“நித்தியானந்தா பற்றிய படமா..?” – தயாரிப்பாளர் புகார்..!

“நித்தியானந்தா பற்றிய படமா..?” – தயாரிப்பாளர் புகார்..!

நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை முன்னிறுத்தி கன்னட மொழியில் 2013-ம் வருடம் ‘யாரிவனு’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகி வெளியானது.

இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போதே படத்தின் கதை லீக்காகி பெரும் பரபரப்பானது. நித்தியானந்தா தரப்பு இந்தப் படத்தை ரிலீஸாகாமல் தடுக்க தன்னாலான அனைத்து வழிகளையும் செய்து பார்த்தார்கள். ஆனால் அதனையும் மீறி அந்தப் படம் கர்நாடகாவில் ரிலீஸாகி ஆவரேஜாக ஓடி முடிந்தது.

sorkkam en kailyiel-poster

இப்போது இதே படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். சொர்க்கம் என் கையில் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த டப்பிங் படத்தையும் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக் கூடாது என்று நித்தியின் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர் தொலைபேசி மூலம் தன்னை மிரட்டுவதாக இப்படத்தின் ஹீரோவும்,  இயக்குநருமான மதன் பட்டேல் புகார் கூறியிருக்கிறார்.

இது குறித்து நேற்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் மதன் பட்டேல்.

அப்போது அவர் பேசும்போது,நமது நாட்டில் நல்ல சாமியார்களும், போலி சாமியார்களும் உள்ளனர். போலி சாமியார்கள் செய்யும் சீர்கேட்டையும், ஆபாச, வக்கிர செயல்களையும் எடுத்துக்கூறும் வகையில்தான் ‘யாரிவனு’ என்ற பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளேன். இந்த படம் கடந்த 2013-ம் ஆண்டு கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

இந்தப் படம் தற்போது, ‘சொர்க்கம் என் கையில்’ என்ற தலைப்பில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, தணிக்கை வாரியத்திடம் முறையான அனுமதி பெற்று திரையிட தயாராக உள்ளது. படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ‘சி.என்.என். பிக்சர்ஸ்’ நிறுவனம் முன் வந்தது.

sorkkam en kayil-movie

ஆனால் படத்தை வெளியிட விடாமல் அந்த நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் மர்ம நபர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். கன்னட மொழியில் திரையிட்டபோது நித்யானந்தா ஆதரவாளர்கள் படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

கர்நாடக ஐகோர்ட்டை அணுகியபோது, படத்தை வெளியிடுவதற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு பின்னர்தான் படம் திரையிடப்பட்டது. ஆகையால் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட விடாமல் மிரட்டல் விடுப்பவர்களும் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள்தான் என்று கருதுகிறேன்.

படத்தில் 5 சாமியார் கதாபாத்திரங்கள் உள்ளன. படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை. படம் நித்யானந்தாவை சித்தரித்து எடுத்திருந்தால், அவர் அதனை நிரூபிக்கட்டும். அப்படி நிரூபித்தால் படத்தை நான் வெளியிட மாட்டேன். மிரட்டல் காரணமாக பட விநியோகஸ்தர்கள் வெளியிட முன் வராததால் இப்போது நானே என் படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளேன். எனக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விரைவில் மனு கொடுக்க உள்ளேன். ‘சொர்க்கம் என் கையில்’ படம் மிக விரைவில் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும்..” என்றார்.

படத்தின் ஸ்டில்களை பார்த்தால் பி கிரேடு, சி கிரேடு படம் போல தெரிகிறது. எப்படியும் சுமாரான கூட்டம் வந்தாலே போதும் என்ற நிலையில் இன்னும் கொஞ்சம் கூட்டத்தைக் கூட்ட இப்படியொரு விளம்பர வழியைக் கையாளுகிறார் தயாரிப்பாளர் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசு..!

Our Score