோபமும் – சினிமா விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும் – சினிமா விமர்சனம்

இந்த வாரத்திய சாதீய திரைப்படம் இது.

இந்தப் படத்தை E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் நிறுவனத்தின் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபிஅருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜே.பி.தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானிஇளையராஜா இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். பத்திரிக்கை தொடர்பு ஜான்சன்.

பாலு மகேந்திராவின் சினிமா பட்டறைமாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

ஒரு இளைஞனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது..

சாதிய வேறுபாடுகளும், சாதிய பாகுபாடுகளும் இன்றைய இளைய சமுதாயத்தினர் பிறக்கும் பொழுதே வந்ததில்லை. அவர்கள் வளரும்போது, வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களிடத்தில் அந்தக் கருத்து திணிக்கப்படுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் சொல்கிறது.

தேனி மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் தலைமை ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார் விஜித் பச்சான். அந்த மருத்துவமனையில் திடீரென்று ஒரு நாள் ஒரு குழந்தை காணாமல் போகிறது. அந்தக் குழந்தையை கடத்திவிட்டதாக அனைவரும் விஜய் பச்சான் மீது சந்தேகப்படுகிறார்கள். போலீசாரும் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

ஆனால் அதன் பின்புதான் விஜித் மச்சான் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே செய்யாத ஒரு குற்றத்தை தான் செய்ததாக பொறுப்பேற்று இருப்பது தெரிகிறது.

அவர் ஏன் அதை செய்தார்? அதனால் அவருக்கு என்ன நடந்தது? உண்மையான காரணம் என்ன? இதில் சாதி எங்கிருந்து வந்தது என்பது போன்ற கேள்விகளுக்கு விடைதான் இந்த பேரன்பும் பெருங்கோபமும் திரைப்படம்.

ஒரு கல்லூரி மாணவர், இளைஞர், வயதானவர் என்ற மூன்றுவிதமான ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் அஜித் பச்சான். அந்த மூன்று கேரக்டர்களுக்குமே அவருடைய முகமும். உடலும் அழகாக பொருந்திப் போகிறது.

கல்லூரி மாணவராக அவருடைய நடிப்பு அதிகம் வெளிப்படவில்லை என்றாலும் வயதான கேரக்டரில் அவர் பேசுகின்ற பேச்சும், அவர் எடுக்கின்ற செயல்களும்தான் படத்தை நகர்த்தி இருக்கின்றன.

ஹீரோயினாக நடித்திருக்கும் ஷாலியின் கண்களே அதிகம் பேசி இருக்கின்றன. அவர்களுடைய குளோசப் காட்சிகளில் அவருடைய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கொல்லப்படுகின்ற காட்சியில் அவர் காட்டுகின்ற நடிப்பும், உடல் மொழியும் ஐயோ பாவம் என்கின்ற உணர்வை நமக்குள் வரவழைத்திருக்கின்றது.

ஹீரோவின் அம்மாவாக நடித்த சுபத்ரா ராபர்ட் அந்த ஊரின் சாதிய மேலாண்மையை கடைப்பிடிப்பவராகவும், அதற்காக மருமகளையே கொலை செய்ய துணியும்  கொடூரமான மனநிலை கொண்டவராகவும் நடித்திருக்கிறார். அதே சமயம் அதற்கான தண்டனையாக மன நிலை பிறழ்ந்து எதுவுமே தெரியாமல் வாழ்கின்ற அந்தக் காலகட்டத்திலும் ஒரு பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் மைம் கோபியும், அவருடைய தம்பியாக நடித்திருக்கும் அருள்தாஸூம், சகலையாக நடித்து இருப்பவரும் சாதி வெறி கொண்டவர்களாக ஒரு வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள்.

மற்றும் நண்பியாக நடித்திருக்கும் ஹாலிதா, நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம் இன்னும் பிறரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சோகக் காட்சிகளுக்கும், கொலை வெறி காட்சிகளுக்கும் சேர்த்து வைத்து இசையமைத்திருக்கிறார் ராஜா.

தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் படம் ஒரு சுமாரான ஒளிப்பதிவை கொடுத்திருந்தாலும் மாஹியில் நடக்கும் காட்சிகள் அனைத்திலும் ஒளிப்பதிவு தரம் என்றே சொல்லலாம். அந்த மாஹி பகுதியை இவ்வளவு அழகாக இதுவரையிலும் எந்த ஒரு படத்திலும் காட்டியிருக்கவில்லை.

சாதி ரீதியான பிரச்சனை என்றாலும் இதற்கான பழி வாங்குதலில்  ஒரு வித்தியாசமான ஒரு புதுமையான கண்ணோட்டத்தில் கதையை எழுதி இயக்கியிருப்பதால் அந்தக் கதைக்கேற்ற திரைக்கதையை குழப்பம் இல்லாமல் கொடுக்கும் வகையில் படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ராமர்.

அடிப்பவன் அடித்துக் கொண்டே இருக்கிறான். அடி வாங்குபவன், அடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டுமா..? காலம் மாறும்போது அடி வாங்கியவர்களும் திருப்பி அடிக்க முனைவார்கள்.. அல்லவா..?

அப்படி திருப்பியடிக்கும் ஒரு அடியைத்தான் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார்கள். இயக்குநர் கொஞ்சம் வித்தியாசமான ஒரு சிந்தனையோடு, இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்பதையும் சாதி வெறியர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.

அந்த வகையில் இந்தப் படம் சாதி ரீதியிலான திரைப்படங்களில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது.

சாதிய பாகுபாடுகளையும், சாதிய வேறுபாடுகளையும் இன்றைய சமுதாயத்தில் இருந்து அகற்ற வேண்டியது இன்றைய சமூகத்தின் கடமை. அந்த கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்.

அதற்கான முனைப்பினை இன்றைய இளைய சமூகத்தினருக்கு அறிவுறுத்த வந்திருக்கும் இத்திரைப்படம் வரவேற்கத்தக்கது..!

RATING : 3.5 / 5

Our Score