full screen background image

நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தினரை நீக்க முடிவு – இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி..!

நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தினரை நீக்க முடிவு – இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து கொண்டே ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க’த்தை உருவாக்கிய 12 பெரிய தயாரிப்பாளர்களை தங்களுடைய சங்கத்தில் இருந்து நீக்க, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

சென்ற ஆண்டின் இறுதியில் இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் தலைமையில் திடீரென்று ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ உருவானது.

இந்தச் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவும், பொதுச் செயலாளராக டி.சிவாவும், துணைத் தலைவர்களாக – ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு இருவரும், பொருளாளராக டி.ஜி.தியாகராஜனும், இணைச் செயலாளர்களாக எஸ்.எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக, 1. எஸ்.நந்தகோபால் (மெட்ராஸ் எண்ட்டெர்பிரைசஸ்), 2. பி.மதன் (எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்), 3. சி.விஜயகுமார் (திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட்), 4. ராஜசேகர கற்பூர சுந்தர பாண்டியன் (2டி எண்ட்டெர்டெயின்மெண்ட்), 5. ஜி.டில்லி பாபு (ஆக்சஸ் பிலிம் பேக்டரி), 6. கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பென்ச் புரொடெக்சன்ஸ்), 7. ஆர்.கண்ணன் (மசாலா பிக்ஸ்), 8. சுதன் சுந்தரம் (Passion Studios), 9. விஜய் ராகவேந்திரா (ஆல் இன் பிக்சர்ஸ்), 10. ஐ.பி.கார்த்திகேயன் (பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்), 11. நிதின் சத்யா (Shveth Group), 12. பி.ஜி.முத்தையா (பி.ஜி. மீடியா ஒர்க்ஸ்) இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் புதிய தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. ஆனால், “நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் அனைவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் இதுவரையிலும் உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் இங்கேயும் இருப்போம். அங்கேயும் இருப்போம். ஆனால் அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எந்தப் பொறுப்புக்கும் வர மாட்டோம்…” என்று உறுதியுடன் தெரிவித்தார்கள் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றவுடன் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினரை அந்தச் சங்கத்தைக் கலைத்துவிட்டு மறுபடியும் தாய்ச் சங்கமான தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணையும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இதனை நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நிராகரித்துவிட்டனர்.

இதையடுத்து தங்களது சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முக்கியமான 12 நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சங்கத்தில் இருந்து நீக்கப் போவதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று இந்தச் சங்கத்தின் அவசர  நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமியின் தலைமையில் சங்க வளாகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், விபிஎப் கட்டணம், ஓடிடி வெளியீடு, பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகையாளர்களிடத்தில் சங்கத்தின் செயலாளரான மன்னன் பேசும்போது, “தமிழ் சினிமா இன்றைக்கு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. அது பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்கவே இந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல கட்ட விவாதத்திற்கு பிறகு சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம்.

ஓடிடி தளத்திலோ, தியேட்டரிலோ அல்லது இரண்டிலுமோ படங்களை திரையிடுவது, தயாரிப்பாளர்களின் சுதந்திரம். அதில் மற்ற சங்கங்கள் தலையிட முடியாது. வி.பி.எப் கட்டணம் மற்றும் பெப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை பற்றியெல்லாம் அடுத்தச் செயற் குழுவில் பேசி முடிவு செய்யப்படும்.

தயாரிப்பாளர்கள் பெயரில் புதிய சங்கத்தை தொடங்கி உள்ள இயக்குநரும், தயாரிப்பாளருமான  பாரதிராஜாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் நிர்வாகிகள் 12 பேரை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளோம்..” என்றார்.

ஆக மொத்தத்தில், இப்போதைய சட்ட சபைத் தேர்தல் முடிந்ததும் தயாரிப்பாளர்கள் சங்கங்களின் மோதல் துவங்கும் என்று தெரிகிறது..!

 
Our Score