full screen background image

“நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென்று நினைத்ததால் ரஜினி முருகனில் நடித்தேன்” – சிவகார்த்திகேயனின் பேச்சு

“நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென்று நினைத்ததால் ரஜினி முருகனில் நடித்தேன்” – சிவகார்த்திகேயனின் பேச்சு

‘ரஜினி முருகன்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ‘நான் நல்லதொரு மனிதனாக நடந்து கொள்ள வேண்டுமே என்பதால்தான் இந்தப் படத்தில் நடித்ததாக’ கூறினார்.

சிவகார்த்திகேயன் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

DCIM (64)

“இது எனக்கு எட்டாவது படம்.  இந்தத் தலைப்பு பற்றி பலரும் கேட்டார்கள்.. தலைப்பை கேட்டுட்டு, ‘எதுக்கு இவனுக்கு இந்த வேண்டாத வேலை..? இவனுக்கு என்னாச்சு..?’  என்பார்களே என்று பயந்தேன்.

ஒரு நாள் ‘இந்தப் படத்தின் கதையைக் கேளுங்கள்’ என்றார் இயக்குநர் பொன்ராம். தலைப்பைக் கேட்டவுடன் எனக்குள் இரண்டு கேள்விகள் எழுந்தன. ஏன் இந்தத் தலைப்பு..? இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படி என்ன செய்யப் போகிறார் என்று. இந்த பொன்ராம் ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும் 20 நிமிஷத்தில் எல்லாம் சரியாகத்தான் இருப்பதாக எனக்கு நம்பிக்கை வந்தது.

பொன்ராமுடன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்குப் பிறகு இணையும் அடுத்த படம் இது என்பதால் எனக்கு கொஞ்சம் பதற்றமும், மன அழுத்தமும் இருந்தது. ஆனால் பொன்ராம் ரசிகர்கள் படத்தை எப்படி திரையரங்கில் ரசிப்பார்கள் என்று நினைத்து மட்டுமே படத்தை எடுத்தார்.. அப்படித்தான் ஒவ்வொரு காட்சியையும் எடுப்பார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு,  ஒரே மாதிரி இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதில் வேலைக்கே போக மாட்டேன் என்றிருக்கும் பாத்திரம். இதில் வேலை செய்கிற பாத்திரம். அதில் என் குடும்பம் பற்றி பெரியதாக எதுவும் இருக்காது. இதில் நிறைய இருக்கும்.

இந்தப் படத்தில் பெரிய, புதிய முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. ஜாலியாக சிரித்து விட்டுப்போக நாங்கள் உத்திரவாதம். படம் பார்த்தோம் ஜாலியாக இருந்தது என்றால் அதுதான் எங்களுக்கு ஆஸ்கார் விருது.

இதில் நடிக்க ராஜ்கிரண் சார் ஒப்புக் கொள்வாரா என்கிற சந்தேகம் இருந்தது. கதை கேட்டு, பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவர்கூட நான் நடிக்கிற மாதிரி காட்சி இருக்கிறதோ இல்லையோ, எனக்கு பெருமையாக இருக்கட்டும் என்று  நான் அவருடன் நடந்து வருகிற மாதிரி ஒரு காட்சியை படமெடுத்து தரும்படி பொன்ராமிடம் கேட்டேன்.  அவரும் ‘ஓகே’ன்னு சொல்லி ஒரு ஷாட் வைச்சிருக்கார். அதுதான் இந்த டிரெயிலர்ல நீங்க பார்த்தது.. படத்துல ஏழு நிமிஷம் வர்ற ஒரு சீன்ல ராஜ்கிரண் சார் ஒரே டேக்கில் நடித்து அசத்தி எங்க எல்லாரையும் கலங்க வைத்துவிட்டார்.

சமுத்திரகனி சாரிடம் இந்தக் கதை பற்றி நான் பேசியபோது அவர் என்னிடம் ஒரு கதை சொல்லி, ‘நீ நடிக்கிறாயா?’ என்றார். ‘நல்லாயிருக்குண்ணே’ன்னு சொல்லிட்டு ‘என்கிட்ட ஒரு கதை இருக்கு நீங்க கேக்குறீங்களா?’ன்னு கேட்டேன். ‘சரி. சொல்லு’ என்றார். இந்த ‘ரஜினி முருகன்’ கதையைச் சொன்னேன். ‘என்னப்பா.. ரெண்டும் ஒரே கதையா இருக்கு?’ என்றார். அவருக்கும் இந்தக் கதை பிடித்து விட்டது. வில்லன் வேடம்தான். ஆனால்  பெரிய சண்டை எல்லாம் போடமாட்டார். அமைதியாக இருந்து நரித்தனம் செய்கிற வில்லன்.

படத்தின் துவக்கத்திலேயே சூரியண்ணனிடம் ‘நாம ரெண்டு பேருக்குமே இந்தப் பட்த்துல நடிப்பில் சிரிக்க வைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது..’ என்றேன்.  4 பக்க வசனம் எழுதித் தந்தால் நாங்கள் 10 பக்கம் பேசுவோம். கடைசியில் இயக்குநர் தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்வார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமே மூன்றரை மணிநேரம் இருந்தது. கடைசியில் இயக்குநர்தான் குறைத்தார். இந்தப் படமும் அந்த ரேஞ்சில்தான் இருக்கிறது. எதை கட் செய்றது.. எதை விட்டு வைக்கிறதுன்னு தெரியாமல் பொன்ராம் திணறிக்கிட்டிருக்கார்.

பலரும்  கேட்டார்கள், ‘ஏன் இந்தப் பேனரில் செய்கிறாய்?’ என்று. ‘அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதே..?’ என்றனர். எல்லாருக்கும்தான் பிரச்சினை இருக்கிறது. நாம் படம் எடுத்தோம். ஓட வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பதைவிட அது கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்குக்கூட நிற்கிற மாதிரி இருந்தால் அது மகிழ்ச்சிதானே..? படம் வரும் போகும், ஓடும் ஓடாது. ஆனால் நல்ல மனுஷனாக நடந்து கொள்ள வேண்டும்  என்று நினைத்தேன். அதனால் இப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

லிங்குசாமி சாருக்கு உள்ள பொருளாதாரப் பிரச்னைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். இந்தப் படத்துல ஒரு இடத்துல ‘எல்லாரும் கிளம்புங்க. இனி எல்லா பிரச்னையையும் ரஜினி முருகன் பாத்துக்குவான்..’ அப்படின்னு ஒரு வசனம் வரும். உங்க பிரச்னைகளுக்கும் இது பொருந்தும் சார்… சோதனையை சந்தித்தால்தான் சாதனை. நிச்சயம் இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

நிகழ்ச்சியில்  நாயகி கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் ராஜ்கிரண், சூரி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். இயக்குநர் பொன்ராம்,  ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் பேசினார்கள்.

Our Score