பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.
இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும் படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.
‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தலைவரான முத்தரசன் பேசும்போது, “இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன்தான்.
ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த என் கொழுந்தியாள், எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது “போடு போடு நல்லா போடு” என்று சொல்லி கிண்டல் செய்தார். எனக்கு அப்போது அது புரியவில்லை.
பிறகு ‘முந்தானை முடிச்சு’ படத்தைப் பார்த்த பிறகுதான் அன்று ‘நிறைய போடு’ என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது .முருங்கைக்காய்க்குள் இப்படியொரு ரகசியம் அப்படி இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது.” என்றார்.