தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப் பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்பத்து இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
மக்கள் மனம் கவர்ந்த நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் இப்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார் சிவா.
பால்ய காலத்தில் இருந்து இன்றுவரை சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’ படத்தில் வரும் ‘நெருப்புடா’ பாடலை எழுதியதன் மூலம் மிகவும் பிரபலமான கவிஞரும், பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தைத்தான் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் சத்யராஜ் சார் அப்பாவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மகளாகவும் நடிக்கிறார்கள். இளவரசு, ரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனின் நெருக்கமான நண்பரான தர்ஷன் நடிக்கிறார்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல்.ரூபன் படத் தொகுப்பு செய்கிறார். பல்லவி சிங் ஆடை வடிவமைப்பாளராகவும், வின்சி ராஜ் டிசைனராகவும் பணி புரிகிறார்கள்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் ஒரு மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.
தனது புதிய அவதாரமான தயாரிப்பாளர் வேடம் பற்றி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “திரைத்துறைதான் எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்தது. இந்தத் துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றியபோது எல்லா நிலைகளிலும் என்னுடம் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன்.
அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவன் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறான். நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன்தான் என்பதால் அருண் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்த கதையை என்னோடு பொருத்தி பார்க்க முடிந்தது.
இப்படிப்பட்ட திறமையான கலைஞர்களின் கலவையான குழுவின் மூலம், சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன். கதையிலும், உணர்விலும் இந்த படம் மிக பிரமாண்டமாக இருக்கும்.
திருச்சி மாவட்டத்தின் லால்குடியில் இன்று பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளோம். நான், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், ஒரே ஊர்க்காரர்கள். அதுதான் எங்களது முதல் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கிய காரணம்.
இந்த நேரத்தில் என் பயணத்தில் எனக்கு தொடர்ந்து பேராதரவை அளித்து வரும் மீடியாக்கள், என் நலம் விரும்பிகள், என் ரசிகர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய இந்த புதிய துவக்கத்திற்கும் வழக்கம் போல நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்…” என்றார் சிவகார்த்திகேயன்.