full screen background image

திரைப்பட ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் காலமானார்

திரைப்பட ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட் காலமானார்

பழம்பெரும் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று ஐந்து மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 30 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இயக்குநர்  ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ஏ.வின்சென்ட் ஸ்ரீதர் இயக்கிய கறுப்பு வெள்ளை படங்களில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர்.

vincent-cinematographer

தமிழில் ‘அமரதீபம்’, ‘யார் பையன்’, ‘உத்தமபுத்திரன்’, ‘கல்யாண பரிசு’, ‘விடிவெள்ளி’, ‘மீண்டும் சொர்க்கம்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘தேன் நிலவு’, ‘புனர்ஜென்மம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘சுமைதாங்கி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘அடிமைப்பெண்’, ‘துணைவன்’, ‘துலாபாரம்’, ‘கெளரவம்’, ‘இரு வீடுகள்’, ‘இரு துருவம்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்தமாளிகை’, ‘திருமாங்கல்யம்’, ‘அக்கரைப்பச்சை’, ‘நான் பிறந்த மண்’, ‘இளமைக்கோலம்’, ‘ஆனந்தக்கும்மி’, ‘ஞானப்பறவை’ என்று குறிப்பிடத்தக்க படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இதில் ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘துலாபாரம்’, ‘இரு வீடுகள்’, ‘திருமாங்கல்யம்’, ‘நாம் பிறந்த மண்’ ஆகிய படங்களை இயக்கிவரும் இவரே..!

vincent-1

‘உத்தமபுத்திரன்’ படத்தின் பாடல் காட்சிகளெல்லாம் இன்றைக்கும் ஒளிப்பதிவுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் ‘சொன்னது நீதானா’ பாடல் காட்சியின்போது கேமிரா கட்டிலின் மேலே அமர்ந்திருக்கும் முத்துராமனின் தலையில் இருந்து கீழேயிறங்கி கட்டிலுக்கு கீழே பயணித்து எதிரில் அமர்ந்து வீணை வாசித்தபடியே பாடிக்  கொண்டிருக்கும் தேவிகாவை காட்டும். இந்த ஒரு காட்சியை இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பாடமாகவே திரையுலகில் சொல்லி வருகிறார்கள்.

கலர் படங்களில் ‘காதலிக்க நேரமில்லை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘கெளரவம்’, ‘வசந்த மாளிகை’, ‘அடிமைப்பெண்’ ஆகியவை இன்றைக்கும் இவரது பெயரைச் சொல்கின்றன. தமிழ் ‘வசந்த மாளிகை’யின் ஹிந்தி ரீமேக்கான ‘பிரேம்நகர்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ‘பிலிம்பேர்’ விருதினை 1974-ம் வருடம் பெற்றிருக்கிறார்.

என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமையும் இவருக்குண்டு.

vincent-cinematographer-1

இவருடைய மகனான ஜெயனன் வின்சென்ட் தற்போதைய சினிமாவில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர். இவருடைய இன்னொரு மகன் அஜயன் வின்சென்ட்டும் திரைப்பட இயக்குநர்தான்.

மறைந்த ஒளிப்பதிவு மேதைக்கு எமது அஞ்சலிகள்..! 

Our Score