‘துருவங்கள்-16’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியின் பாராட்டு..!

‘துருவங்கள்-16’ படத்திற்கு கிடைத்திருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியின் பாராட்டு..!

சென்ற வாரம் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘துருவங்கள்-16’ திரைப்படம் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி, திரையுலகத்தினரையும் சேர்த்தே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

காரணம், இந்தப் படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் 23 வயதேயான இளைஞர். இந்த வருடம்தான் கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார். சினிமா துறையில் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றாதவர், தன்னுடைய தந்தை கொடுத்த ஊக்கத்திலும், யோசனையிலும் சொந்தப் படமாக இதனை எடுத்திருக்கிறார்.

இந்தச் சின்ன வயதில் ஒரு காவல்துறையின் விசாரணை எந்த அளவுக்கு இருக்கும்.. இருக்க வேண்டும்..? எப்படி விசாரணையின் போக்கு செல்ல வேண்டும்.. காவல்துறை மேலதிகாரிகள் தங்களுடைய கீழமை அதிகாரிகளை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் வகுப்பெடுப்பது போல திரைக்கதை அமைத்திருப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்றே சொல்ல்லாம்.

இந்தப் படத்தின் தாக்கம் இப்போது சினிமா துறையையும் தாண்டி காவல்துறையையும் தொட்டுவிட்டது.

இந்தப் படத்தை பார்த்த கோவை மாநகர போக்குவரத்து பிரிவின் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் ஐ.பி.எஸ்., இந்தப் படம் பற்றிய தனது கருத்துக்களை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.

அது இங்கே :

“You can run with a lie..

But you can’t hide from the truth.

It will catch you.

‘துருவங்கள் பதினாறு (D-16)’ – ஒரு காவல்துறை அதிகாரியின் பார்வையில்.

ஒரு காவல்துறை அதிகாரி திரைப்படம் குறித்து எழுதலாமா என்று சற்றே யோசித்தேன். ஆனால் காவல்துறை தொடர்பான படம்,  காவல் ஆய்வாளர் கதாநாயகன்,  கதைக்களம் கோவை மற்றும் துப்பறியும் சினிமா போன்ற காரணங்கள் இதனை எழுத போதுமானதாக இருந்தது.

துப்பறியும் சாம்பு போன்ற படக் கதைகளை படித்து மெதுவாக நாவல்களை படிக்க ஆரம்பித்த காலத்தில் எனது தந்தை அழைத்து சென்று காண்பித்த ஜேம்ஸ்பாண்ட் படங்கள் துப்பறியும் கதைகள் படிக்க தூண்டியது. 

எனது ஆர்வத்தை  ராஜேஷ்குமாரின்  விவேக், பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத்,  சுபாவின் நரேன் மற்றும் சுஜாதாவின் வசந்த் ஆகியோர்தான் தீனி போட்டு வளர்த்தனர்.

இவர்களது நாவல்களில் கடைசி இரு அத்தியாயங்களை படிக்காமல் நானே ஒரு முடிவினை யோசித்து பின்னர் அவற்றை படித்து சரிபார்ப்பது எனது வழக்கம்..

இப்பழக்கம் தற்போது எந்த வழக்கையும் பல்வேறு கோணத்தில் யோசிக்க உதவுகிறது. எனவே துப்பறியும் திரைப்படங்கள் பார்ப்பது எப்போதும் என்னை உற்சாகப்படுத்த கூடியது. ஆனால் இத்திரைப்படம் கூடுதலாக ஆச்சரியப்படுத்தியால்தான் இப்பதிவு.

ஒரு கொலை, அதை துப்பறியும் காவல்துறை அதிகாரி அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என ஒரு காவல்துறை அதிகாரியின் பார்வையில் சொல்லப்படும் கதைதான் ‘துருவங்கள் பதினாறு’.

ஒரு கொலை வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் காவல் ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிரமங்கள்,  காவல் நிலையத்தில் நிலவும் சூழ்நிலைகளை கச்சிதமாக படம் பிடித்துள்ளனர். கொலை வழக்கில் கிடைக்கும் சிறு, சிறு தடயங்கள் மூலம் எவ்வாறு குற்றவாளியை நெருங்க முடியும் என்பதை காட்டிய விதம் அருமை.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் காவலர்களை சிரிப்பு கதாபாத்திரத்தில் சித்தரிப்பது வழக்கம்.  எப்போதாவது ‘ரமணா’ – யூகிசேது,  ‘காக்கிசட்டை’ – சிவகார்த்திகேயன் போல புத்திசாலியாக காண்பிப்பர். 

‘D-16’-ல் காவல் நிலையப் பணியில் சேர்ந்த முதல்நாள் முதல் புத்திசாலித்தனமாக ஆர்வத்துடன் செயல்படும் இரண்டாம் நிலை காவலர் கதாபாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையின் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் காவலர்களே. இவர்களில் பலரும் திறமைசாலிகளே. திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்களே அதிகம்.

திரைப்படத்தில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சியும்,  வசனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.  எந்த ஒரு நிமிடத்தை பார்க்காமல் விட்டாலும் இழப்பு பார்வையாளருக்கே.

இரண்டு மணி நேர படத்தில் இடைவேளை தவிர மற்ற எந்த நேரத்திலும் செல்போனை எடுத்து வாட்ஸ்அப்,  பேஸ்புக் என யாரையும் பார்க்கவிடாமல் படம் பார்க்க செய்ததில் இயக்குநர் வெற்றி பெற்று விட்டார்.

22 வயதில் படம் இயக்குவதே சாதனை அதிலும் வன்முறை,  ஆபாசம்,  குத்துப் பாட்டு,  இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் ஒரு திரைப்படத்தை மிகவும் சுவாரசியமாக இயக்க முடியும் என நிரூபித்த இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு வாழ்த்துகள்.

குற்றவாளி யாராக இருக்கும் என இருக்கும் 16 கோணத்திலும் நாம் சிந்திக்கும்போது 17-வது கோணத்தில் திரைப்படத்தை நகர்த்தி செல்லும் லாவகம் செம.

நடிகர் ரகுமான் இயக்குநரின் நடிகராக மாறி ஒரு காவல் ஆய்வாளராக கச்சிதமான நடிப்பு.  22 வயது புதுமுக இயக்குநரை நம்பி நடித்ததற்காக சிறப்பு பூங்கொத்து.

துப்பறியும் படங்களில் காமிரா(சுஜித் சாரங்) எடிட்டிங(ஜித் சாரங், இசையின் (ஜேக்ஸ்பிஜாய்) பங்கு இன்றியமையாதது.  இதில் அனைத்தும் அருமை.

காவல் ஆய்வாளரின் வாகனம்,  அதற்கான டிரைவர் இல்லாதது,  நாள் முழுவதும் சார்ஜ் இல்லாத செல்போன் போன்ற சிறு லாஜிக் குறைகள் இருந்தாலும்,  அவையெல்லாம் திரைக்கதையின் வேகமான நகர்வில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

மொத்தத்தில் தமிழ் க்ரைம் நாவல் நாயகர்கள் விவேக்கின் புத்திசாலித்தனம், நரேனின் லாவகம்,  வசந்தின் சாமர்த்தியம் கொண்ட நேர்த்தியான திரைப்படம் ‘துருவங்கள் பதினாறு’.

முக்கிய குறிப்பு :

போதையில் வாகனத்தை ஓட்டுவது இளைஞர்களை எவ்வாறு பிரச்சினைக்குள்ளாக்கும் என்பது குறித்தும்,  சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது எவ்வாறு வாழ்வை முடக்கும் என்பது குறித்தும் திரை மொழியில் உணர்த்தியமைக்கு இயக்குநருக்கு சிறப்பு நன்றிகள்.

திரைப்படம் குறித்த முதல் பதிவு. நண்பர்கள் வரவேற்பை பொறுத்து தொடரும்….

A.சரவணன் I.P.S.

காவல் துறை கண்காணிப்பாளர்,

கோவை மாநகர போக்குவரத்து துறை,

கோவை.”

Our Score