வீதிக்கு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-சன் டிவி ஒப்பந்த விவகாரம்..!

வீதிக்கு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-சன் டிவி ஒப்பந்த விவகாரம்..!

பல வருடங்களாக மூடி மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டு இருந்த ஒரு விஷயத்தை இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் போட்டு உடைத்தார் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை  சன் டிவி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் புகார் தெரிவித்துள்ளார்.

சன் டிவி-யின் தாய் நிறுவனமான சுமங்கலி பப்ளிகேஷன் உடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக 1995-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதியன்று ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

மூத்தத் தயாரிப்பாளரான கே.ஆர்.ஜி. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

“அந்த ஒப்பந்தத்தின்படி சுமங்கலி பப்ளிகேஷன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை தர வேண்டியுள்ளது. இத்தனை வருடங்களாக காணாமல் போய்விட்டதாக கதை விடப்பட்டு வந்த அந்த ஒப்பந்தத்தை போராடி மீட்டெடுத்திருக்கிறேன்..” என்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.

நேற்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் இது குறித்து பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போது, ‘’நமது சங்கத்தில் பல வருட காலமாக புதைந்திருந்த பிரச்சனை இதுதான். தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி நிறுவனத்துடன் நம் சங்கம் போட்டிருந்த ஒரு ஒப்பந்தம் திடீரென்று காணாமல் போய்விட்டது. அது களவாடப்பட்டுவிட்டது’ என்று அப்போது சொல்லப்பட்டு வந்தது.

அந்த அக்ரிமெண்ட் கிடைக்காததால் நம் சங்கத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் வர வேண்டியது வராமலேயே போய்விட்டது. இது சம்பந்தமாக சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில் பல முறை விவாதம் நடந்துள்ளது.

முதலில் அப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கிறதா.. இல்லையா.. அந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல நிர்வாகிகளுக்கும் தெரியும். அப்படியொரு ஒப்பந்தம் கையெழுத்தானது உண்மைதான்.

1995-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதியன்று அப்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கே.ஆர்.ஜி. இருந்தபோதுதான் சன் தொலைக்காட்சியுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி,

1. ஒரு வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும்.

2. அதே பாடல்கள் இரண்டாம் முறையாக ஒளிபரப்பு செய்யப்படும்போது ஒரு பாட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தரப்பட வேண்டும்.

3. அதற்கடுத்து எத்தனை முறை ஒளிபரப்பினாலும் ஒரு பாடலுக்கு 2 ஆயிரம் தரப்பட வேண்டும்.

4. தற்கான நிபந்தனையாக சன் தொலைக்காட்சியைத் தவிர, வேறு எந்த சேனலுக்கும் பாடல்களை தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கக் கூடாது. வேண்டுமானால் தூர்தர்ஷனுக்கு மட்டும் கொடுக்கலாம்.

5. இந்த ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுதல் வேண்டும். (ஆனால், அந்த முதல் ஆண்டுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.)

6. அப்படி புதுப்பிக்கப்படாதபட்சத்தில் அந்தக் குறிப்பிட்ட சேனல் தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக வாங்கிய பாடல் காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது.

ஆனால், கடந்த 25 வருட காலமாக சன் தொலைக்காட்சி, தயாரிப்பாளர் சங்கம் மூலமாக வாங்கிய அனைத்து பட பாடல்களையும் இன்றுவரையிலும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறது.

அதனால் கடந்த 25 வருடங்களுக்கும் சேர்த்து ஒளிபரப்பு கட்டணத் தொகையை அந்த நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தர வேண்டியுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 10 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால்கூட ஒரு நாளைக்கு 240 பாடல்கள்.

240 பாடல்களுக்கும் 2 ஆயிரம்வீதம் ஒரு நாளைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

இதையே 365 நாளுக்கு கணக்கு போட்டால் 17 கோடியே 52 லட்சம் ரூபாய் வருடாந்திர கட்டணம்.

இதுவே 25 வருடங்களுக்கு என்றால் 438 கோடி ரூபாய் வருகிறது.

கே.ஆர்.ஜி.க்கு பிறகு பல நிர்வாகங்கள் வந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சினை அவர்கள் பேசவே இல்லை.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு இப்படி பல கோடி ரூபாய்கள் வரவு வர வேண்டியது இருக்கும்போது நட்சத்திர நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் என்று சங்கம் பலரிடமும் கையேந்துவது ஏன்..?

சங்கத்திற்கு முறையாக வர வேண்டிய இந்தத் தொகையை சன் தொலைக்காட்சியிடம் பேசி வாங்கியிருக்கலாமே..? ஏன் கடந்த நிர்வாகங்கள் யாரும் இதைச் செய்யவில்லை..?

2000 கோடி, அல்லது 500 கோடி, ஏன் குறைந்தபட்சம் 100 கோடியாவது சங்கத்திற்கு வந்திருக்குமே. இது அனைத்து தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது.

இதை மூத்த நிர்வாகிகள் செய்யாமல் இருந்ததற்கு காரணம், அவர்களுடைய சுய லாபம்தான். இப்போது இந்த ஒரிஜினினல் ஒப்பந்தத்தை, நமது திரைத் துறையின் முக்கிய புள்ளியிடம் இருந்து போராட்டி மீட்டுக் கொண்டு வந்திருக்கேன்.

இந்தக் குற்றத்தில் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து மேலும், மேலும் பிரச்சனையை வளர்க்காமல், 1,300 தயாரிப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக ஒருமித்த கருத்தோடு சேர்ந்து சன் தொலைக்காட்சியிடம் பேசினால் நமக்கான உரிமை உடனேயே கிடைக்கும்.

அப்படி நமக்கு வர வேண்டிய தொகை வந்தாலே போதும்.. தற்போது நடைமுறையில் இருக்கும் 12 ஆயிரம் ரூபாய் பென்ஷனை 20 ஆயிரம் ரூபாய் ஆக்கலாம். அனைவருக்கும் வீடும் கிடைக்க வாய்ப்புண்டு.

இதனால், மொத்தமாக அந்த சேனல் மீது நாம் குற்றச்சாட்டினை வைக்க முடியாது. நாம்தான் தவறவிட்டோம். அவர்களை குறை சொல்ல முடியாது. இனிமேலாவது அந்த சேனலிடம் முறையாக சொல்லி நம் பணத்தினை மீட்டெடுப்போம். அனைவரும் இதற்காகவாவது ஒன்று சேர்வோம்.. வாருங்கள்..” என்று சொல்லி முடித்தார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.

அவர் சொல்வதுபோல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி பணம் வர வேண்டியது இருக்க... நட்சத்திர நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட் என்றெல்லாம் சங்கம் ஏன் தவியாய் தவிக்கிறது என்கிற கேள்விதான் இப்போது எழுகிறது.

இதோ அந்த ஒப்பந்த பத்திரம்.