தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் வழக்கு..!

தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் வழக்கு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவினை கலைத்துவிட்டு அதன் நிர்வாகியாக பதிவாளர் ஆர்.சேகரை நியமித்ததை எதிர்த்து, நீக்கப்பட்ட தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த முறை நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தனர்.

இவர்கள் பொறுப்புக்கு வந்தததில் இருந்தே விஷால் குழுவினர் மீது பல்வேறு புகார்கள் பகிரங்கமாச் சொல்லப்பட்டு வந்தன.

சங்கத்திற்குத் தேவையில்லாமல் வேறொரு அலுவலகம் அமைத்தது. சங்கத்தின் அறக்கட்டளையில் இருந்து 7 கோடி ரூபாயை பொதுக் குழுவின் அனுமதியில்லாமல் எடுத்தது.. சங்க உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியத்தையும், தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கியது.. சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.. சங்கத்தில் கொடுக்கும் புகார்களுக்கு பதிலே அளிக்காமல் இருந்தது. விஷாலின் படங்களுக்கு மட்டும் அதிகத் தியேட்டர்கள் கிடைப்பதைபோல் பார்த்துக் கொண்டது.. பொதுக் குழுவை முறைப்படி நடத்தாமல் பாதியிலேயே கூட்டத்தை முடித்துவிட்டு வெளியேறியது.. எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களை சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்தது என்று விஷால் அணியினர் மீது வண்டி, வண்டியாகப் புகார்கள் எழுந்தன.

vishal-protest-2

இதையெல்லாம் தொகுத்து அந்தச் சங்கத்தின் முன்னாள் பொருளாளரான ஆர்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் விஷால் அணியினர் மீது புகார் மனுவை அளித்திருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது குறித்து அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது. மேலும் மாவட்ட பதிவாளர், பதிவுத் துறை தலைவர் ஆகியோரிடமும் இது குறித்து அறிக்கை கேட்கப்பட்டது.

அந்த அறிக்கையின் மூலம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாக தமிழக அரசுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மை செயலாளரான கா.பாலச்சந்திரன் விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அதன் விவரம் வருமாறு :

பதிவுச் சட்டம் மீறல்

2017-ம் ஆண்டில் இருந்து இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்படவில்லை. ஆவணங்களில் பதிவாளரின் ஒப்புதலைப் பெறாமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 16(3), 26 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளர்கள்.

சங்கத்தின் அனைத்து புத்தகங்கள், மற்றும் ஆவணங்கள் ஆகியவை சென்னை தியாகராய நகர் அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அலுவலகத்தின் சூழ்நிலை மாற்றம் பற்றிய தகவல்களை சங்கம் பதிவு செய்யவில்லை.

சங்கத்தின் குறிப்பு கோப்புகளை செயற்குழுவின் ஒப்புதலை பெறவில்லை. தியாகராயநகரில் தனி அலுவலகம் எடுக்கப்பட்டு, அதற்கு முன் பணம் என்ற பெயரில் 16 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இருந்து வாடகையாக மாதம் 2 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

vishal-protest-1

புகார்தாரர் கூறியதுபோல இது ஒருமித்த முடிவு கிடையாது. தேவையான ஆவணங்களை பதிவு அலுவலகத்தில் வைத்துக் கொள்ளவில்லை. முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பத்தை இதுவரை பதிவாளரிடம் அளிக்காமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 29(3), 13 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளர்கள்.

சங்க உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், பரிசுத் தொகை, மகன், மகள் திருமண உதவித் தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, தீபாவளி பரிசுத் தொகை என்ற வகைகளில் சங்க நிதியை பகிர்ந்துள்ளர்கள். அது, சங்கத்தின் துணை விதிகளுக்கும் சட்டங்களுக்கும் முரணாக காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் 25-ம் பிரிவு மீறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்படி உங்களுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. எனவே, சிறப்பு அதிகாரி ஒருவரை அரசே நியமித்து உங்கள் சங்கத்தின் மேலாண்மை விவகாரங்களை ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு இன்னும் 30 நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், உங்களது சங்கத்தை நிர்வகிக்க அரசுத் தரப்பில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு சங்கத்தின் மேலாண்மை அதிகாரம் தமிழக அரசால் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸுக்கு விஷால் அணியினர் பதில் சொல்லியிருந்தனர். ஆனால் அந்தப் பதில்கள் திருப்தியாக இல்லை என்றும், விஷால் அணியினர் பெரும் தவறு செய்திருப்பதாகவும், சங்கத்தில் நிதி முறைகேடு செய்திருப்பதாகவும், சங்கங்களின் விதிகளுக்கு அப்பாற்பட்டு சங்கத்தை வழி நடத்தியதாகவும் சொல்லி சங்கத்தின் நிர்வாகத்தை உடனடியாகக் கலைத்து தமிழக அரசின் பதிவாளர் துறையின் ஐ.ஜி. நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

TFPC-Govt-Order-Copy-01

TFPC-Govt-Order-Copy-3

TFPC-Govt-Order-Copy-7

TFPC-Govt-Order-Copy-8

TFPC-Govt-Order-Copy-4

TFPC-Govt-Order-Copy-5

TFPC-Govt-Order-Copy-1

TFPC-Govt-Order-Copy-1-1

TFPC-Govt-Order-Copy-2

இதன்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகக் குழு கலைக்கப்படுவதாகவும், மறு தேர்தல் நடத்தப்படும்வரையிலும் சங்கத்தை நிர்வகிக்க மத்திய சென்னை பகுதியின் நிர்வாகப் பதிவாளரான என்.சேகர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பாளராகச் செயல்படுவார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீக்கப்பட்ட தலைவரான விஷால் இன்று உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.

விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில், “தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை. நாங்கள் சமர்ப்பித்த விளக்கத்தை முழுவதுமாக ஆராயாமல் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

சங்கத்தில் எதிர்த்துக் கேட்க ஆளே இல்லை என்று நினைத்து இதுவரையிலும் யாரும் செய்யாத மாற்றங்களையெல்லாம் செய்து, பல தவறுகளையும் செய்து, அவற்றை நியாயப்படுத்த மேலும், மேலும் தவறுகளைச் செய்த விஷாலுக்கு இது தேவைதான்.

மேலும், அரசியல்வியாதிகளைப் பகைத்துக் கொண்டால் அவர்கள் சக்தியை எப்படியெல்லாம் காட்டுவார்கள்.. என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகிவிட்டது..!

விஷால் தான் செய்த தவறுகளையெல்லாம் இதெல்லாம் திரையுலக சங்கங்களில் சகஜம்தானே என்று நினைத்து கடந்து போக நினைத்திருந்தார். ஆனால் அது சட்டத்தின் கவனத்துக்குப் போகும்போது என்னவாகும் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்.

இதோடு விஷால் அனைத்து சங்கங்களின் பொறுப்புக்களிலிருந்தும் முற்றிலும் விலகிக் கொண்டு தான் உண்டு, தன் நடிப்பு உண்டு என்று இருப்பாரேயேனால் அவருக்கு நல்லது. அவரது நடிப்பு கேரியரும் சிறப்பாக மேலே உயரும்..!

Our Score