full screen background image

தமிழ்ச் சினிமாவின் 2014-ன் அரையாண்டு வெற்றி தோல்வி அலசல்..!

தமிழ்ச் சினிமாவின் 2014-ன் அரையாண்டு வெற்றி தோல்வி அலசல்..!

2014-ம் ஆண்டின் அரையாண்டு முடிவில் தமிழ்ச் சினிமாவுலகில் 101 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.

இதில் ஜனவரி மாதத்தில் ‘கோலிசோடா’ மட்டும் வெற்றியையும் தாண்டிய வசூல் கணக்கைத் துவக்கி வைத்தது. இதே மாதத்தில் வெளியான ‘ஜில்லா’வும், ‘வீரமும்’ கல்லாப் பெட்டியை நிரப்பியதாக கப்ஸாவிட்டன. பல இடங்களில் வாங்கிய விநியோகஸ்தர்கள்.. சில இடங்களில் வாங்கி திரையிட்ட தியைரங்கு உரிமையாளர்களுக்கு பலத்த நஷ்டத்தைத்தான் கொடுத்திருக்கி்னறன இந்த இரண்டு படங்களும்.

பிப்ரவரி மாதத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘புலிவால்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘பிரம்மன்’, ‘வல்லினம்’ போன்றவைகளெல்லாம் தோல்வியடைந்துவிட.. சப்தமில்லாமல் வந்த ‘தெகிடி’ சக்கைப் போடு போட்டு, தியேட்டர்காரர்களை காப்பாற்றியது.. இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்ல.. இந்தாண்டுக்கான ஹிட் பட லிஸ்ட்டிலும் இடம் பிடித்தது ‘தெகிடி’.

மார்ச் மாதத்தில் ‘நிமிர்ந்து நில்’, ‘குக்கூ’, ‘விரட்டு’, ‘நெடுஞ்சாலை’, ‘பனிவிழும் மலர்வனம்’ என்று பெயர் சொல்லும் படங்கள் ரிலீஸானாலும், பெயர் சொல்லிய படம் ‘நெடுஞ்சாலை’ மட்டும்தான்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிமிர்ந்து நில்’ படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் ஏற்பட்ட சிக்கல் அதன் வசூலில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.. திட்டமிட்ட நாளில் படம் ரிலீஸாகியிருந்தால் கூடுதலாக சில லட்சங்கள் தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கும்..

‘குக்கூ’ படம் விமர்சகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டாலும், கவித்துவம் வாய்ந்த நெஞ்சை உருக்கும் காட்சிகள் கொண்டதாக அமைந்ததால் அதிக ரசிகர்களைச் சென்றடையவில்லை.. ஆனாலும் தரமான படம் என்ற பெயரை எடுத்துவிட்டது..

‘நெடுஞ்சாலை’ படம் தயாராகி பல மாதங்களாகியும் விற்பனை செய்ய முடியாமல் தவியாய் தவித்து, கடைசியாக உதயநிதி ஸ்டாலினின் கடைக்கண் பார்வையினால் ரிலீஸானது.. படத்தின் பட்ஜெட் அதிகப்படியாக இருந்தமையினால் கிடைத்த வசூலை வைத்து படம் ‘ஹிட்’ என்று சொல்ல முடியாமல் போனது.. ஆனால் இந்த மார்ச் மாதத்தின் குறிப்பிடத்தக்க படம் ‘நெடுஞ்சாலை’ மட்டுமே..!

ஏப்ரல் மாதத்தில் ‘மான் கராத்தே’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய பெரிய படங்கள் ரிலீஸாகின. இதில் ‘மான் கராத்தே’ மட்டும் காரணமே இல்லாமல் தாறுமாறாக மே மாத கடைசிவரையிலும் தியேட்டர்களில் ஓடி வசூலைக் குவித்துவிட்டது..!

‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் விமர்சனங்கள் நன்றாக இருந்தும் பிக்கப்பாகாமல் போனது அதன் துரதிருஷ்டம். ‘நான் சிகப்பு மனித’னுக்கும் இதே கதிதான்.. படத்தின் பட்ஜெட்டை குறைத்திருந்தால் கிடைத்த வசூலுக்கு ஈகுவலாகிவிட்டது என்று சொல்லியிருக்கலாம். ‘தெனாலிராமன்’ படத்தில் டிவி ரைட்ஸின் மூலம் கிடைத்த லம்பத் தொகையினால் கூட-குறைய இல்லாமல் லேசான கடியோடு தப்பித்தார்கள் தயாரிப்பாளர்கள்..!

கடைசி வாரம் வெளியான ‘வாயை மூடிப் பேசவும்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் ஒரு வாரத்திலேயே மூட்டையைக் கட்டிவிட்டது. அதே நாளில் வெளியான ‘என்னமோ நடக்குது’ படம் திடீர் சக்ஸஸாக படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையால் மவுத்டாக்கில் பலம் பெற்று கூடுதல் தியேட்டர்களையும் பெற்று ஓடியது.. ஆனாலும் வசூல் குறைவுதான் என்று தயாரிப்பாளரே வருத்தப்படுகிறார்.. கூடவே ‘என்னமோ ஏதோ’ படமும் வந்து சுவடில் காணாமல் போனதில் அதன் ஹீரோ கவுதம் கார்த்திக்கிற்கு மிகப் பெரிய பின்னடைவுதான்..!

இந்த ஏப்ரல் மாதத்தின் சக்ஸஸ் படம் ‘மான் கராத்தே’ மட்டுமே..!

மே மாதத்தில் ‘அங்குசம்’, ‘யாமிருக்க பயமே’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘கோச்சடையான்’, ‘பூவரசம் பீப்பி’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்கள் ரிலீஸாகின.. இதில் திடீர் அதிர்ச்சியாக ‘யாமிருக்க பயமே’ ஓட்டமாய் ஓடியது.. “நிச்சயம் இந்தப் படத்தி்ன் வசூல், படத்தின் பட்ஜெட்டைவிட 2 மடங்குத் தொகையைத் தாண்டியது உ்ண்மை..” என்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

‘கோச்சடையான்’ ஓடியது என்றார்கள்.. “நல்ல வசூல்” என்றார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் யாருமே சரிவர கணக்குக் காட்டவில்லை.. அதன் தயாரிப்புக் கணக்குப்படி பார்த்தால் தியேட்டர் வசூலோ, டிவி ரைட்ஸின் மூலம் கிடைத்த பணத்தின் கூட்டலோ ஈடாகாது.. அந்த வகையில் ‘கோச்சடையான்’ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற கதைதான்..

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ – தெலுங்கை நம்பி அப்படியே தமிழில் எடுத்தார்கள். தமிழகத்து மக்கள் சந்தானத்தை காமெடியனாக மட்டுமே பார்க்க விரும்புவதாகச் சொல்லி புறக்கணித்துவிட்டார்கள்.. படத்தின் இயக்கம் தரமாக இருந்தும், படத்தில் விசேஷமாக எதுவும் இல்லாததால் தோல்வியடைந்தது.

‘பூவரம் பீப்பி’ நல்ல ரெஸ்பான்ஸோடு ரிலீஸானது. ஆனால் ரிலீஸான ஒரு மணி நேரத்திலேயே மவுத் டாக்கிலேயே படம் படுத்துவிட்டது.. இயக்குநரின் தவறுக்கு தயாரிப்பாளர் என்ன செய்வார்..?

இந்த மே மாதத்தில் வெற்றி படமாக அமைந்தது ‘யாமிருக்க பயமே’ மட்டுமே..!

ஜூன் மாதத்தில் ‘மஞ்சப் பை’, ‘உன் சமையலறையில்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘நான்தான் பாலா’, ‘உயிருக்கு உயிராக’, ‘வடகறி’, ‘வெற்றிச்செல்வன்’, ‘சைவம்’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’ ஆகிய சக்ஸஸ் சர்வே எடுக்கப்பட வேண்டிய படங்கள் ரிலீஸாகின.

இதில் ‘மஞ்சப் பை’ தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் தப்பிக்க வைத்துவி்டடது ராஜ்கிரணின் புண்ணியத்தில்..!! ‘உன் சமையலறையில்’, அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜே ஒத்துக் கொண்டதுபோல தோல்வியடைந்துவிட்டது..

‘நான்தான் பாலா’, ‘உயிருக்கு உயிராக’ ஆகியவை வந்ததை மட்டுமே பதிவு செய்திருக்கின்றன. ‘வடகறி’, ‘வெற்றிச்செல்வன்’ படங்கள் நிறைய எதிர்பார்ப்புடன் வந்து படத்தி்ல் ரசிக்கிற மாதிரி எதுவும் இல்லாததால், மூட்டையைக் கட்டிவிட்டன.

‘முண்டாசுப்பட்டி’ பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வந்து தரமான நகைச்சுவையால் இப்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.. இதற்குப் பின் வந்த ‘சைவம்’, சீரியல் டைப் கதை என்கிற லேசான முணுமுணுப்போடு விமர்சகர்களிடையே மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ‘என்ன சத்தம் இந்த நேரம்’ சத்தம் போடாமல் இந்த வாரம் தியேட்டர்களைவிட்டு வெளியேறும் எ்ன்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த ஜூன் மாதத்தில் எல்லைக் கோட்டைத் தொட்ட படங்கள் ‘மஞ்சப் பை’யும், ‘முண்டாசுப்பட்டியும்’தான்..!

இந்த ஆறு மாத காலக் கணக்குப்படி பார்த்தால் ‘கோலிசோடா’, ‘தெகிடி’, ‘நெடுஞ்சாலை’, ‘என்னமோ நடக்குது’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’, ‘மஞ்சப் பை’, ‘முண்டாசுப்பட்டி’ ஆகியவை மட்டுமே பெயர் சொல்லும் படங்களாக இருக்கின்றன.

இதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மூவருக்குமே லாபம் சம்பாதித்துக் கொடுத்தவை ‘கோலி சோடா’, ‘தெகிடி’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமே’ ஆகிய நான்கு படங்கள்தான் என்கின்றனர் திரையுலக புள்ளிவிவர கணக்குப் புலிகள்.

இவைகளின் உண்மையான வரவு செலவு கணக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், வருமான வரித்துறைக்கும் மட்டுமே தெரியும் என்பதால் நாம் இவ்வளவுதான் சொல்ல முடியும்..!

6 மாதங்களில் வெளியான 101 படங்களில் 4 படங்கள் மட்டுமே பட்ஜெட்டுக்கு மேல் வசூல் செய்து லாபம்..  மீதமிருக்கும் 97 படங்களும் ஏதோ ஒருவகையில் நஷ்டத்தைத்தான் சந்தித்திருக்கின்றன என்றால் சினிமா துறை முன்னேறிக் கொண்டிருக்கிறதா அல்லது பின்தங்கிப் போய்க் கொண்டிருக்கிறதா..?

புரியவில்லை..!

Our Score