நடிகர் ரஜினிகாந்தின் பெயரில் அவரது ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களுக்கு ஒரு கடிதம் சென்றுள்ளதாக ஒரு செய்தியையும், அந்தக் கடிதத்தையும் இந்தப் பதிவில் வெளியிட்டிருந்தோம்.
இதன் பின்பு 2 நாட்கள் கழித்து நேற்றைக்கு ரஜினியின் பெயரில் டிவீட்டரில் ஒரு செய்தி வெளியானது. அதில், “அந்த அறிக்கையில் இருக்கும் செய்திகளெல்லாம் உண்மைதான் என்றாலும், அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை…” என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.
இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலுக்கு நிச்சயமாக வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இன்றுவரையிலும் இருந்து வரும் அவரது ரசிகர்களுக்கு அவரது இந்தத் திடீர் அறிக்கை கடும் சோர்வையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் பல ரசிகர்கள் ரஜினியின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதிக்கு வந்து அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். அனைவருமே ரஜினியை வாழ்த்தியும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லியும் எழுதப்பட்டிருந்த டீ ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர்.


இதற்கிடையில் ரஜினியின் இந்த அறிக்கை பற்றி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், “ரஜினிகாந்த் நிம்மதியான அமைதியான சூழலில் வாழ வேண்டும். இது ரொம்ப கடினமான ஆட்டம் உங்களுக்கு இது வேண்டாம். உங்கள் கருத்துக்களை எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் செயல்படுத்துகிறோம். உடல்நலம் கருதி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று அன்போடு கூறுகிறோம்..” என்று தெரிவித்தார்.

இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் பேசும்போது, “நண்பர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பா.ஜ.க.வில் சேர்ந்து பரபரப்பு செய்து கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ டிவீட்டரில் இது குறித்து ரஜினிக்கு ஒரு செய்தியை பதவிட்டிருக்கிறார்.
அந்தச் செய்தியில், “டியர் ரஜினி ஸார், உங்களுடைய உடல் நலம், மகிழ்ச்சியைத் தவிர உயர்ந்தது வேறில்லை. நீங்கள் எங்களுடைய பெருமிதமிக்க நபர். எங்களுடைய ஆதாரமே நீங்கள்தான். உடல் நலன் ரீதியாக உங்களுக்கு எது சரியென்று தோணுகிறதோ அதையே செய்யுங்கள். எந்தவிதத்திலும் உங்கள் மீதான எங்களது அன்பு மாறவே மாறாது. எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் ஒரு அடையாளமாகவே திகழ்வீர்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.