நடிக்க வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் ஷாலினி பாண்டே

நடிக்க வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் ஷாலினி பாண்டே

“ஒரு திரைப்படத்தை தயாரித்து முடிப்பதற்குள்ளாக அந்தத் தயாரிப்பாளர்களுக்கு அனைத்துவிதமான நோய்களும் வந்து போகும்” என்பார்கள். படத் தயாரிப்பு சம்பந்தமான பிரச்சினைகள் சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்றில்லாமல் வகைதொகையில்லாமல் அனைத்துத் தரப்பு தயாரிப்பாளர்களையும் கழுத்தைச் சுற்றிய பாம்பாக இறுகிப் பிடிக்கும்.

லேட்டஸ்ட்டாக இந்தப் பிடியில் சிக்கியிருப்பவர் தமிழ்ச் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளரான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் டி.சிவா.

T-Siva-1

தயாரிப்பாளர் டி.சிவா தற்போது தயாரித்து வரும் புதிய திரைப்படம் ‘அக்னி சிறகுகள்’. இந்தப் படத்தில் அருண் விஜய், விஜய் ஆன்டனி, அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், சென்ராயன், ஜே.சதீஷ் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ‘மூடர் கூடம்’ நவீன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் போன்ற நட்சத்திரங்களுடன் இந்த ‘அக்னி சிறகுகள்’ படத்தின் பெரும் பகுதியை கஜகஸ்தான் நாட்டிற்குச் சென்று படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன்.

இந்த ‘அக்னி சிறகுகள்’ படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு ‘அர்ஜூன் ரெட்டி’யில் அறிமுகமானவர் இவர். தமிழில் ‘கொரில்லா’, ‘காதல்%’ ஆகிய படங்களில் நடித்தவர்.

இந்த ‘அக்னி சிறகுகள்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஷாலினி பாண்டே, “அடுத்தக் கட்டப் படப்பிடிப்பிற்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன். அடுத்து ஆறு மாதங்கள் கழித்து வேண்டுமானால் கால்ஷீட் தருகிறேன்…” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம்.

இதுவரையிலும் இந்தப் படத்திற்காக சென்னையிலும், கொல்கத்தாவிலும் மொத்தமாக 27 நாட்கள் படப்பிடிப்பு நடித்தியிருக்கிறார்கள். இதற்கான செலவே கோடிகளைத் தாண்டிவிட்டதாம். வேறு வழியில்லாமல், ஹீரோயினை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார் தயாரிப்பாளர் டி.சிவா.

2_FORONLINE

இது பற்றி தயாரிப்பாளர் டி.சிவா பேசுகையில், “விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே என்று பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இந்தப் படத்தைத் துவக்கினேன். ‘மூடர் கூடம்’ நவீன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் நாயகியாக நடிக்க நடிகை ஷாலினி பாண்டேயை புக் செய்தேன். அவருக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி 15 லட்சம் ரூபாய் முன் பணமாகவும் கொடுத்துவிட்டேன்.

படத்தின் துவக்கத்திலேயே இந்தப் படத்திற்கு மொத்தமாக 100 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்றும், கேட்கும்போதெல்லாம் வர வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளையும் விதித்திருந்தோம். நாயகன் விஜய் ஆண்டனியிடம் 45 நாட்கள் கால்ஷீட் வாங்கி, அதே நேரத்தில் ஷாலினியின் கால்ஷீட்டும் இருப்பதுபோல் தேதிகளை பிக்ஸ் செய்து இரு தரப்பினரும் ஒப்பந்தமும் செய்து கொண்டோம். இது அனைத்திற்கும் அவரும், அவரது மேனேஜரும் ஒத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

Agni-Siragugal-Vijay-Antony-Arun-Vijay-and-Shalini-Pandey

மேலும் ஷாலினி பாண்டே முதல் ஷெட்யூல் முழுவதும் வந்து நடித்தார். அதற்குப் பிறகு அடுத்த ஷெட்யூலுக்காக செப்டம்பர், அக்டோபரில் தேதிகளைக் கேட்டபோது திடீரென்று “இப்போதைக்கு தன்னால் ‘அக்னி சிறகுகள்’ படத்திற்கு கால்ஷீட் தர முடியாது” என்றார் ஷாலினி.

ஷாலினி பாண்டேவிற்கு தற்போது ஹிந்தியில் ரண்பீர் கபூருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அதனால் அந்த ஹிந்தி படத்தில் நடிக்கப் போவதாகவும், ‘அக்னி சிறகுகள்’ படத்திற்கு வேண்டுமானால் ஆறு மாதங்கள் கழித்து கால்ஷீட் தருவதாகவும் சொன்னார்.

Agni-Siragugal-Vijay-Antony-Arun-Vijay-and-Shalini-Pandey-1

அவரை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயன்று மிகுந்த கஷ்டத்திற்கிடையில் கடைசியாக ஹைதராபாத்தில் நேரில் சந்தித்து இது பற்றிப் பேசினேன். அப்போது “நான் நடிக்க வந்ததே ஹிந்தி படங்களில் நடிப்பதற்காகத்தான். மற்ற மொழிகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. உங்க படத்துக்கு என்னால் இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது. வேண்டுமானால் 6 மாதங்கள் கழித்து அந்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு தருகிறேன்..” என்று திமிராகச் சொன்னார்.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் இனிமேலும் ஷாலினிக்காக காத்திருந்தால் எனக்குப் பெரும் பண நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘அக்னி சிறகுகள்’ படத்திற்கு புதிய நாயகியாக அக்சரா ஹாசனை புக் செய்து அவருடன் கஜகஸ்தான்வரையிலும் சென்று படப்பிடிப்பினை நடத்தியுள்ளேன்.

Agni-Siragugal-Vijay-Antony-Arun-Vijay-and-Shalini-Pandey-2

சென்னையிலும், கொல்கத்தாவிலும், இத்தனை பெரிய நட்சத்திரங்களை அழைத்துச் சென்று மொத்தமாகப் படப்பிடிப்பு நடத்தி அவை அத்தனையும் வீணாகிப் போன நிலையில் புதிதாக மீண்டும் அதே இடங்களில் புதிய நாயகியை வைத்து படமெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். மற்றைய நடிகர், நடிகைகளிடமும் நான் கூடுதல் நாட்களைக் கேட்க கட்டாயத்திற்கு உள்ளானேன். இதனால் திட்டமிட்டபடி என்னால் சரியான சமயத்தில், இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பெருத்த நஷ்டத்தையும் நான் அடைய வேண்டியதாகிவிட்டது.

Agni-Siragugal-Vijay-Antony-Arun-Vijay-and-Shalini-Pandey-3

இதனால் ஷாலினி பாண்டே மீது தமிழ். தெலுங்கு, ஹிந்தியில் இருக்கும் திரைப்பட அமைப்புகளில் புகார் செய்துள்ளேன். ஷாலினியால் எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி அவர் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளேன்...” என்று பெரும் மன வருத்தத்துடன் சொல்லி முடித்தார் தயாரிப்பாளர் டி.சிவா.

T-Siva-3

தயாரிப்பாளர் டி.சிவா 40 ஆண்டு காலமாக இதே தமிழ்த் திரையுலகத்தில் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருந்து வருகிறார். தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இடைக்கால கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழி நடத்தியும் வருகிறார். இவருக்கே இந்தக் கதியா என்று திகைத்துப் போயிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

உடனடித் தீர்வாக திரையுலக வழக்கப்படி செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி வேறு படங்களில் நடிக்கக் கூடாது என்று ஷாலினி பாண்டேவிற்கு அகில இந்திய பெப்சி அமைப்பும், பாலிவுட் அமைப்புகளும் தடை விதிக்க வேண்டும்.

தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஏற்பட்ட இழப்பை ஷாலினி பாண்டேவிடமிருந்து திரைப்பட அமைப்புகள் பெற்றுக் கொடுக்க வேண்டும்..!

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்த் திரையுலகத்திற்கு கடைசியில் வளர்ந்தவர்களால் இப்படிப்பட்ட அவமானமும் கிடைக்கிறது..!

பாவம் தயாரிப்பாளர்கள்..!

Our Score