full screen background image

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தேர்தல்..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தேர்தல்..!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தில் எழுத்தாளர்களுக்கென்று பிரத்யேகமாக இருக்கும் சங்கம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம்.

1973-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தச் சங்கம் அந்தக் காலத்திய நடைமுறைப்படி தென்னிந்தியா முழுமைக்குமான சங்கமாக துவக்கப்பட்டது. காலப்போக்கில் மற்ற மூன்று மாநிலங்களிலும் தனித்தனி திரைப்பட எழுத்தாளர் சங்கம் உருவாகி பிரிந்து போனாலும், தாய் சங்கமாக இந்தச் சங்கம் இன்னமும் தனது பெயரை மாற்றிக் கொள்ளாமலேயே இருக்கிறது.

தற்போது இந்தச் சங்கத்திற்கு இயக்குநர் விக்ரமன் தலைவராகவும், கவிஞர் பிறைசூடன் பொதுச் செயலாளராகவும், இயக்குநர் ரமேஷ் கண்ணா பொருளாளராகவும் இருக்கிறார்கள்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்கு தேர்தல் நடப்பது வழக்கம். இப்போது இருக்கும் நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால், மீண்டும் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரி 10-ம் தேதியன்று நடைபெற்ற இந்தச் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய தலைவராக பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மற்ற செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தி பொறுப்பாளர்களை தேர்வு செய்யலாம் என்று கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று நடைபெற்ற சங்கத்தின் செயற்குழு முடிவு செய்தது.

இதன்படி வரும் மார்ச் 18, ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள்.

சங்கத்தின் தேர்தலை நடத்தித் தருவதற்காக ச.செந்தில்நாதன் என்னும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள்(இரண்டு நபர்கள்), இணைச் செயலாளர்கள்(நான்கு நபர்கள்), செயற்குழு உறுப்பினர்கள் 12 நபர்கள் என்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் கட்டணமாக 5,000 ரூபாயாகவும், துணைத் தலைவர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் பதவிக்கான தேர்தல் கட்டணமாக 3,000 ரூபாயாகவும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 1,000 ரூபாயும் தேர்தல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 100 ரூபாயை செலுத்தி வேட்பு மனுவை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான வேட்பு மனுக்கள் வரும் பிப்ரவரி 26, மற்றும் 27 ஆகிய இரு நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 28, மார்ச் -1, மார்ச் -2 ஆகிய மூன்று தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் சங்க அலுவலகத்தில் நடைபெறும்.

வேட்பு மனு பரிசீலனை மார்ச் -3-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும்.

வேட்பு மனுவை திரும்பப் பெறுபவர்கள் மார்ச் 4 முதல் மார்ச் 6-ம் தேதிவரையிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரையிலுமான நேரத்தில் சங்கத்திற்கு நேரில் வந்து செய்து கொள்ளலாம்.

வேட்பாளர் இறுதிப் பட்டியல் மார்ச் 7-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

தேர்தல் வரும்மா ர்ச் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வடபழனி, கமலா தியேட்டர் அருகில் இருக்கும் திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும்.

வாக்குப் பதிவுகள் முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Our Score