full screen background image

மம்மட்டியான் ஸ்டார்ஸ் – வெப் சீரீஸ் – விமர்சனம்

மம்மட்டியான் ஸ்டார்ஸ் – வெப் சீரீஸ் – விமர்சனம்

ஒரு கிராமத்தில் வசிக்கும் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகிய மூன்று பேரும் மிக நெருங்கிய நண்பர்கள். அதே சமயம் கிரிக்கெட் மீது வெறி கொண்ட பைத்தியங்கள் இந்தியாவில்  மிகப் பெரிய நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் வீர்சிங்கிற்கு இவர்கள் தீவிரமான ரசிகர்கள்.

தங்களுடைய சொந்த ஊரிலேயே மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற கிரிக்கெட் குழுவை தங்களுடைய நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் கிராமத்தில் வருடா வருடம் நடக்கும் கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டு பலமுறை பரிசு கோப்பையை வென்று உள்ளார்கள்.

இந்த வருடமும் அதே போல் கிரிக்கெட் போட்டி உள்ளூரில் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இவர்களும் அந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் சுற்று, இரண்டாம் சுற்றுவரை வெற்றி பெற்று பைனலுக்கு தகுதியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி வர இருப்பது இவர்களுக்கு தெரிகிறது. எப்பவாவது ஒருமுறைதான் சென்னையில் மேட்ச் நடக்கும் என்பதால் இந்தத் தடவையாது தங்களுடைய ஆதர்ச நாயகனான வீர் சிங்கின் ஆட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

சென்னைக்கு சென்று கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு நிறைய செலவாகும் என்பதால் இப்போதைக்கு உள்ளூரில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டியின் பைனலில் ஜெயித்து அதில் கிடைக்கும் பரிசு தொகை 50,000 எடுத்துக்கொண்டு சென்னைக்கு போய் கிரிக்கெட் மேட்ச் பார்க்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் இவர்களுடைய கெட்ட நேரம் அந்த ஊர் தலைவர் திடீரென்று மரணம் அடைய, இறுதிப் போட்டியை நடத்தாமலேயே நிறுத்தி விடுகிறார்கள். இப்பொழுது பணத்துக்கு என்ன செய்வது.. எங்கே போவது.. என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எப்படியும் இந்த மேட்ச்சில் வெற்றி பெறுபவர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை பஞ்சாயத்து தலைவர் அலுவலகத்தில்தான் வைத்திருப்பார்கள் என்று நினைத்து ஒரு நள்ளிரவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் நுழைந்து அந்தப் பணத்தையும் கைப்பற்றுகிறார்கள். அதை வைத்து சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்து கிளம்புகிறார்கள். வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகன் இவர்களுடன் சென்னைக்கு வந்து விடுகிறார்.

சென்னையில் இவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பரிடம் சொல்லி டிக்கெட் வாங்க சொல்கிறார்கள். டிக்கெட் கிடைக்கிறது. ஆனால் போட்டி நடக்கும் அன்றுதான் இவர்கள் வாங்கிய டிக்கெட் போலி என்று தெரிய வருகிறது. அதனால் மேட்ச்சை பார்க்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

அதேசமயம் உள்ளூரிலும் இந்த மூன்று பேருடன் லாவண்யா முருகேசனும் காணவில்லை என்பதால் ஒரே டென்ஷனாக இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் தங்களுடைய பசங்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய பெற்றோர்கள்.

இதையெல்லாம் தாண்டி மறுபடியும் முயற்சி செய்து ஏதேனும் ஒரு வழியில் மேட்ச்சை பார்த்து விட வேண்டும் என்று மூன்று பேரும் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

அடுத்து என்ன நடந்தது? இவர்கள் மேட்ச் பார்த்தார்களா? இல்லையா? கிராமத்திற்கு திரும்பினார்களா? இல்லையா? என்பதுதான் இந்த ஆறு எபிசோடுகள் கொண்ட மம்ட்டியான் ஸ்டார்ஸ் என்ற வெப் சீரிஸின் திரைக்கதை.

ஹீரோக்களாக நடித்திருக்கும் மூன்று பேருமே அந்த அடல்ட் வயதுக்குரிய பேச்சுக்களையே பேசி நடித்திருக்கிறார்கள். மூன்று பேரும் ஒருவருக்கொருவர் உண்மையான நண்பர்களாகவும் இருப்பதால் அதற்கேற்றார் போல் தங்களுடைய அன்பு, பாசம், பண்பு, கோபம், சண்டை என்று அனைத்துவிதமான எமோஷன்களையும் வெளிப்படுத்தும்போது குட் பிரெண்ட்ஸ் என்று சொல்லத் தோன்றுகிறது.

அதே சமயம் அவர்கள் தங்களுடைய பாடி லாங்குவேஜில்கூட கை தேர்ந்த நடிகர்களைப் போல நடித்து காண்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்.

காதலியாக நடித்திருக்கும் லாவண்யா அப்பா, அம்மா பேச்சை கேட்க விரும்பாமல் தானே சுயமாக யாருக்கும் அடிமைத்தனமாக இல்லாமல் தான் விரும்பியதை செய்யும் ஒரு சுதந்திர பறவையாக இருக்க விரும்புவதாக படத்தில் சொல்கிறார். அது போலவே சென்னைக்கு இவர்களோடு தனியாக தைரியமாக வந்து அங்கு நடக்கின்ற பிரச்சனைகளிலும் மாட்டிக் கொண்டு தன்னுடைய நண்பர்களுக்கும் உதவி செய்கிறார். சிறப்பான நடிப்புதான்.

மேலும் ஊரில் கடை வைத்திருக்கும் விவேக் பிரசன்னா, கிரிக்கெட் சூதாட்டத்தில் இறங்கி அடிக்கும் சம்பத் ராம், ஊர் தலைவரான நான் கடவுள் ராஜேந்திரன் என்று பார்வையாளர்களுக்கு நன்கு தெரிந்தவர்களும் நன்கு நடித்துள்ளனர்.

அதிலும் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு அவர்களுடைய உதவியோடு சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துக்கும் சம்பத் ராம் அசத்தல் வில்லனாகவே இருக்கிறார்.

பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. முதலில் கிராமத்தில் நடக்கின்ற காட்சிகளை கிராமம் என்று தெரிகின்ற வகையில் படமாக்கி இருக்கிறார். அதை போல் சென்னைக்கு வந்து சின்ன பட்ஜெட் சீரிஸ் என்பதால் சில காட்சிகளை எடுத்ததாக  புளூமேட்டில் எடுத்திருப்பது நமக்கே தெரிகிறது.

அதை போல் சேப்பாக்கத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சின்போது ரசிகர்களின் ஆரவாரத்தையும் வேறு வேறு இடங்களில் இருந்து பதிவாக்கி கொடுத்திருந்தாலும் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசையமைப்பாளர் பரத் தனசேகர் பின்னணி இசையை கவனிக்க வைக்கும் அளவுக்கு அமைத்திருக்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொருவிதமான பின்னணி இசை. அந்த வகையில் காட்சிகளை மிஸ் பண்ணாமல் தொடர்ந்து பாருங்கள் என்று தன்னுடைய பின்னணி இசையால் நம்மை மிரட்டி இருக்கிறார்.

வெப் சீரிஸ்களின் அடிப்படை விஷயமே ஒவ்வொரு எபிசோடு முடிவிலும் ஒரு அதிர்ச்சியோ அல்லது ஒரு புதிய செய்தியோ இருக்க வேண்டும் என்பதுதான். அதை இந்தப் படத்தில் மிகவும் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப அது போலவே வெப் சீரிசை படத் தொகுப்பாளர் கத்தரித்து கொடுத்திருக்கிறார்.

இந்த சீரிஸில் இதுவரையில் நாம் பார்க்காத ஒரு விஷயத்தை அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அது கிரிக்கெட் சூதாட்டம்.

திடீரென்று ஒரு நாள் ஒரு சின்ன பத்திரிக்கையில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கிறது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியபோது மொத்த இந்தியாவும் அதிர்ச்சியில் ஆடிப் போனது.

இது உண்மையாகவே நடந்து இருக்கிறது என்பதை தெரிந்தவுடன் லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் பார்ப்பதை அப்போதே நிறுத்தி விட்டார்கள். இப்போதைய இளைஞர் சமுதாயம் மட்டுமே இந்த கிரிக்கெட்டை ப்போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் சூதாட்டம் எப்படி நடக்கிறது? அதை எப்படி கம்யூனிகேஷன் நடத்துகிறார்கள்? யார் நடத்துவது? எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? எப்படி கட்ட வேண்டும்? என்ன மாதிரியான போட்டிகள் எல்லாம் நடக்கிறது? இதை எப்படி நடத்துகிறார்கள்? இதில் பம் நம்பகத் தன்மையை உடையதா? ணம் கைக்கு வந்துவிடுமா? இதையெல்லாம் இந்த சீரிஸில் மிக தீவிரமாக டிஸ்கஷன் செய்து அப்படியே காட்சிகளாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நிச்சயமாக இது ஒரு அதிர்ச்சியான திரைக்கதைதான்.

இந்த சீரிசை இயக்கியிருக்கும் இயக்குநர் சபீர் சுதாகர் முதல் எபிசோடில் இருந்து மூன்றாவது எபிசோட்வரையிலும் அந்த ஊரில் வாழ்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள்? ஹீரோக்கள் மூன்று பேரும் எப்படி அவரவர் வீட்டில் பிரச்சனை எதிர்கொள்கிறார்கள்? முருகேசன்லாவண்யா காதல் எப்படி முறிந்து போனது? கிரிக்கெட் சூதாட்டத்தில் இவையெல்லாம் எப்படி கிடைக்கும் என்பதையெல்லாம் டீடைலாகவே சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.

முதல் மூன்று எபிசோடுகளில் இவர்கள் சென்னைக்கு கிளம்பும்வரையும் வைத்திருக்கிறார்கள். அடுத்த மூன்று எபிசோடுகளில் சென்னையில் இவர்கள் படும் பாடு.. அந்த சூதாட்டத்தை எப்படி இவர்கள் அணுகுகிறார்கள்? இவர்கள் எப்படி அதில் மாட்டிக் கொள்கிறார்கள்? என்பதை எல்லாம் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குர்.

இந்த சூதாட்டத்தின் விளைவுகளைப் பற்றி இயக்குநர் மூன்று நாயகர்களிடமும் அழுத்தமாக வசனத்தில் சொல்லி இருக்க வேண்டும். அவர்களும் இது மிகப் பெரிய தவறு. நாங்கள் தெரியாமல் இதில் மாட்டிக் கொண்டோம். இப்போதைக்கு நாங்கள் ஊருக்கு போகக்கூட கையில் பணம் இல்லை என்ற ரீதியில் பேசியிருந்தால் நிச்சயம் பாராட்டலாம். ஆனால் இந்த சூதாட்ட விஷயத்தையே ஒரு ஹாபியாக, ஹாப்பியாக இவர்கள் கொண்டாடுவது நகை முரண் என்றுதான் சொல்ல வேண்டும்.

விளையாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் நாம் ரசிகர்களாக இருக்கலாம். ஆனால், வெறியர்களாக இருக்கக்கூடாது. ஒரு தனி மனிதரிடம் வெறியனாக இருப்பதைவிட ஒரு விளையாட்டின் மீது நாம் ஆர்வம் கொண்டு அதில் தீவிரமாக இருப்பதில் தவறில்லை.

இதைத்தான் இந்தத் தொடரில் இயக்குநர் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எந்த இடத்திலும் இதைச் சொல்லாமல் தப்பித்து இருக்கிறார்.

கடைசியில் இதுபோன்ற அம்மா, அப்பா, குடும்பம் இவர்களை எதிர்த்து தங்களுக்கு எல்லாமும் தெரியும் என்பது போல எல்லாவற்றிலும் அதிகப்பிரசங்கித்தனமாக செய்து கொண்டிருக்கும் இன்றைய இளைய சமூகத்துக்கு ஒரு நல்லதொரு அறிவுரை இந்த வெப் சீரிஸில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதை புரியும்படி எளிய வார்த்தைகளால் சொல்லி இருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

எப்படி இருப்பினும் இந்த மம்பட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரியஸ் உங்களை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்கிறது!

அவசியம் பாருங்கள்!

RATING : 3.5 / 5

Our Score