படத்தின் ஹீரோ ஜித்தேசும், ஹீரோயின் ரியாவும் ஒரு கூட்டத்தோடு என்.எஸ்.எஸ். சமூக நலப் பணிக்காக தலக்கோணம் காட்டுக்கு வருகிறார்கள்.. ரியாவின் தந்தை கோட்டா சீனிவாசராவ் மாநில அமைச்சர். இவர்கள் காட்டுக்குள் வந்த நேரத்தில் அதே காட்டுக்குள் இருந்த ஏதோவொரு அமைப்பின் தீவிரவாதிகளை போலீஸ் தேடி வந்து சுட்டுக் கொல்கிறது. அந்த தீவிரவாதக் கூட்டத்தின் தலைவனான ஜித்தாவின் தம்பியை உயிருடன் பிடித்துவிடுகிறது.
அதே நேரத்தில் சென்னையில் மந்திரியின் மனைவி இறந்து போகிறார். அம்மா இறந்துவிட்டதை ரியாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார் அப்பா மந்திரி. சென்போன் டவர் இல்லையாம்.. கடைசியில் மகள் வராமலேயே காரியங்கள் முடிவுறுகின்றன.
அப்போது தனது பினாமியின் பெயரில் இருக்கும் எல்லா சொத்துக்களையும் மகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்கிறார் மந்திரி. இதைக் கேட்ட பினாமி வேறொரு அடியாள் டீமை தேர்வு செய்து உடனேயே காட்டுக்குள் சென்று மந்திரி மகளை கொல்லும்படி சொல்கிறான்.
இந்த நேரத்தில் தீவிரவாதக் கூட்டத்தின் தலைவனான ஜிந்தா, அந்தக் காட்டுக்குள் பயணிக்கும் ஜித்தேசையும், ரியாவையும் கடத்திச் செல்கிறான். தனது தம்பியை விட்டுவிட்டால் தான் மந்திரி மகளையும் விட்டுவிடுவதாகப் பேரம் பேசுகிறான். மந்திரிக்கு தலைவலி கூடுகிறது.
இதற்கிடையில் ஜிந்தாவின் தம்பியை தனது தரப்பு போலீஸ் ஆட்களை வைத்து சிறையிலேயே கொலை செய்கிறான் மந்திரியின் பினாமி. இதனால் கோபப்படும் ஜிந்தா, தனக்கு வேலை வைக்காமல் மந்திரியின் மகளை கொலை செய்துவிடுவான் என்று மந்திரியின் பினாமி எதிர்பார்க்கிறான். ஆனால் இந்தத் தகவலை ஜிந்தாவின் காதுகளுக்கு போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள் காவல்துறையினர்.
இந்த நேரத்தில் மந்திரியின் மனைவி எப்படி இறந்தார் என்கிற உண்மை வெளியாகிறது. தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தனது பினாமியின் பேச்சைக் கேட்டு மந்திரியே ஆள் வைத்து கொலை செய்தது தெரிய வருகிறது.
மந்திரி வீட்டு வேலைக்காரன் அந்தச் சமயத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறான். தொடர்ந்து தனது மகளது பிறப்பு மீதும் மந்திரிக்கு சந்தேகம் வந்துவிட்டதால், தனது மகளையும் தீர்த்துக் கட்டிவிடும்படி தனது பினாமியிடம் சொல்கிறார்.
இதற்கடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சந்தோஷப்படும் பினாமி தனது அடியாட்களை காட்டுக்குள் அனுப்புகிறான். இந்த நேரத்தில் மந்திரி வீட்டு வேலைக்காரன் 4 நாட்கள் கழித்து மரணமடைய, அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஒரு அரவாணி என்கிறார்கள். மந்திரி அதிர்ச்சியாகிறார்.
மந்திரி தனது பினாமியை துப்பாக்கி முனையில் வைத்து விசாரிக்க.. அவன் உண்மையைச் சொல்லிவிடுகிறான். மந்திரி மனைவியை தான் அடைய நினைத்த களேபரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்து, தான் அதை வேலைக்காரனுடன் மந்திரியின் மனைவிக்கு தொடர்பு என்று திரித்துவிட்டதாகக் கூற.. மந்திரி கோபத்தில் அவனை சுட்டுக் கொல்கிறார்.
உடனேயே காட்டுக்குச் சென்று மகளை பார்க்கத் துடிக்கிறார் மந்திரி. இந்த நேரத்தில் மகளும் அவளது காதலனும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி விடுகிறார்கள்.. மந்திரியும், போலீஸ் படையும் தலக்கோணம் காட்டுக்குள் நுழைகிறார்கள்.. கடைசியில் கண்டுபிடித்தார்களா என்பதுதான் கதை..!
நல்ல கதையிருந்தாலும் சொதப்பலான திரைக்கதை, சொதப்பலான இயக்கம் என்பதால் படத்தை அதிகம் ரசிக்க முடியவில்லை.. திடீர், திடீரென்று காட்சிகள் வந்து போய்க் கொண்டிருக்க.. நாடகத்தனமான இயக்கத்தினால் எதுவும் ரசிக்கும்படியில்லை..
மந்திரியாக நடித்த கோட்டா சீனிவாசராவ் மட்டுமே உருப்படியாக நடித்திருக்கிறார். அதிலும் இது அவர் நடிக்க கேரக்டரே இல்லை.. ஆனாலும் அவர் ஒருவரால்தான் படத்தை மார்க்கெட் செய்ய முடிந்தது என்று நினைக்கிறோம்..
ஹீரோ ஜிந்தேஷ்.. புதுமுகம்.. நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் வாய்த்தவர். ஆனாலும் இயக்கம் சரியாக இல்லையென்பதால் கிடைத்தவரைக்கும் செய்திருக்கிறார். நாயகி ரியா தனித்த நடிப்பைவிட பாடல் காட்சிகளில் அதிகம் கிளாமர் காட்டியிருக்கிறார். இத்தனை செய்தும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தால் அதிசயம்தான்..!
இடையில் சம்பந்தமேயில்லாமல் கஞ்சா கருப்புவின் காமெடி டிராக்.. கொஞ்சமும் சிரிப்பே வராமல் எப்படி காமெடி காட்சிகளை படமாக்குவது என்பதை இந்தப் படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்..!
சுபாஷ், ஜவஹார் இசையில் 5 பாடல்கள். திடீர், திடீரென்று வருகின்றன. ஹீரோயின் மற்றும் அபிநயஸ்ரீயின் அதீத கவர்ச்சியால் சிறிது ரசிக்க முடிகிறது.. ராமலிங்கம் என்பவரின் ஒளிப்பதிவில் தலக்கோணம் காட்டுப் பகுதியை இன்னும் கொஞ்சம் தெளிவாகக் காட்டியிருக்கலாம்.. இயக்குனர் கே.பத்மராஜ் திரைக்கதையிலும், இயக்கத்திலும் நிறைய சொதப்பல்களை செய்திருப்பதால் ஒட்டு மொத்தமாகவே படம் திருப்தியை அளிக்கவில்லை.
ஒரு இடைவேளை.. 5 பாடல்கள்.. 2 குத்து பாடல்கள்.. 3 மெலடிகள்.. 3 சண்டை காட்சிகள்.. சென்டிமெண்ட் காட்சிகள்.. என்று ஏதோ லோ பட்ஜெட்டில் திட்டமிட்டு கச்சிதமாக எடுத்து திரைக்கு கொண்டு வந்து காட்டியிருக்கிறார்கள்..
இந்தத் திருப்தி அவர்களுக்கு.. நமக்கு..?