கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டதால் கோடம்பாக்கத்து ஹீரோக்களும் அடுத்தடுத்த படங்களைத் துவக்கிவிட்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து இயக்குநர் ரவிக்குமாரின் சயின்ஸ் பிக்ஸன் படமான ‘அயலான்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் 50 சதவிகிதம் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது.
இதையடுத்துதான் எந்தந்த இயக்குநர்களின் படங்களில் நடிப்பது என்று தற்போது வேகமாக முடிவெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
முதல் பெயராக இயக்குநர் கார்த்திக் யோகியின் பெயர் அடிபடுகிறது. இவர் தற்போது சந்தானத்தின் நடிப்பில் உருவாகி வெளியாகக் காத்திருக்கும் ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கியவர். இந்தப் படம் தற்போது ஓடிடிக்கு போவதா அல்லது தியேட்டர்களில் வெளியாகலாமா என்கிற யோசனையில் இருக்கிறது.
இந்தக் கார்த்திக் யோகி, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ படத்தில் கதை உருவாக்கத்தில் இருந்தவர் என்பதால் இவரிடத்தில் சிவகார்த்திகேயன் தனக்கேற்ற கதை கேட்டிருக்கிறாராம்.
இதற்கடுத்த நபராக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமியை திடீரென்று அழைத்து ‘தனக்கென்று கதை இருக்கிறதா?’ என்று கேட்டு விசாரித்திருக்கிறார். ‘இல்லை’ என்றதும் உடனேயே காமெடியும், காதலும் கலந்த கதையை தயார் செய்யச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தேசிங்கு பெரியசாமி ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்காக ஒரு கதை எழுதி கையில் வைத்துக் கொண்டு ரஜினியின் அழைப்புக்காக் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வலிய வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று நினைத்து இதனை ஒப்புக் கொண்டாராம்.
ஸோ.. சூப்பர் ஸ்டாருக்காகக் காத்திருந்தவரை கடத்திச் சென்றுவிட்டார் சிவகார்த்திகேயன்..!