full screen background image

சுற்றுலா – சினிமா விமர்சனம்

சுற்றுலா – சினிமா விமர்சனம்

முன்னுரையாக சொல்வதற்கு படத்தில் ஏதுமில்லை.. நேரா மேட்டருக்கே வந்திருவோம்..!

பிரஜன், மிதுன், ஸ்ரீஜி, அங்கிதா நால்வரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள். இப்போது வேறு வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் வேலைப் பளு காரணமாக ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார்கள்.

மிதுன் ஊட்டிக்கு வந்த்தற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அவனுடைய காதலி ஸ்ரீஜியுடன் ஊட்டியிலேயே திருமணத்தை முடிக்க நினைத்து அவளையும் வரழைக்கிறான். அவளை வேறொரு ஹோட்டலில் நண்பர்களுக்குத் தெரியாமல் தங்க வைக்கிறான்.

அந்த ஹோட்டல் முதலாளியான ரிச்சர்ட் கொஞ்சம் சைக்கோத்தனமானவர். தன்னை டிஸ்டர்ப் செய்பவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர். அந்த ஹோட்டலில் யாராவது ஒரு இளம் பெண் தனியாக வந்து தங்கினால் ரிச்சர்ட் அவரை அடைய நினைப்பாராம்(!). சூப்பர் கேரக்டர் ஸ்கெட்ச்.. இதற்கு ஹோட்டல் மேனேஜரும், ஊழியர்களும் உடந்தை.

இப்போது ஸ்ரீஜி வந்திருப்பது தெரிய வர ரிச்சர்டு ஹோட்டலுக்கு வருகிறார். ஸ்ரீஜியை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறார்.(இந்த அதிர்ச்சி எதற்கு என்று கிளைமாக்ஸில்தான் சொல்கிறார்கள். அதைக் கேட்டு நமக்கும் அதிர்ச்சியாகிறது)

மறுநாள் ஸ்ரீஜி மிதுனுக்காக காத்திருக்க.. மிதுனை நண்பர்கள் குழாம் பர்ச்சேஸுக்கு இழுத்துக் கொண்டு செல்கிறது. காத்திருந்து காத்திருந்து நேரம் போனதால் ஹோட்டலுக்கு திரும்ப எத்தனிக்கிறார் ஸ்ரீஜி. அப்போது இரண்டு ரவுடிகள் அவளைத் துரத்த.. பயந்து போய் பாதை மறந்து போய் ரிச்சர்டின் வீட்டுக்குள் வந்துவிடுகிறாள். அங்கே அவளை பார்க்கும் ரிச்சர்டு அவளை மிக மரியாதையுடன் நடத்தி கவனித்துக் கொள்கிறார். இங்கேயே தூங்கிவிட்டு காலையில் ஹோட்டலுக்கு போகும்படி சொல்கிறார். ஸ்ரீஜி மறுக்க.. அதற்கான சூழலை ரிச்சர்டு ஏற்படுத்த அங்கேயே தங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது ஸ்ரீஜிக்கு..

மறுநாள் ஹோட்டலுக்குத் திரும்பும் ஸ்ரீஜியை மிதுன் நண்பர்களுடன் வந்து சந்திக்கிறான். அவர்களது திருமணத்தை அடுத்த நாள் பதிவாளர் அலுவலகத்தில் நடத்துவதாக நண்பர்கள் வாக்குறுதி தருகிறார்கள். அந்த்த் திருமணத்தன்று ஸ்ரீஜி, ரிச்சர்டுக்கு போன் செய்து திருமணம் என்று சொல்லாமல் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைக்கிறாள். ஓடி வரும் ரிச்சர்டு ஸ்ரீஜியை கல்யாணக் கோலத்தில் பார்த்து அதிர்ச்சியாகிறார். கடும் கோபம் கொண்டவர்.. ஸ்ரீஜிக்கு திருமணம் செய்து வைத்த நண்பர்களை கொலை செய்ய நினைக்கிறார்.

இது எதற்கு.. ஏன்.. எப்படி.. ஸ்ரீஜிக்கும் ரிச்சர்டுக்கும் என்ன தொடர்பு? ஏன் கொலை செய்ய முயல்கிறார் என்பதுதான் மிச்சம் மீதி கதை..!  அதை தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்..

உருப்படியாய் நடித்திருப்பவர் ரிச்சர்ட் மட்டுமே.. கொஞ்சம் சைக்கோத்தனம் கலந்த வில்லன் கேரக்டர்.  சில காட்சிகளில் நடித்திருக்கிறார். பல  காட்சிகளில் வந்து போகிறார். ஆனாலும் இவரை மட்டுமே ரசிக்க முடிகிறது..

ஹீரோ மிதுன், ஹீரோயின் ஸ்ரீஜி, சண்ட்ரா, பிரஜன், இன்னொரு நண்பர் எல்லாரும் இருக்கிறார்கள். ஏதோ நடித்திருக்கிறார்கள். ஹீரோ மிதுன் பற்றி அவர் இன்னமும் சில படங்களில் நடித்த பின்புதான் சொல்ல முடியும்.. ஹீரோயின் ஸ்ரீஜி வரும் காட்சிகளில் கொஞ்சமேனும் நடித்திருக்கிறார். மற்றவர்களுக்கு வேலையே இல்லை..

ஊட்டியின் அழகை ரவி ஸ்வாமியின் கேமிரா அழகாகவே காட்டியிருக்கிறது. காட்சிகள் மட்டுமே ஸ்கிரீனில் பார்க்க அழகாக இருக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து பரணியின் இசை. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான்.. திகில் படங்களுக்கே உரித்தான பின்னணி இசையை மட்டும் காணோம்.. காதல் காட்சிகளுக்கும், துரத்துதல் காட்சிகளுக்கும் ஒன்றே போலவே இருக்கிறது பின்னணி இசை.

லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும்படியான திரைக்கதை. யாராவது ஒருவர் ஊர் விட்டு ஊர் வந்த உடனேயே மறுநாளே பதிவுத் திருமணம் செய்துவிட முடியுமா..? காலம் என்ன பாஸ்ட்ல போயிக்கிட்டிருக்கு.. இப்பவும் அதே சினிமாத்தனமாகத்தான் இருக்க வேண்டுமா..?

கொலைகள் செய்வதையும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசித்து செயல்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் கொடூரமாக இருக்கிறது.. இந்த அளவுக்கு சைக்கோத்தனமான ஆளை எப்படி ஊட்டி போலீஸ் விட்டு வைத்திருந்தது என்றும் தெரியவில்லை. “ஹீரோயின் காணவில்லை..” என்றவுடனேயே போலீஸிடம் போயிருக்கலாமே..? திரைக்கதைக்கு வசதியாக இழு, இழுவென்று இழுத்திருக்கிறார்கள். ஊட்டியாகவே இருக்கட்டும்.. அங்கே பன்னியை வேட்டையாடுவதுகூட குற்றம்தானே..

இயக்குநர் ராஜேஷ் ஆல்பிரட் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தாததால் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோ மேடை நாடகம் போலவே தென்படுகிறது. திகில் படம்.. திரில்லர் மூவி.. சஸ்பென்ஸ் திரைப்படம் என்றெல்லாம் விழாக்களில் சொல்லியிருந்த்தால் ஏக எதிர்பார்ப்போடு படம் பார்க்க உட்கார்ந்தால் எல்லாம் புஸ்வானமாகிவிட்டது.. ‘ஸ்ரீஜி அவரது அம்மா போல இருக்கிறார்’ என்கிற ஒரேயொரு சஸ்பென்ஸ் மட்டுமே இந்தப் படத்தைத் தாங்கிவிடுமா..? எப்படி இயக்குநர் இதை நம்பினார் என்று தெரியவில்லை.

இயக்குநர் அடுத்த படத்தில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score