full screen background image

“அடுத்தக் கதையும் எனக்குத்தான் கொடுக்கணும்…” – செல்வராகவனிடம் ‘சீட்’ பிடித்த நடிகர் சூர்யா..!

“அடுத்தக் கதையும் எனக்குத்தான் கொடுக்கணும்…” – செல்வராகவனிடம் ‘சீட்’ பிடித்த நடிகர் சூர்யா..!

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘என்.ஜி.கே.’ என்னும் ‘நந்த கோபால குமரன்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். மேலும் தலைவாசல் விஜய், உமா பத்மநாபன், நிழல்கள் ரவி, இளவரசு, பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – கபிலன், விக்னேஷ் சிவன், உமாதேவி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ஆர்.கே.விஜய் முருகன், சண்டை இயக்கம் – அனல் அரசு, நடன இயக்கம் – கல்யாண், உடைகள் வடிவமைப்பு – பெருமாள் செல்வம், உடை அலங்காரம் – நீரஜா கோனா, வி.எஃப்.எக்ஸ் – ஹரிஹரசுதன், ஒலிப்பதிவு வடிவமைப்பு – சச்சின், ஹரி, இறுதிக் கலவை – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், கலரிஸ்ட் – ராஜசேகர், ஸ்டில்ஸ் – வி.சிற்றரசு, ஒப்பனை – வி.ராஜா, தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.ராஜேந்திரன், இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் – செல்வராகவன்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது.

IMG_3885

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, நாயகன் சூர்யா, நடிகர் சிவக்குமார், நாயகி சாய் பல்லவி, நடிகர் தலைவாசல் விஜய், நடிகை உமா பத்மநாபன், படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன், கலை இயக்குநர் விஜய் முருகன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, “இந்தக் குழுவில் முதன்முதலாக பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா இயக்கத்தில் பெண்களை விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும் கதாபாத்திரமாக பயணப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்தப் படத்தில் இருக்கும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்குத்தான் நான் பாடல் எழுதியிருக்கிறேன்.

uma devi

இத்தகைய திரைக் கலைஞர்களோடு எனது பாடல் வந்ததில் மகிழ்ச்சி. யுவனின் இசையில் என்னுடைய பாடல் சேர வேண்டிய இடத்திற்கு சேரும் என்று நம்புகிறேன். கார்த்திகிற்கு ‘மெட்ராஸ்‘ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ ஜோதிகாவிற்கு ‘வாடி திமிரா‘, சூர்யாவிற்கு இந்த படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். சூர்யா குடும்பத்திற்கு பாடல்கள் எழுதிவிட்டேன் என்கிற நிறைவு இருக்கிறது…” என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டுள்ளது..” என்றார்.

k.l.praveen

படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவின் பேசும்போது, “செல்வராகவன் இயக்கத்தில் பணி புரிய முதலில் பயமும், தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் அதை உடைத்துவிட்டார். யுவனின் மேஜிக்கும், செல்வராகவனுடன் கூட்டணியும் நன்றாக வந்திருக்கிறது. பல காட்சிகளை சிரமப்பட்டுத்தான் எடுத்திருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில் சூர்யாவின் அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் வடிந்தது…” என்றார்.

vijay murugan

கலை இயக்குநர் விஜயமுருகன் பேசும்போது, “இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பணியாற்றும் எல்லாப் படங்களிலும் என்னுடைய விருப்பத்திற்கு பணியாற்ற முடியாது. ஆனால் இப்படத்தில் ஆரம்பத்திலேயே எஸ்.ஆர்.பிரபும், செல்வராகவனும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாகப் பணியாற்றுங்கள் கூறினார்கள். படத்தில் சூர்யாவும், சாய் பல்லவியும் தங்களுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்…” என்றார்.

uma padmanabhan

நடிகை உமா பத்மநாபன் பேசும்போது, “நான் முதலில் சின்னத்திரையில்தான் அறிமுகமானேன். இந்த மே மாதத்தோடு நான் இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. 25-ம் வருடம் இயக்குநர் செல்வராகவன் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது நான் நினைத்துப் பார்க்காத விஷயம். சூர்யா எனக்கு மிகவும் பிடித்த நடிகர். இப்படத்தில் அவரைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் நான் இவ்வளவு சுலபமாக நடித்திருக்க முடியாது. சாய் பல்லவியும் சிறப்பாக நடித்திருக்கிறார்…” என்று கூறினார்.

sivakumar vijayan

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் பேசும்போது, “இப்படத்தில் ஒளிப்பதிவு செய்தது எனக்குப் பெருமையான விஷயம். செல்வராகவனின் இயக்கத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய எழுத்தை படிக்கும்போது கடினமான ஒரு சூழ்நிலையில் கேமராவின் கோணம் எப்படி அமைப்பது என்பதையும் அது எப்படி ஒரு பலமான படத்துக்குக் கொண்டு போகும் என்பதையும் உணர்ந்தேன். அதேபோல், சூர்யாவும் கடினமான சூழ்நிலையையும் பொருட்படுத்தால் படப்பிடிப்பில் ஈடு கொடுத்து நடித்தார்…” என்று கூறினார்.

Thalaivaasal Vijay

நடிகர் ‘தலைவாசல்’ விஜய் பேசும்போது, “இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நான் நடித்த முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’. அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் அவர் இயக்கத்தில் நடிக்கிறேன். ஆனால், இத்தனை வருடங்களுக்கு பிறகும் முதல் படத்தில் எப்படி பணியாற்றினாரோ, அதே துடிப்புடன் இப்போதும் இருப்பதைப் பார்த்து வியந்தேன். இளைஞர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும்…” என்றார்.

yuvan shankar raja

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது, “செல்வராகவனுடன் பல படங்கள் பணியாற்றியிருக்கிறேன். மேலும், அவர் கதை கூறும்போதே அதன் முக்கியத்துவத்தையும் கூறுவார். ஒவ்வொரு படத்தில் பணியாற்றும்போதும் சிறு, சிறு விஷயங்களையும் எப்படி பண்ணலாம் என்று ஆராய்ச்சி செய்வோம். அதேபோல், இப்படத்திலும் பணியாற்றியிருக்கிறோம்…” என்றார்.

sai pallavi

நடிகை சாய் பல்லவி பேசும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பள்ளி மாணவி போலத்தான் என்னை உணர்ந்தேன்.  நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டுதான் செல்வேன். ஆனால் இப்படத்தில் நான் தயார்படுத்திக் கொள்வது தேவையில்லை என்று உணர்ந்தேன்.

இப்படத்தில் நான் என்ன பெரிதாக கற்றுக் கொள்ள போகிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் செல்வராகவன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் செல்வராகவன் வல்லவர். சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்…” என்றார்.

s.r.prabhu

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது. “இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு இன்றுவரை குறையாமல் இருக்கிறது. அனைவரும் கேட்ட கேள்வி படம் வெளியாக எவ்வளவு காலம் ஆகும் என்றுதான். சில காரணங்களால் படம் நினைத்ததைவிட தாமதமாக வருகிறது. தாமதமானாலும் சரியான நேரத்திற்குதான் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் அழைத்த நேரத்தில் எந்த காரணமும் சொல்லாமல் பணியாற்றினார்கள். செல்வராகவன் எழுதிய கதை சிறிதும் மாறாமல் அப்படியே வந்திருக்கிறது. இப்படம் மே மாதம் 31-ம் வெளியாகும்…” என்றார்.

selvaraghavan

இயக்குநர் செல்வராகவன் பேசும்போது, “இந்தக் கதையின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போதே சூர்யாதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. நடிப்பில் மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் சிறு, சிறு விஷயங்களைக்கூட கூர்மையாக கவனித்து பேசுவார். சூர்யா இயக்குநரின் நடிகர். அவர் எனக்கு கிடைத்தது வரம். சாய் பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு சொல்வதைக் கேட்கும் திறமையான நடிகை…” என்று கூறினார்.

நடிகர் சூர்யா பேசும்போது, “மனித நேயத்தை என்றைக்குமே பயங்கரவாதம் ஜெயித்து விடக் கூடாது. சமீபத்தில் இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செய்வோம்…” என்று சூர்யா கேட்டதற்கிணங்க அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்பு மீண்டும் பேசத் துவங்கிய நடிகர் சூர்யா, “அரசியல் என்பது, ரத்தம் சிந்தாத யுத்தம். யுத்தம் என்பது, ரத்தம் சிந்தும் அரசியல். இதைத்தான் இந்தப் படமும் பேசுகிறது.

actor surya

செல்வராகவனின் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு ஒரு தீராத காதல் உண்டு. இந்தப் படத்தில் செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

14 ஆண்டுகளுக்கு முன்பேயே செல்வாவுடன் இணைந்து படம் செய்யும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போது இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியிருக்கிறது.

ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. நேரம் ஆனாலும் செல்வா சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருந்தார். செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி.. நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்வார்.

செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி அன்யோன்மான கணவன் மனைவி போல இருக்கும். யுவனின் இசையைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. காரில் பயணம் செய்யும்போது அவரின் பாடலைக் கேட்டுவிட்டு உடனேயே போனில் தொடர்பு கொண்டு ‘உன் கையைக் காட்டு; முத்தமிடுகிறேன்’ என்றெல்லாம் கூறியிருக்கிறேன்.

சாய் பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புத் தன்மையுடன் நடித்தார். இது தவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்து கொடுத்தார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள்.

என்னுடைய நடிப்புலக வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படத்திற்கான கதையைத் தயார் செய்யும்போது என்னை மனதில் வைத்து எழுதும்படியும், படம் எடுக்கும்போது மறக்காமல் என்னை அழைக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொள்கிறேன்…” என்றார் சூர்யா.

IMG_3864

‘நந்த கோபால குமரன்’ படத்தின் இசையை நடிகர் சிவக்குமார் வெளியிட படக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சோனி மியூசிக் சஞ்ஜய் வாத்வான், மோகன்தாஸ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ்ராஜா ஆகியோரும் படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.

Our Score