full screen background image

“கொஞ்சமாவது சமூகப் பொறுப்பு இருக்கா கார்த்திக் சுப்பராஜூக்கு..?”-தமிழருவி மணியன் கேள்வி

“கொஞ்சமாவது சமூகப் பொறுப்பு இருக்கா கார்த்திக் சுப்பராஜூக்கு..?”-தமிழருவி மணியன் கேள்வி

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘மஹான்’ திரைப்படம், காந்திய கொள்கைகளைக் கொச்சைப்படுத்துவதாக சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் சூழலில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் இந்தப் படம் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழருவி மணியன் இது குறித்துப் பேசும்போது, “விக்ரமின் ‘மஹான்’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. எப்போதாவது, சில நல்லப் படங்களை மட்டுமே பார்க்கும் வழக்கமுடையவன் நான்.

ஆனால், ‘மஹான்’ படத்தில் காந்தியம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். நேற்று மாலைகூட ஈரோட்டிலிருந்து ஒரு சகோதரி போன் செய்து, ’அய்யா மகான்’ படம் பார்த்தேன். எங்க நெஞ்சே புண்ணாகிடுச்சிங்கய்யா’ என்று கதறினார்.

சினிமாவைப் போன்று சக்தி மிக்க ஊடகம் உலகத்தில் வேறு எதுவுமில்லை. படிப்பறியாப் பாமரனையும் எளிதில் சென்றடையும் ஆற்றல் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்த சினிமா உலகம், சமூகப் பொறுப்பற்று இயங்குவதுதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

மனிதர்களின் சிந்தனைகளைச் செழுமைப்படுத்துவதோ சமூக நலனை மேன்மைப்படுத்துவதோ இன்றைய திரையுலக பிரம்மாக்களின்  நோக்கமில்லை. நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் ‘மகான்கள்’ இவர்கள்.

இந்த ’மஹான்’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடிக்கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை.

நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத்தையே புரட்டிப் போடும் பரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும்?

மதுவிலக்கு என்பது காந்தியத்தின் உயிர்த்தலம். ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து வறியவர்களை மீட்டெடுப்பதற்காக வாழ் நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடியவர்  மகாத்மா.

1930-ம் ஆண்டு நடந்த சட்ட மறுப்புப் போரை முடிவிற்குக் கொண்டு வர காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவானபோது, கள்ளுக்கடை மறியலை மட்டும் கைவிட மறுத்தவர் காந்தி என்பதையும்,  அதை வேறுவழியின்றி வைஸ்ராய் இர்வின் ஏற்றுக் கொண்டதையும் மகான்கள் சுப்பராஜும், விக்ரமும் அறிவார்களா?

சிறிதளவாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் கார்த்திக் சுப்பராஜ் ’மஹான்’ படத்தை இயக்கியிருப்பாரா?

பிதாமகன்’, ’சேது’, ’காசி’ போன்ற படங்களில் தன் அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் விக்ரம். இந்த மூன்று படங்களும் சிறந்த படங்கள். இந்தப் படங்களில் வாழ்ந்து காட்டியிருப்பார் மனிதர். விக்ரம் ஒரு நல்ல நடிகர். நல்ல நடிகரின் படம், நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பார்த்திருக்கலாம். ஆனால், அந்த நடிகருக்கு கொஞ்சமாவது சமூக பொறுப்புணர்வு இருந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்வையே ஒரு வேள்வியாக்கி அர்ப்பணித்த மகாத்மாவை இப்படி மோசமாக கொச்சைப்படுத்தி சித்தரிக்கும் படத்தில் நாம் நடித்துதான் தீர வேண்டுமா என்று விக்ரம் யோசித்திருக்க வேண்டும்.

இந்தக் கதையை சொல்லும்போதே மறுத்திருந்தால் அது விக்ரமுக்கு பெருமையாக இருந்திருக்கும். ஆனால், கதையைக் கேட்ட பின்பும், இவ்வளவு மோசமான படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றால், இவர்களுக்கு எந்த வகையிலாவது பணம் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் நோக்கம். இந்தப் படத்தில் நடிப்பதும் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதும் ஒன்றுதான்.

காந்தியம் என்பது பின்பற்ற முடியாத ஒரு வறட்டுத் தத்துவம் இல்லை. அது ஓர் அற்புதமான நடைமுறை வாழ்வியல் என்பதைக் கார்த்திக் சுப்பராஜோ, நடிகர் விக்ரமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சினிமாக் கலைஞர்கள் செல்வத்தைக் குவிக்கவும், மனம் போனபோக்கில் இன்புற்று வாழவும், பொய்யான விளம்பர வெளிச்சத்தில் பூரித்துப் போகவும் கலைச் சேவை செய்ய வந்தவர்கள். இதில், விதிவிலக்காகச் சிலர் இருக்கக் கூடும். விதிவிலக்குகள் பொது விதியாவதில்லை.

மருந்தும், அரிசி விற்பதும் வணிகம்தான். மதுவும் வணிகம்தான். ஆனால், உயிரைக் காக்கும் பசியைப் போக்கும் வணிகத்தைத்தான் போற்றுவோம். மக்களுக்கு எதிரான மதுவை எப்படி போற்ற முடியும்..? அதுபோல், நல்லப் படங்கள் வந்தால் நிச்சயம் நாம் போற்றலாம்.

மக்களை இன்னும் பள்ளத்தில் தள்ளி பணம் பார்க்க நினைக்கிறார்கள். நல்லனவற்றை சொல்வதுதன் உண்மையான கலைச் சேவை. அப்படி இருப்பவர்களுக்கு என் தலை வணக்கம்.

மற்றபடி, இப்படத்தை எடுத்த இயக்குநருக்குத்தான் ஒட்டு மொத்தப் பொறுப்பும் உள்ளது. படத்தின் கேப்டனே அவர்தானே..? கார்த்திக் சுப்பராஜ் எதிர்மறையான செய்திகளைச் சொன்னால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார். அதுதான்,  இன்றைய ட்ரெண்டு. பணம்தான் இவர்களது ஒற்றை நோக்கமா..?” என்று கோபமாகக் கேட்டுள்ளார் தமிழருவி மணியன்.

Our Score