full screen background image

தண்டட்டி- சினிமா விமர்சனம்

தண்டட்டி- சினிமா விமர்சனம்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’.

ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநரான ராம் சங்கையா இயக்கியுள்ளார்.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு K.S.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை வீரமணி கவனித்துள்ளார்.

கதையின் நாயகனான பசுபதி விரைவில் ரிட்டையர்டு ஆகவுள்ள போலீஸ் கான்ஸ்டபிள். இன்னும் கொஞ்ச நாளில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி கிடாரிப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு பனிஷ்மெண்ட் டிரான்ஸ்பரில் வந்திருக்கிறார்.

அந்தக் கிடாரிபட்டி  ஊரில் எந்த பிரச்னை என்றாலும் போலீஸ் போகாது. காரணம், அந்த ஊரில் உள்ளவர்கள் எப்போதும் போலீசை அசிங்கப்படுத்தி அனுப்பிவிடுவார்கள். 

நேர்மையும், கண்டிப்பானவராகவும் உள்ள பசுபதியிடம் கிடாரிப்பட்டியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் அப்பத்தாவைக் காணோம் என புகார் கொடுக்கிறான். கூடவே அவனது அத்தைமார்களும் வந்து தங்களது அம்மாவைக் காணோம் எனச் சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் சொல்வது ஒரு நபரைத்தான் என்பதை புரிந்து கொண்ட பசுபதி, அந்த அப்பத்தாவை தேடிக் கண்டு பிடிக்கிறார். அவரைப் பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கையில் அந்த அப்பத்தா இறந்து விடுகிறார்.

இப்போது அப்பாத்தாவின்  ஒரு மகன், நான்கு மகள்களுக்குள்ளும், அப்பத்தா காதில் போட்டிருக்கும் தண்டட்டி யாருக்கு என்ற போட்டி வருகிறது. கூடவே இன்னும் சில பிரச்சனைகளும் வந்து சேர்கிறது. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சுமூகமாக முடித்தால்தான் அப்பத்தாவின் உடலை எடுக்க முடியும் என்ற நிலை. 

இந்த நிலையில் எல்லோரும்  கண் வைத்திருந்த அப்பத்தாவின் தண்டட்டி திடீரென்று காணாமல் போக, அடுத்தடுத்து என்னென்ன சம்பவங்கள் நடக்கின்றன என்பதை கிராமத்து வாசனையோடு சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படத்தின் கதாப்பாத்திரத் தேர்வுகளிலே முதல் சிக்சரை அடித்துவிட்டார் இயக்குநர். ரிட்டையர்டு ஆகவிருக்கும் போலீஸாக பசுபதி பத்துப் பொருத்தமும் கூடியவராக அசத்துகிறார். அவர் காட்டும் மேனரிசங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் போலீஸ்கள் இதுவரை காட்டாதது. க்ளைமாக்ஸில் ஒரு உருக்கமான கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் மூலம் அவர் காட்டியிருக்கும் நடிப்பு அபாரம்.

அப்பத்தாவாக நடித்துள்ள ரோஹிணி, தன் மொத்த அனுபவத்தையும் கொட்டி அற்புதமாக நடித்துள்ளார். வெறும் பார்வையால் அவர் உணர்த்தும் உணர்வுகள் கலங்க வைக்கின்றன. மேலும், படத்தில் நடித்துள்ள அனைத்துக் கிராமத்து ஜனங்களும், தண்டட்டி கிழவிகளும் எதார்த்தம் மாறாமல் நடித்துள்ளனர்.

கிராமத்தின் நிலப்பரப்பிற்கு ஏற்றாப்போல அமைக்கப்பட்ட ஒளிப்பதிவு படத்திற்கும் பெரும் அழகைச் சேர்த்திருக்கிறது.

பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு கிடைத்திருக்கும் கூடுதல் பலம். ஒரு ஒப்பாரி பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அம்மா செண்டிமெண்ட் பாடல் ஒன்றை பட்டினத்தாரின் வரிகளிலிருந்து  வடிவமைத்திருப்பது சிறப்பு.

வெகு இயல்பாக துவங்கும் படம் முடியும்வரை தன் இயல்பை விடவேயில்லை. இடையிடையே சற்று நீளமாக உள்ள காட்சிகளை கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம். முதல் பாதியில் படம் மிகவும் லைட்டர்வேயாக இருப்பதை இயக்குநர் கவனித்திருக்கலாம். இவையெல்லாம் சின்னச் சின்ன நெருடல்களே.

மொத்தமாகப் பார்க்கும்போது இந்தத் தண்டட்டி’ படம் நிச்சயமாக பார்வையாளர்களுக்கு முழுத் திருப்தியைக் கொடுக்கும்.

மண்வாசனை மிக்க படங்கள் தரமாக அமைவது அரிதாகிவிட்ட தமிழ் சினிமாவில் நல்லதொரு படமாக வந்துள்ளது இந்தத் ‘தண்டட்டி’..!

‘தண்டட்டி’ – கை தட்டி வரவேற்க வேண்டிய படம்..!

RATING : 3.5 / 5

Our Score