முன்னணி தயாரிப்பாளரான சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனத்தின் கே.ஈ.ஞானவேல்ராஜாவும் இணைந்து தயாரிக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’.
இதில் விஷ்ணு விஷால், ‘அமரகாவியம்’ மியா ஜார்ஜ், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரவிக்குமார் இயக்குகிறார். இது இவருக்கு முதல் படம்.
படம் பற்றி இயக்குநரிடம் கருத்து கேட்டபோது சுற்றி வளைத்தெல்லாம் சொன்னாரே ஒழிய, இரண்டு வரிகளில்கூட சொல்ல மறுத்துவிட்டார். கதைக்கருவைக் கூட வெளியில் சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
‘இயக்குநர் உங்ககிட்ட கேட்டுக்கச் சொன்னார்’ என்று ஹீரோவிடமும், ஹீரோயினிடமும் ஏற்றிவிட்டு பார்க்க, அவர்களும் நம்மை புரிந்து கொண்டு ‘இதுக்கெல்லாமா நாங்க மயங்கிருவோம்..?’ என்றபடியே கதை பற்றி பேச மறுத்துவிட்டார்கள்..
இயக்குநர் ரவிக்குமார் பேசும்போது, “படத்தோட கதை என்னன்னு இப்பவே சொல்லிவிட்டால் படம் பற்றிய சுவாரசியம் போயிரும். அதனால் அதைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள்.
சுருக்கமா சொல்லணும்ன்னா.. ஒரு பெரிய பொருள் அல்லது விஷயம் ஹீரோ கைக்குக் கிடைக்குது.. அதை வச்சிக்கிட்டு அவர் என்ன பண்றாருன்றதுதான் படத்தோட ஒரு வரிக் கதை.
அதை ‘இன்று-நேற்று-நாளை’ என ஒரு வித்தியாசமான மேக்கிங்கில் கொடுக்கப் போறோம். இன்று ஆரம்பிக்கிற கதை நேற்று பிளாஷ்பேக்கில் நடந்த்தையும், நாளை எதிர்காலத்தில் நடக்கப் போவதையும் சொல்லும். இப்படி ரொம்பவே வித்தியாசமான கதையை அமைச்சிருக்கேன்..
திரைக்கதையில இப்படி ஒரு விஷயம் வர்றதுனாலதான் படத்துக்கு இந்தப் பொருத்தமான பெயரை வைத்தோம். இந்த மாதிரி ஒரு ஐடியா இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு நிச்சயமா சொல்லலாம். இந்தப் படம் தமிழ்ச் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு புதுமையான முயற்சியா இருக்கும்
இந்தப் படத்தோட கதையை முதன்முதலா தயாரிப்பாளர் சி.வி.குமார் சார்கிட்ட சொல்லும்போது, ‘நீ இப்போ என்கிட்ட சொல்றத அப்படியே ரசிகர்களுக்குப் புரிய வச்சிட முடியுமா?’ன்னு கேட்டாரு. ‘முடியும்’னு சொன்னேன், ஏன்னா இந்தப் படத்தோட திரைக்கதை அப்படிப்பட்டது. அந்தளவுக்கு இந்த படத்தில் நிறைய ட்விஸ்ட்டுகள் இருக்கு. ரசிகர்களுக்கு அதை புரியற மாதிரி எடுத்து, அவங்கள என் பக்கம் இழுக்க முடியும்னு நான் உறுதியா நம்புகிறேன்..” என்றார்.
ஹீரோயினான மியாவோ, ‘அமரகாவியம்’ படத்திற்கு பிறகு நடிக்கும் படம் இது என்பதால் கதையைக் கேட்டு அதில் மிகவும் இம்ப்ரஸாகித்தான் நடிக்க ஒத்துக் கொண்டதாகச் சொன்னார்.
“பொதுவாகவே எனக்கு ஒரு எய்மும் இல்ல. நான் அவரோட நடிக்கணும். இவரோட நடிக்கணும்னு நினைச்சு போராடிக்கிட்டு இருக்க மாட்டேன். இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும், மியா ஜார்ஜ் நடிச்ச படமா நல்லாதான் இருக்கும்னு மக்கள் சொல்ற மாதிரி படங்கள்ல நடிக்கணும். அவ்வளவுதான் நம்ம நோக்கம். இப்ப இந்த படம் அப்படிப்பட்ட படமா இருக்கும்னு தோணுச்சு. நடிக்கிறேன்…” என்றார்.
ஹீரோவான விஷ்ணு விஷாலும் மிகவும் ஜாக்கிரதையாக பேசினார். தப்பித் தவறிகூட தனது கேரக்டரை தாண்டி படத்தின் கதை பற்றிச் சொல்லக் கூடாது என்பதால் வார்த்தையை அளந்து, அளந்து பேசியது காமெடியாகத்தான் இருந்தது..
“முண்டாசுப்பட்டி’ படம் பண்ணிக்கிட்டிருக்கும்போதே ரவிக்குமார் இந்தக் கதையை என்கிட்ட வந்து சொன்னார். எனக்கும் பிடிச்சிருந்தது. இருந்தாலும் ‘ஜீவா’ படத்தோட கேமராமேன் மதி சார்கிட்ட ‘சார் நீங்க ரொம்ப நாளா பீல்டுல இருக்கீங்க… இப்படி ஒரு கதை என்னைத் தேடி வந்திருக்கு.. என்ன ஸார் செய்யலாம்?’னு கேட்டேன். ‘கதை உனக்கு பிடிச்சிருக்கா? நல்ல காமெடியா இருக்கா? கமர்ஷியலா இருக்கா? உன்னோட கேரக்டர் நல்லா இருக்கா? அப்புறம் என்ன யோசிக்காம நடி’ன்னு சொன்னார். அந்த வகையில டைரக்டர் ரவிக்குமார் சொன்ன கதை என்னோட சினிமா கேரியருக்கு புதுசா இருந்துச்சு.. அதனால ஓ.கே சொல்லிட்டேன்.
‘ஹீரோ கையில கிடைக்கிற ஒரு பொருள் அவனை என்னவா ஆக்குது..?’ என்பதுதான் கதை. இப்போதைக்கு இதுக்கு மேல கேட்காதீங்க.. ஆனா படம் முழுக்க காமெடிதான்.. ‘முண்டாசுப்பட்டி’க்கு பின்பு நான் நடிக்கிற முழு நீள காமெடி படம் இதுதான். இப்போ ஷூட்டிங்கே முடியப் போகுது..” என்றார்.
கதை திருட்டு, கோர்ட், வழக்கு என்று பலவித பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் நிலையில் இது போன்று கதையை லீக் செய்யாமல் எடுப்பதுதான் தங்களை காப்பாற்றும் என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இதுவும் ஒருவகையில் நல்லதுதான்..!