நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..!

சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டது.

ஆனால் "சிவாஜிக்கு தற்போது அடையாறு அருகே கட்டப்படவிருக்கும் மணிமண்டபம் கட்டும்வரையிலும், சிலை அங்கேயே இருக்கட்டும். மணிமண்டபம் கட்டி முடித்தவுடன் அந்த மணிமண்டபத்திற்கு சிவாஜியின் சிலை மாற்றப்படும்..." என்று அரசுத் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசுக்கு வரும் ஜூலை மாதம்வரையிலும் அவகாசம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் 'சிவாஜி சிலையை மணிமண்டபத்தில் கொண்டு போய் வைக்கக்கூடாது. பொதுமக்கள் பார்க்கும்வகையில் ஏதாவது ஒரு சாலையில்தான் அவரது சிலை வைக்கப்பட வேண்டும்' என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இப்போது கோரிக்கை வைத்துள்ளது.

இன்று சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் கூறுகையில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை மணிமண்டபம் தவிர மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மாற்றிடத்தில்தான் அமைக்க வேண்டும். அதற்காக ஆகும் செலவு முழுவதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்த தமிழக முதல்வரை சந்திக்கப் போகிறோம்.." என்று தெரிவித்துள்ளனர்.

இதற்காக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர், பொதுச் செயலாளர் திரு.விஷால், இத்தீர்மானத்தை முன்மொழிந்த திரு.பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.