full screen background image

“நடிகர் சங்கம் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்..”-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..!

“நடிகர் சங்கம் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்..”-அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்..!

நடிகர் திலகம் சிவாஜியின் 86-வது பிறந்த நாளை வழக்கம்போல சிவாஜியின் குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

அவர்களது குடும்பத்து மாப்பிள்ளையான ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் ஜெயிலில் இருப்பதால் கொஞ்சம் உற்சாகம் குறைந்த நிலையில் இருந்தனர் சிவாஜியின் குடும்பத்தினர்.

ஆனாலும் நிகழ்ச்சிகளில் குறைவில்லை. சிவாஜியின் பிள்ளைகள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் வேன்களில் வந்து குவிந்துவிட்டனர். இனி வரும் காலங்களில் காமராஜர் அரங்கத்தில் இந்த விழாவை நடத்தினால் நல்லது. இடம் தாங்கவில்லை..

வருடாவருடம் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு சிவாஜி விருதினை வழங்குகிறார்கள் சிவாஜியின் குடும்பத்தினர். இந்த விருது 50000 ரூபாய் பரிசுத் தொகை கொண்டது.

இந்த வருடம் பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் ஆகியோர் சிவாஜி விருதினை பெற்றார்கள்.

இந்த விருதுகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கி கெளரவித்தார்.

பின்பு அவர் பேசும்போது, “சிவாஜி ஒரு பல்கலைகழகம்.. அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கல்விக்கு ‘சரஸ்வதி பூஜை’ நடத்துவதைப்போல நடிப்புக்கென்று ஒரு நாளை ஒதுக்கி அன்றைக்கு ‘சிவாஜி பூஜை’ நடத்த வேண்டும்.

சிவபெருமான், முருகன், பாரதத்தாய் போன்ற கடவுள்களையும், திருவருட்செல்வர் போன்ற ஆன்மீக குருக்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகளையும் நமது தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியவர் நமது நடிகர் திலகம்தான்..

அழுகை, சிரிப்பு, ஆடல், பாடல் என எல்லாவற்றையும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம். ஒரு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நடித்துக் காட்டியிருக்கிறார்.

சினிமாவில் ஜெயித்த அவரால் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அவருக்கு நிஜ வாழ்வில் நடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நிரந்தர முதல்வர் அவர்தான். இதில் சந்தேகமில்லை.

இந்த கலைத்துறை சிவாஜிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது என் ஆதங்கம். அவரது பெயரில் மிகப் பெரிய விருதுகள் வழங்கப்பட வேண்டும். சிவாஜி குடும்பம் மட்டுமே அவரது பிறந்த நாளை கொண்டாடினால் போதாது. நடிகர் சங்கம் ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுதான் அவர்கள் சிவாஜிக்கு செய்யும் பெரிய மரியாதையாக இருக்கும். அடுத்த ஆண்டு முதலே சிவாஜியின் பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இதை அப்படியே நடிகர் சங்கம் பக்கம் போனீங்கன்னா அங்க இருக்குறவங்ககிட்ட சொல்லிருங்க ஐயா.. அப்பவாச்சும் கேப்பாங்களான்னு பார்க்கலாம்..?

Our Score