திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரஜினி முருகன்.’, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரகனி, ஆகியோர் நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது. கடன் பிரச்சினையினால் தயாரிப்பாளர் லிங்குசாமியினால் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று கோடம்பாக்கத்தில் பலரும் வாயிலேயே பந்தல் போட்டு வரும் நேரத்தில் இந்த நிகழ்ச்சியும் நடைபெறுவதால் நடக்கப் போவது என்ன என்பதை பற்றி லிங்குசாமியிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள பேரார்வம் கொண்டிருந்தது மீடியா.
அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் நிதானமான தனது பேச்சினைத் துவக்கி நடுவில் வேகப்பட்டாலும் இறுதியில் தன்னம்பிக்கையோடு இந்தப் படத்தை எப்படியும் ரிலீஸ் செய்தே தீருவேன் என்று சொல்லி முடித்தார் இயக்குநர் லிங்குசாமி.
லிங்குசாமி பேசியதில் இருந்து சில பகுதிகள் :
“கும்கி’ படத்தை ‘மைனா’ படம் வெற்றி பெறும் முன்பேயே ஒப்பந்தம் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது. இந்தப் படத்தையும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளிவரும் முன்பே பேசி ஒப்பந்தம் செய்து விட்டோம்.
‘வழக்கு எண்’ பட சமயத்தில் வாய்ப்பு கேட்டவர்தான் இந்த சிவகார்த்திகேயன். அந்த ‘வழக்கு எண் பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் அடுத்த படம் எடுப்பதற்குள் சிவகார்த்திகேயன் நடித்து எட்டாவது படத்துக்கு வந்து விட்டார். இவர் இன்னமும் வளர்வார்.
‘ரஜினி முருகன்’ படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய உத்தம் வில்லன்கள் வருவார்கள். ‘நீங்கள் இதே மனசோட இருங்கள்’ என்று பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.
காலையில் மெரினா பீச்சுக்கு போனேன். ‘ரஜினி முருகன்’ பற்றி எந்த நினைப்பும் இல்லாமல்தான் போனேன். வழியில் தென்பட்ட ‘ரஜினி முருகன்’ போஸ்டர்களைப் பார்த்தவுடன் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது என்பதுபோல் தோன்றியது.
நான் இயக்கிய ‘ரன்’ படத்தின் படப்பிடிப்பும், ரஜினி சாரின் ‘பாபா’ படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில்தான் நடந்தன. முதன்முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது ‘ரன்’ போஸ்டர்களை பார்த்து இருக்கிறார் போல. ‘செம எனர்ஜியா இருக்கு லிங்கு’ என்று சொல்லி பாராட்டினார்.
‘ரஜினி முருகன்’ தலைப்பு பற்றி யோசித்தேன். ‘ரஜினிகாந்த்’ என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் அனுமதிக்கவில்லை. ‘சிவாஜி’ என்கிற தலைப்புக்கு ஷங்கர் சார், சிவாஜி குடும்பத்தில் பேசி அனுமதி வாங்கித்தான் படம் செய்தார்.
‘ரஜினி முருகன்’ தலைப்பு சம்பந்தமாக ரஜினி சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது ரஜினி சாரே போனில் வந்தார். நான் அவர்கிட்ட, ‘இந்த தலைப்பு பொன்ராமின் குரு, ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் ஸார். படத்துல எதிர்மறையா எதுவும் பயன்படுத்தவில்லை. பெயரை கெடுப்பதுபோல எந்த சீனும் இல்லை..’ என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன். ‘போதும் போதும். இப்போ என்ன.. பேரை யூஸ் பண்ணிக்கணும்னு அவ்ளோதான. வைச்சுக்குங்க’ என்று போனிலேயே ‘ஓகே’ சொல்லி விட்டார் .
இது மிகப் பெரிய உதவி. அவருக்கு மிகப் பெரிய மனசு. அது மட்டுமல்ல மூணு நாள் கழிச்சு மறுபடியும் போன் செஞ்சு, ‘ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஒண்ணு இருக்கு. சௌந்தர்யாகிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக்குங்க’ என்றும் சொன்னார். எனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினி சாருக்கு பெரிய நன்றி.
சினிமாவே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. ஊரிலிருந்து இங்கு நான் வந்தபோது என்ன கொண்டு வந்தேன்.? நம்பிக்கையை மட்டும்தான் எடுத்துக் கொண்டு வந்தேன். வேறு என்ன அள்ளிக் கொண்டு வந்தேன்..? கொண்டு வந்தது மஞ்சப்பைதான். திரும்ப எடுத்திட்டுப் போகப் போறதும் அதே மஞ்சப் பைதான். அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னிக்கும் சொல்றேன்..
உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் என் குடும்பத்தினர் நான் மதிக்கும் உறவினர் ஒருவரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள். ‘சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஒருவன்தான் ஜெயிக்கிறான். உன்னால் முடியுமா..?’ என்பார்கள். அப்போது அவங்ககிட்ட, ‘அந்த ஒருவன் நான்தான்’ என்பேன்.
என் வாழ்க்கை சினிமாவில்தான் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்; நம்பிக்கையாக இருந்தேன்; பிடிவாதமாக இருந்தேன். ஒரு நாள் எனது குடும்ப ஜோதிடர் வந்தார். அவர் ‘உன்னால் சினிமாவில் ஒரு பிரேம்கூட எடுக்க முடியாது’ என்று .அவர் சொன்னபோது ‘மூணே மாசத்துல ஒரு படம் எடுத்து இந்தாளுக்கே போட்டுக் காட்டணும்’னு எனக்கு ஒரு வெறியே வந்துச்சு. நினைத்தது போலவே மூன்றாவது மாதத்தில், ‘ஆனந்தம் படப்பிடிப்பை தொடங்கி விட்டேன்.
இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். நான் ஒவ்வொரு தடவையும் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன் இது என் முதல் பாதி. மறு பாதி இனிமேல்தான். எனவே இந்தப் படத்தின் பிரச்சினை பற்றி கவலை இல்லை.
நான் ‘ரஜினி முருகன்’ யூனிட்ல வேலை பார்த்த உதவி இயக்குநர்கள்ல ஆரம்பிச்சு, சிவகார்த்தியேன்வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருக்கேன். சம்பளம் வந்துச்சா, வரலையாங்கிற எந்த வருத்தமும் இல்லாம விட்டுக் கொடுத்து வேலை பார்த்திருக்காங்க.
இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே, ‘லிங்குசாமி நிலைமை சரியில்ல. இந்த படத்தை அவர் பேனர்ல பண்ணாதீங்க’ன்னு சிவகார்த்திகேயனிடம் சொல்லியிருக்காங்க. ‘ஷுட்டிங் நடக்காது’ன்னு சொன்னவங்களோட வார்த்தைகளை முறியடிச்சு இன்னைக்கு படத்தை முடிச்சுட்டோம். இப்போ ‘ரிலீஸ் பண்ண முடியாது’ன்னு சொல்றாங்க. அதையும் முறியடிப்போம்.
‘ரஜினி முருகன் இன்னொரு எம்.ஜிஆர்.’ன்னு சொன்னவங்களுக்கு சொல்றேன். சிவகார்த்திகேயனை நாங்க ரஜினி இடத்துல வைச்சு பார்க்கதான் ஆசைப்பட்டோம். ஆனால் நீங்க அதைவிட பெரிய இடத்தை கொடுக்க ஆசைப்படுறீங்க. சந்தோஷம்.
அஜீத்தை வச்சு ‘ஜி’ங்கிற பிளாப் படத்தை கொடுத்த பிறகுதான், ‘சண்டைக் கோழி’ன்னு வெற்றிப் படத்தை பண்ணினேன். ‘பீமா’ங்கிற தோல்விக்கு பிறகுதான் ‘பையா’ங்கிற வெற்றிப் படத்தை எடுத்தேன். ஒவ்வொரு முறையும் சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டிதான் ஜெயிச்சுருக்கேன்.
‘சண்டைக் கோழி-2’-வையும் விரைவில் எடுப்போம். அதிலும் ராஜ்கிரண் நடிப்பார். இமான்தான் இசை அமைப்பார். கிட்டத்தட்ட இன்றைய மேடையில் இருப்பவர்கள் அனைவரும் ‘சண்டைக் கோழி-2’ மேடையிலும் இருப்பார்கள்.
இந்த படம் திட்டமிட்டபடி சொன்ன தேதிக்கு வெளியாகும். என் சொத்துக்களை விற்றாவது இந்த படத்தை நான் ரிலீஸ் பண்ணுவேன். நிச்சயம் ‘ரஜினி முருகன்’ விஷயத்துல எனக்கு ஏற்பட்ட சோதனையையும் கடந்து வெல்வேன்…’ என்றார் இயக்குநர் லிங்குசாமி.