full screen background image

ஸ்டார் – சினிமா விமர்சனம்

ஸ்டார் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கவின், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம், மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், சஞ்சய் ஸ்வரூப், ‘ராஜா ராணிபாண்டியன், தீப்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – இளன், ஒளிப்பதிவு – எழில் அரசு.கே., இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ், தயாரிப்பு – ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட், ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா, இணை தயாரிப்பாளர்கள் – பி.ரூபக் பிரணவ் தேஜ், சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன், தயாரிப்பாளர்கள் – பி.வி.எஸ்.என்.பிரசாத், ஸ்ரீநிதி சாகர், எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் வெளியீடு, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

தமிழ்ச் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத் வரிசையில் தானும் ஒரு மிகப் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஒரு இளைஞன், அந்த ஸ்டாரை எட்டிப் பிடித்தானா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களம்.

கலை’ என்னும் கவின் பெரிய சினிமா நடிகராக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனது அப்பாவால் சிறு வயதிலிருந்தே வளர்க்கப்படுகிறார். அவரது அப்பாவான லால் தான் பட்ட கனவை தனது மகனாவது நிறைவேற்றுவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார். கலையும் தனது பள்ளிப் பருவத்திலேயே ரஜினியின் படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்து தனது கலை ஆர்வத்தை பரப்புரை செய்து வருகிறார்.

இப்படி சினிமாவில்  ஆர்வமுள்ளவராக வளர்ந்திருக்கும் கலை விஸ்காம் படிக்க விருப்பப்பட்டும், அவரது அம்மா கீதா கைலாசத்தின் எதிர்ப்பினால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வேண்டாவெறுப்பாகப் படிக்கிறார்.

அங்கு அவர் சந்திக்கும் மீரா என்ற ப்ரீத்தி முகுந்தனை காதலிக்கவும் செய்கிறார். சினிமாவுக்குள் நுழைவதற்கான அடையாளமாக நடிப்புப் பயிற்சியைப் பயில மும்பையில் உள்ள ஒரு பயிற்சி பட்டறையின் ஆடிஷனுக்கு செல்கிறார் கலை. ஆனால் அங்கு அவர் நிராகரிக்கப்படுகிறார்.

மேலும், மேலும் தொடர்ந்து விடாமுயற்சியாய் முயல கடைசியாக ஒரு வாய்ப்பு வருகிறது. பெங்களூருக்கு ஷூட்டிங்கிற்கு வரச் சொல்கிறார்கள். போகும் வழியில் விபத்துக்குள்ளாகுகிறார் கலை. இதன் காரணமாக அவருடைய முகத்தில் நீக்க, முடியாத அளவுக்குத் தழும்பு ஏற்பட்டு விடுகிறது.

இதனால் சினிமா ஹீரோ என்ற அவரது லட்சியம் குலைந்து, கலையை சினிமாவைவிட்டு விலகச் செய்கிறது. மேலும் அதே நேரத்தில் காதலியும் அவரைவிட்டுப் பிரிகிறார். தனது சினிமா கனவை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறான் கலை.

கலை விரக்தியின் விளிம்பில் இருக்கும் நேரத்தில் அவனது வாழ்க்கையில் சுரபி நுழைகிறாள். கல்லூரியில் கலையை ஒன் சைடாக காதலித்து வந்திருக்கும் சுரபிக்கு மீராவின் விலகல் தெரிந்ததால், இப்போது கலையை தான் மனசார விரும்புவதாகச் சொல்கிறாள்.

தன் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் சுரபியைத் திருமணம் செய்து கொள்ளும் கலை வேறொரு வேலைக்கும் போய்க் கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் மீண்டும், மீண்டும் நடிப்புப் பற்றிய ஆசையும், வாய்ப்பும் கலையின் கண் முன்னால் வந்துபோக தவியாய் தவிக்கிறான் கலை.

இறுதியில் கலை தனது வாழ்நாள் கனவை அடைந்தானா..? ஒரு ஸ்டாராக ஜொலித்தானா..? இல்லையா?… என்பதுதான் படத்தின் மீதமான திரைக்கதை.

கலை’யாக நடித்திருக்கும் நாயகன் கவின் பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவன் தோற்றத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சினிமாவில் ஸ்டாராக வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காகப் போராடும் அந்தக் ‘கலை’ என்ற இளைஞனின் பாத்திரத்தில் தான் சந்திக்கும் அவமானம், ஏமாற்றம், கேலி, கிண்டல், தோல்வி, வலி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒன்று திரட்டி தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் கவின்.

கல்லூரியில் பெண் வேடமிட்டு அவர் ஆடும் ஆட்டம் தியேட்டரில் அப்ளாஸ் வாங்குகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் கவினின் நடிப்பும் சிம்ப்ளி சூப்பர்ப்..! மொத்தமாய் டயலாக் டெலிவரி முதல் உடல் மொழிவரை அனைத்திலும் பெஸ்ட் ஸ்டூடண்ட் பரிசினைப் பெறுகிறார் கவின்.

அவரது அப்பா ‘பாண்டியனாக’ நடித்திருக்கும் லால், ஒரு பாசமிக்க தந்தையாக தன் நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதில் இடம் பிடிக்கிறார். “நீ தோத்துட்டடா…” என்று நிஜத்தை சொல்லி மகனிடம் சண்டையிடும் காட்சியில் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் லால்.

இன்னொரு பக்கம் அம்மா கமலா’வாக நடித்திருக்கும் கீதா கைலாசம் தனது உணர்ச்சிகரமான நடிப்பினால் பல காட்சிகளில் நம் கண்களை குளமாக்கியிருக்கிறார். விபத்துக்குள்ளான தன் மகனைப் பார்க்க வந்து புலம்பித் தள்ளுமிடத்தில் இப்படியொரு அம்மா நடிகையா என்று ஆச்சரியமும் பட வைத்திருக்கிறார்.

‘மீரா மலர்க்கொடி’யாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனும், ‘சுரபி’யாக நடித்திருக்கும் அதிதி போஹங்கர் இருவரும் கதையின் நாயகிகளாக தங்களது நேர்த்தியான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். கவினுடனான இவர்களது கெமிஸ்ட்ரியும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

மேலும் மதம் கடந்த உறவுகளுக்கு உதாரணமாக நடித்திருக்கும் மாறன், சினிமாவில் வாய்ப்பில்லாமல் இப்போது ஐஸ் விற்று வரும் முன்னாள் நடிகரான காதல் சுகுமார், சுரபியின் அப்பவாக நடித்திருக்கும் ராஜா ராணி பாண்டியன், மும்பையில் நடிப்பு கோச்சாக வரும் சஞ்சய் ஸ்வரூப், அலுவலக முதலாளி தீரஜ் என்று அனைவருமே தங்களது கதாப்பாத்திரங்களுக்கேற்ற நடிப்பினை காண்பித்து இயக்குநரின் திறமைக்கு உதாரணமாகியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எழில் அரசின் கேமிராவில் பதிவாகியிருக்கும் அனைத்துவித வித்தைகளும், இந்தப் படத்தை யூத்துகளின் படம் என்பதாக நமக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. நடனக் காட்சியையும், கிளைமாக்ஸ் காட்சியையும் படமாக்கியவிதம் பாராட்டுக்குரியது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மெலோடிபாடல் அருமை. கிளைமாக்ஸ் சிங்கிள் ஷாட் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை அந்தக் காட்சியுடன் நம்மை ஒன்ற வைத்துள்ளது.

படத் தொகுப்பாளரான பிரதீப் ஈ.ராகவ் படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். இடைவேளைக்குப் பின்பு நிறைய இடங்களில் கொட்டாவிவிட வைக்கும் அளவுக்கு திரைக்கதையை இழுத்தது ஏன் என்று தெரியவில்லை.

ஒரு தந்தை தன் வாழ்க்கையில் தான் கனவு கண்டு அது நிறைவேறாமல் போனால், அதனை தனது பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயல்வது இயல்பு. அதுபோலத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் இளன். தனது அப்பாவான நடிகர் ராஜா ராணி’ பாண்டியனின் சினிமா கனவை தன்னுடைய இயக்கம் மூலமாகத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஒரு நிஜமான அப்பா, மகன் கதையைத்தான் இயக்குநர் இளன் இதில் எடுத்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் படத்தின் உருவாக்கத்தில்தான் சிற்சில தவறுகளை செய்திருக்கிறார் இளன். படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் சான்ஸ் தேடுவதாக வைத்திருந்தால்கூட பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றிவிட பல திரைக்கதைகள் உதவியிருக்கும். ஆனால் கல்லூரி காதல்களும் இடையில் வந்து, வந்து சென்று நம் கவனத்தைத் திசை திருப்பியிருக்கிறது.

அதோடு முகத்தில் ஏற்பட்ட தழும்பும் கலைக்கு பேக்டிராப்பாக அமைகிறது என்றால் இதிலொன்றும் வியப்பில்லையே..! ஹீரோக்களுக்கு முகம்தானே அழகு. தோற்றம்தானே அடிப்படை தகுதி. இந்த நேர்மறையான விஷயத்தை நேர் பார்வையில் கலை அணுகுவதைப் போல திரைக்கதை அமைத்திருந்தால் உண்மைக்கு மிக அருகில் இந்தப் படம் வந்ததுபோல இருந்திருக்கும்.

சினிமாவில் முயற்சி செய்து கொண்டேயிருங்கள். எப்போது உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இருக்கிறதோ அப்போதுதான் அது கிடைக்கும் என்பதாக படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். இந்த பாஸிட்டிவ் முடிவுக்காக இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

RATING : 3.5 / 5

Our Score