full screen background image

இதயம் முரளி – சினிமா விமர்சனம்

இதயம் முரளி – சினிமா விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ‘#STR49’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4-வது படைப்பாக, முழுக்க, முழுக்க இளைஞர்கள் கொண்டாடும் ரொமான்ஸ் திரைப்படமாக, இந்த ‘இதயம் முரளி’ படத்தைத் தயாரித்துள்ளது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures.

இந்த “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தமிழ்ச் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், நட்டி, தமன், நிஹாரிகா, ரக்சன், திராவிட், ஏஞ்சலின், பிரக்யா நாக்ரா, சுதாகர், யாஷஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர், இயக்குனர் – ஆகாஷ் பாஸ்கரன், இசை – தமன் S, ஒளிப்பதிவாளர் – CH சாய், படத்தொகுப்பாளர் – பிரதீப் இ ராகவ், தயாரிப்பு வடிவமைப்பாளர் – எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார், வசனங்கள் – ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம், பாடல் வரிகள் – விவேக், நடன இயக்குனர் – ஷோபி, ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி சிங், ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன், போஸ்ட் புரொடக்‌ஷன் மேற்பார்வையாளர் – குணசேகர்.எம், விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன்.

இயக்குநர் கதிரின் இயக்கத்தில் முரளியின் நடிப்பில் 1991-ம் ஆண்டு வெளிவந்த இதயம்’ என்ற திரைப்படம் முரளிக்கு மிகப் பெரிய ஹிட்டை கொடுத்தது.

அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்ச் சினிமாவில் காதல்’ என்ற ஒரு வார்த்தையை, அத்தனை இயக்குர்களும் கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் மிக டீசண்டான ஒரு தலை காதலைச் சொன்ன படம்தான் ‘இதயம்’.

இப்போது முரளியின் மகன் அதர்வா முரளியின் நடிப்பில் இதயம் முரளி’ என்கின்ற ஒரு கவர்ச்சிகரமான தலைப்பில், அதே மாதிரியான காதல் திரைப்படமாக இந்தப் படம் வந்துள்ளது.

கதையின் நாயகன் அதர்வாவுக்கு டுடோரியல் படிக்கும்போது துவங்கும் முதல் காதல் தோல்வி அடைகிறது. அதற்கு பின்பு அடுத்த காதல் ஒரு மருத்துவரிடம் இருந்து துவங்குகிறது. இந்த காதலும் பிரிந்து போக  அடுத்த காதலை பார்க்கிறார் அதர்வா. கடைசியில் அதுவும் தோல்வி அடைகிறது.

வேறு என்னதான் செய்வது? தனக்கும் காதலுக்கும் ராசி இல்லை என்று நினைத்த அதர்வா, தன்னை வளர்த்தெடுத்த மாமாவான தட்டி நடராஜ் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் செய்து கொள்கிறார்.

இந்த நிலையில் அவர் முதன்முதலில் காதலித்த அந்தப் பெண் எதிரில் வந்து நிற்க இப்போது அவருடைய மனம் ஊசலாடுகிறது. முதல் காதலியை திருமணம் செய்யலாமா.. அல்லது இப்போது நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்வதாக என்ற குழப்பத்திற்கு உள்ளாகிறார் அதர்வா.

கடைசியில் அவர் யாரை திருமணம் செய்தார்? அவருடைய காதல் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த இதயம் முரளி’ படத்தின் கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் அதர்வா தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் அவருடைய முகம் காட்டுகின்ற அந்த காதல் வெட்கமும், புன்சிரிப்பும், கவனயீர்ப்பும் அப்படியே முரளியை பார்த்தது போலவே இருக்கிறது. இதற்கு முந்தைய படங்களில் இருந்து ரொமான்ஸ் நடிப்பில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருக்கிறார் அதர்வா. பாராட்டுக்கள்!

ஹீரோயின்கள்அதர்வாவின் மனதை கவருகிறார்களோ.. இல்லையோ.. படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார்கள். அவர்கள் இருவரின் அழகும் நடிப்பும் காதல் காட்சிகளில் அவர்கள் காட்டுகின்ற சின்ன சின்ன முக பாவனைகளும் இதுவரையிலும் காதலிக்காதவர்களைக்கூட காதலிக்கலாமே என்று நினைக்க வைத்திருக்கிறார்கள்.

அதர்வாவை சிறுவயதிலிருந்து தூக்கி வளர்த்து படிக்க வைத்து இப்போது மிகப் பெரிய ஆளாக உருவாக்கி இருக்கும் நடித்திருக்கும் நட்டி நடராஜ் தன்னுடைய கேரக்டருக்கேற்ற நடிப்பை காண்பித்திருக்கிறார்.

இறுதியில் தன்னுடைய மருமகனுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து அவனது வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து அந்தத் திருமணம் ரத்து செய்யப்படுகிறது என்கிற முடிவை பகிரங்கமாக மைக்கில் சொல்லுகின்ற அந்தக் காட்சியிலேயே அவருடைய அழகான குணச்சித்திர நடிப்பை கொடுத்திருக்கிறார் நட்ராஜ்.

இசையமைப்பாளர் தமன் ஒருவர்தான் படத்தில் முகம் காட்டாமல் நடிக்க வராமல் அமைதியாக தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கும் மஞ்சள் தண்ணீர் தெளித்து உள்ளே அழைத்து வந்துவிட்டார்கள். மருத்துவராக நடித்திருக்கும் தமனும், பல படங்களின் நடித்த அனுபவசாலியை போல பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

தமனை காதலிக்கும் நிஹாகரிகாவும் ஒரு ஹீரோயின் போலவே படம் முழுக்கவும் வலம் பெறுகிறார். அவரும் தன்னுடைய தெய்வீக காதலை இழந்துவிட்டு பின்பு காதலனை மறக்க முடியாமல் கல்யாணத்தன்று வந்து ரகளை செய்கின்ற காட்சியிலும் வெகுமாக கவர்ந்து நிற்கிறார்.

ரக்ஷனும் ஏஞ்சலினாவும் இன்னொரு காதலர்களாக நடித்து படத்திற்கு அழகைக் கூட்டி இருக்கிறார்கள். ஏஞ்சலீனாவுக்கு இன்னமும் நிறைய காட்சிகளை வைக்காத இயக்குநருக்கு நமது வன்மையான கண்டனங்கள்!

தமனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணாக சில காட்சிகளில் வரும் அஞ்சு சூரியனும் சிறிய அளவுக்கு நடித்திருக்கிறார்.

மிகப் பெரிய பான் இந்திய நடிகையான மாளவிகா மோகனனும் அதர்வாவை திருமணம் செய்யப் போகும் பெண்ணாக வந்து கடைசியில் அதர்வாவை திட்டிவிட்டுப் போகிறார்.

அதர்வாவின் கேரியரிலேயே இந்தப் படம்தான் மிக அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது போலும்! படத்தில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையும், படப்பிடிப்பு தளங்களில் எண்ணிக்கையும் கூடியிருக்கிறது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டுக்கேற்ற ஒரு ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. ஆனாலும் சென்னையில் எடுத்த காட்சிகளைவிடவும் அமெரிக்காவில், நாசாவில் எடுத்த காட்சிகள் கொஞ்சம் டிம்மாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதையெல்லாம் தாண்டி படத்தில் நடித்திருக்கும் அனைத்து ஹீரோயின்களையும் அவ்வளவு அழகாக படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். இப்போதைய யூத்துகளுக்கு ஏற்றவாறு துள்ளலான இசையோடு அழகான நடனத்தோடு வருவது போல இசையமைத்து இந்த வருட மேடை கச்சேரிகளை இப்போதே கைப்பற்றி விட்டார் இசையமைப்பாளர் எஸ்.தமன்.

கொஞ்சம் செய்தாலும் நிறைய குழப்பம் வரக் கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்தும் எந்தக் குழப்பமும் இல்லாமல் அழகாக படத்தொகுப்பினை செய்து கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ்.

கதை திரைக்கதையை விட்டுவிட்டு கூடுதலாக வசனங்களால்தான் இந்தப் படத்தில் சிற் சில இடங்களில் சிரிக்க முடிந்திருக்கிறது. வசனங்களை எழுதிய ரமணகிரி வாசன், ஆகாஷ் பாஸ்கரன், ரவி செல்வம் மூவருக்கும் நமது பாராட்டுக்கள்.

ஹீரோக்களின் ஒரு தலை காதலும் ஹீரோயின்களில் பாராமுகமும் திருமணத்தில் ஏற்படும் குழப்பங்களுமாக ஏற்கனவே பல திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன.

அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்தாலும், கதையைச் சொன்ன விதத்திலும் ஆர்டிஸ்ட்டுகளின் அணிவகுப்பிலும் இந்தப் படம் சற்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இருந்தாலும் இன்னமும் மிகச் சிறந்த காமெடி காட்சிகளையும் திரைக்கதையின் வேகத்தையும் கூட்டுவது போல செய்து இருந்தால் படம் பெரிய வெற்றியை பெற்று இருக்கும்.

RATING : 3.5 / 5

Our Score