இந்த வெப் சீரீஸில் சமுத்திரக்கனி, ஷிவதா, ராஜ் திரன்தாஸ், மூணார் ரமேஷ், சுந்தரபாண்டியன், பிரேம், கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை, வசனம் எழுதி, இயக்கியவர் – நவின்குமார் பழனிவேல்
தயாரிப்பாளர் – அஜய் கிருஷ்ணா
பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எஐஎம்)
இந்த வெப் சீரியஸ் ஜி5 ஓடிடி தளத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக, ஆந்திர எல்லையில் இருக்கும் ஒரு கிராமம் பொதட்டூர்பேட்டை. இந்த கிராமத்தில் ஒரு தம்பதிகள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய வீட்டில் வேறு எந்த திருட்டும் இல்லை. அந்த பெண் கழுத்தில் இருந்த தாலியும் அந்த ஆணின் இடுப்பில் கட்டி இருந்த வெள்ளி அருணாக்கொடியும் மட்டுமே மிஸ்ஸிங்.
இந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் சமுத்திரகனி தன்னுடைய படையுடன் வந்து விசாரிக்கிறார்.
அதே நாளில்தான் அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் புதிய இன்ஸ்பெக்டராக ஸ்வதா நாயர் பதவி ஏற்கிறார். ஸ்வேதாவிடம் சமுத்திரகனியை பற்றி தப்பும் தவறுமாக கான்ஸ்டபிள் சொல்கிறார்கள்.
“அவர் பைத்தியம்போல் பேசுகிறார். நடந்து கொள்கிறார். அவர் என்ன நினைக்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியாது. எந்த நேரமும் பக்கத்தில் இருக்கும் டீக்கடையில்தான் இருப்பார். அவர் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி என்பதால் யாரையும் மதிக்க மாட்டார்..” என்று இல்லாதது, பொல்லாதது அத்தனையையும் சொல்கிறார்கள்.
ஆனால் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவரான கான்ஸ்டபிள் புலிப்பாண்டி, ஷிவதாவிடம் சமுத்திரக்கனியின் குண நலன்கள், குற்றப் புலனாய்வில் இருக்கும் திறமை.. டிபார்ட்மெண்ட்டில் அவர் காட்டிய சின்சியர், நேர்மை இதையெல்லாம் சரியாகச் சொன்னதால் ஷிவதாவுக்கும், சமுத்திரக்கனிக்குமான சினேகம் வளர்கிறது.
இந்த நேரத்தில் அதே கிராமத்தில் அடுத்த கொலையும் நடந்து விடுகிறது. இப்போது அந்த ஏரியாவின் டி.எஸ்.பி.யான மூணாறு ரமேஷ், ஒரு தனி டீம் அமைத்து விசாரிக்கும்படி சொல்கிறார். அந்தத் தனி டீமில் சமுத்திரகனியையும் இணைத்துக் கொள்கிறார் ஷிவதா.
இப்பொழுது இவர்கள் இருவருமே அந்த வழக்கை விசாரிக்க துவங்க அது ஆந்திராவில் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் போய் முடிகிறது.
திருப்பதி போலீஸ் ஸ்டேஷனில் இதே ஸ்டைலில் இதுவரையிலும் 76 கொலைகள் நடந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், “அது எப்படி.. யாரால் நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் விசாரித்து ஓய்ந்து போய்விட்டோம்” என்கிறார் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்.
பொதட்டூர்பேட்டையில் நடந்த கொலைகளும், திருப்பதியில் நடந்த கொலைகளும் செய்த வித்த்தில் ஒற்றுமையாக இருப்பதால் குற்றவாளிகள் ஒரே டீமாகத்தின் இருக்கும் என்று முடிவுக்கு வருகிறார் சமுத்திரக்கனி.
இப்போது இரண்டு டீமாகப் பிரிந்து ஆந்திராவில் ஒரு டீம் குற்றவாளிகளை தேடி அலைகிறது. யார் அந்த குற்றவாளிகள்? போலீஸார் அவர்களை கைது செய்தார்களா? இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
சமுத்திரக்கனிக்கு இந்தப் படமும் ஒரு லக்கி படம்தான். ரொம்பவும் அதிகமாக அலட்டிக் கொள்ளாத ஒரு அமைதியான நடிப்பு. எப்போதும் டீக்கடையில் இருப்பவர் என்கின்ற பெயருக்கு ஏற்ப அவர் அறிமுகமாவதே டீக்கடையில்தான், இந்த டீக்கடைக்காரருடன் இவர் பேசுகின்ற இயல்பான பேச்சுக்கள் நம்மை புன்னகைக்கு வைக்கின்றன.
கொலை நடந்த ஸ்பாட்டை பார்த்த உடனேயே, என்ன நடந்திருக்கும்? எப்படி நடந்திருக்கும்? எத்தனை பேர் செய்திருப்பார்கள்? என்பதை கண்டறியும் அளவுக்கு போலீஸ் புத்தி அமைந்திருக்கும் சமுத்திரக்கனிக்கு அதை எப்படி வெளிப்படுத்துவது என்கின்ற அந்த பிரசன்டேஷன் இல்லாததுதான் பெரிய பிரச்சனை ஆகி இருக்கிறது. இதை ஷிவதா ஒரு முறை சுட்டிக் காட்டுவதுகூட சிறப்புதான். சமுத்திரக்கனியின் நடிப்பு இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டுதான்.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஷிவதா ஐயர் கொள்ளை அழகு. இன்ஸ்பெக்டர் என்கின்ற அந்த கெத்துக்குரிய நடிப்பையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனியை புரிந்து கொண்ட பின்பு அவர்கள் இருவரும் பேசுகின்ற முறையும், காட்டும் நட்பும் திரைக்கதையில் கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது.
தன்னுடைய காதலனிடம் போலீஸ் வேலையை பற்றி எடுத்துச் சொல்லும் இடத்தில் சபாஷ் போட வைத்திருக்கிறார் ஷிவதா. இவருடைய காதலனாக நடித்தவரும் ஒரு பக்குவமான, நல்லதொரு காதலனாக நடித்திருப்பது சிறப்பு.
வில்லன்களாக நடித்திருக்கும் ராஜூ, அவரது தம்பி பிரேம் இருவரும் சிறந்த வில்லன்களாக தங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ராஜூ தன்னுடைய முகத் தோற்றம், கூர்மையான பார்வை… இதிலேயே ஒரு வித்தியாசத்தை கொடுத்து நம்மை கவர்கிறார்.
டி.எஸ்.பி.யாக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ், ராஜூவின் மனைவியாக நடித்திருக்கும் கொற்றவை, விசாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுவர்ணா, தயாளன் என்று மற்றைய கதாபாத்திரங்களும் இயக்குநரின் இயக்கத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இதில் போலீஸ் டிரைவராக நடித்திருக்கும் புலி பாண்டியின் அமைதியான பேச்சு, இப்படியும் ஒரு கான்ஸ்டபிள் அனைத்து போலீஸ் ஸ்டேஷனிலும் இருந்தால் பிரச்சனை இல்லாமல் இருக்குமே என்ற நம்மை சொல்ல தோன்றுகிறது.
சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்று சொல்லிவிட்டதால் அதற்கேற்ற மூடினை எதிர்பார்க்கும் ரசிகர்கள் மனதில் இந்த சீரீஸ் நிலைத்து நிற்க.. விபின் பாஸ்கர் தன்னுடைய பின்னணி இசையால் உழைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கே.கே போதுமான அளவுக்கு பகலிலேயே குறைந்த வெளிச்சத்திலேயே மிக அழகான காட்சிகளை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் 1999 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் நடக்கின்ற காட்சிகளை சொல்வதால் அதற்கேற்றவாறு கலை இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கான அர்ப்பணிப்பு தன்மையுடன் கூடிய கலை இயக்கத்தை செய்திருக்கிறார்.
ஆனாலும் ஒரே ஒரு ஸ்டேஷனை வைத்து மூன்று ஸ்டேஷனுக்கும் என்று பெயர் மாற்றி ஷூட் செய்திருப்பது இயக்குநரின் திறமைக்கு ஒரு சான்று.
1995-ல் நடக்கும் கதையாக வில்லன்களுக்கு நேர்ந்த அந்த கொடுமையை காட்டும்பொழுது இவ்வளவு கொடுமையை போலீஸ் செய்ததனால்தான் இந்த இரண்டு பேரும் இவ்வளவு படுகொலைகளை செய்திருக்கிறார்கள் என்பதை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இதை விசாரணையின்போது சமுத்திரக்கனி ராஜூவிடம் “போலீஸ் செய்ததற்கு பொதுமக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை ஏன் கொலை செய்கிறீர்கள் என்று கேட்கும்போது கொலையாளி ராஜூ பதில் சொல்லத் தெரியாமல் முழிப்பது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது.
முதல் இரண்டு பாகங்களில் கொலையாளி யார் என்பதை சொல்வதற்காக முன்னோட்டமாக எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்தடுத்த பாகங்களில் இந்த சீரீஸ் பட்டையக் கிளப்பும் அளவுக்கு சஸ்பென்ஸ், திரில்லரில் ரன் வேகத்தில் ஓடுகிறது. இந்த அளவுக்கு படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன் குமார் பழனிவேல்.
இது 1995, 1999-களில் ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவம் என்ற இயக்குநர் சொல்கிறார். நிஜமாக நடந்த கதையில் சினிமாவின் கதை திரைக்கதைக்கேற்றவாறு மாற்றி அமைத்து கடைசி எபிசோடுவரையிலும் அடுத்தது என்ன.. குற்றவாளிகள் எப்போது பிடிபடுவார்கள்.. என்று நம்மை ஏங்க வைத்து, வெப் சீரிஸ் முழுவதையும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இயக்குநரின் இயக்கத் திறமையை நாம் மனதார பாராட்டுகிறோம். இந்தத் தடயம் நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தடயம் – உண்மைச் சம்பவங்களின் அதிர்ச்சியூட்டும் பின்னணியில் உருவாக்கப்பட்ட நேர்த்தியான புலனாய்வு தொடர்!
ரேட்டிங்: 3.5 / 5
முழுத் தொடரையும் ZEEE 5 – THADAYAM ஓடிடி தளத்தில் நீங்கள் காணலாம்.









