தமிழ்த் திரையுலகத்தில் திரைப்படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர்களுக்கென்று ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு சங்கம் உள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்ச் சினிமாவின் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இந்தச் சங்கத்தில்தான் உறுப்பினர்களாக உள்ளனர்.
சமீபத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் ஒரு குழுவினர் தனியே பிரிந்து சென்று ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் ஒரு தனி சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.
அதன் பின்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த இயக்குநர்-தயாரிப்பாளரான டி.ராஜேந்தரின் தலைமையில் ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கமும் உருவானது.
இந்த மூன்று சங்கங்களுமே தங்களது சங்கத்தின் பெயர்களில் ‘தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்று வருமாறு அமைத்துள்ளதால் குழப்பங்கள் நிலவுவதாக தமிழ்த் திரையுலகத்தில் ஏற்கெனவே பேச்சு எழுந்தது.
இப்போது இந்தக் குழப்படியை நீக்குவதற்காக கோர்ட் படியை மிதித்திருக்கிறது இவர்களுக்கெல்லாம் தாய் சங்கமாக விளங்கும் முரளி ராமசாமி தலைமையிலான ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’.
சம்பந்தப்பட்ட இரண்டு சங்கங்களின் பதிவையும் ரத்து செய்யும்படி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையிலான ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’.
அந்த மனுவில், “எங்களது ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்த் திரையுலகத்தில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’, ‘தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்று புதிதாக இரண்டு சங்கங்கள் உருவாகியுள்ளன.
இந்தச் சங்கங்களால் தேவையில்லாமல் புதிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சங்கத்தின் பெயர் போன்றே இன்னொரு சங்கத்தின் பெயர் இருக்கக் கூடாது என்பது சங்கங்களின் அமைப்பு விதிகளில் ஒன்றாக இருப்பதால் மேற்கண்ட இரண்டு சங்கங்களின் பதிவையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்…” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த மனுவுக்கு வரும் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட இரண்டு புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.