‘நடிகர் திலகம்’ சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுத்தாளர் இன்பா எழுதிய ‘சிவாஜி ஆளுமை – பாகம் நான்கு’ என்ற நூலின் வெளியீட்டு விழா, நேற்று காலை 9 மணிக்கு எத்திராஜ் கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். மேலும், இந்த விழாவில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன், முனைவர் ராஜாராம். தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், ‘மக்கள் குரல்’ ராம்ஜி, கொடைக்கானல் காந்தி, எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை, எத்திராஜ் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் கவுசல்யா குமாரி, எழுத்தாளர் ம.ஸ்வீட்லின், எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், ‘சிவாஜி ஆளுமை-பாகம் நான்கு’ புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நடிகர் சிவக்குமார், ‘நடிகர் திலகம்’ சிவாஜியின் பட வசனங்களையும், ராமாயணம், மகாபாரத நூல்களில் இருந்து மேற்கோள் பாடல்களையும் மனப்பாடமாகப் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது.
நடிகர் சிவக்குமார் பேசும்போது, “இந்த நிகழ்வு இங்கு நடப்பதற்கான முழு முதல் காரணம் தம்பி இன்பாதான். நான் ‘நடிகர் திலகம்’ சிவாஜியுடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், ‘நடிகர் திலக’த்தைப் பற்றிய அனைத்து விஷயங்களையும், புள்ளி விவரங்களுடன் தன் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.
‘நடிகர் திலகம்’ சிவாஜி பற்றி முழுமையான ஒரு உரையை நிகழ்த்த நினைத்தபோது இன்பாவின் புத்தகம்தான் எனக்கு உறுதுணையாக இருந்தது. கடந்தாண்டு பதினைந்தாயிரம் பேர் முன்னிலையில் சிவாஜியின் 35 ஆண்டு கால சினிமா வரலாறு பற்றி… ஒரே மூச்சில், ஒரே டேக்கில் 75 நிமிடங்கள் பேசினேன்.
நான் பிறந்து, வளர்ந்த காலங்களில் சினிமா பார்ப்பது என்பது பீடி, சிகரெட், மது அருந்துவதுபோல் ஒரு பாவச் செயலாகவே பார்க்கப்பட்டது. தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகை நாட்களில் மட்டுமே சினிமா பார்க்க அனுமதி கிடைக்கும். அதுவும் பகல் காட்சி மட்டும் பார்த்துவிட்டு இரவுக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும். அந்த அளவுக்கு வீட்டில் கண்டிப்பு இருந்தது.
1956-ம் ஆண்டு அந்த மாதிரியான ஒரு பண்டிகை நாளில்தான் நடிகர் திலகம் நடித்த ‘வணங்காமுடி’ படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ஏ.கே.வேலன்.
படத்தில் ஒரு கலைச் சிற்பியான நடிகர் திலகம், அந்த நாட்டு இளவரசியை காதலிக்கக் கூடாது என்று பலர் சொல்லியும் கேட்காமல் இளவரசியைக் காதலிப்பார். இதைக் கேள்விப்பட்டு ஆத்திரப்படும் மன்னர் ‘நடிகர் திலக’த்தை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடுவார். ‘நடிகர் திலகம்’ அதனை எதிர்த்து ராஜ சபையில் வீர வசனம் பேசுவார். அந்தக் காட்சியில் சினிமா கொட்டகையே கை தட்டலில் அதிரும். அப்போதே ‘நாம் சாவதற்குள் இந்த மனிதனை பார்த்துவிட்டுத்தான் சாக வேண்டும்’ என்று என் மனதிற்குள் உறுதி பூண்டிருந்தேன்.
நான் நினைத்ததுபோலவே நடிகர் திலகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதே எனக்குக் கிடைத்தது. 1958-ம் வருடம் சிவாஜிக்கு நெருக்கமானவர்களின் குடும்ப விழாவில் கலந்து கொள்ள அவர் கோவை வந்திருந்தபோது, அங்கே அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அதுதான் எனக்கும், அவருக்குமான முதல் அறிமுகம்.
காலம் ஓடியது. நான் சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் கற்றேன். 1965-ம் ஆண்டில் நடிப்புத் துறைக்குள் வந்தேன். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் ‘நடிகர் திலக’த்தின் மூத்த மருமகனாக நடித்தேன்.
அதே நேரத்தில் ‘கந்தன் கருணை’ படத்தில் ‘முருகன்’ கதாபாத்திரத்திற்காக 36 பேரைப் பார்த்து திருப்தியாகாமல் கடைசியாக நான் தேர்வாகி நடித்தேன். அதில் சூரபத்மனிடம் தூது செல்லும் தூதுவனான ‘வீரபாகு’வாக என் வாத்தியார் சிவாஜி என்னுடன் நடித்தார்.
அந்தப் படத்தில் அவரும், அசோகனும் நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் ஆர்வமாக போய்ப் பார்த்தேன். அவர்கள் இருவரும் பேசிய அந்த வசனக் காட்சியைப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.
அப்போதுதான் சினிமாவில் எதுவும் தெரியாமல் ஒப்பேத்த முடியாது என முடிவு செய்து சொந்தமாக ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தேன். ஆனால். அதனை நடத்த முடியாமல் கடைசியாக மேஜர் சுந்தர்ராஜன் குழுவில் இணைந்து இந்தியா முழுக்க ஆயிரம் நாடகங்களில் நடித்தேன். அப்போதுதான் வசனங்களை மனப்பாடம் செய்யும் கலையைக் கற்றேன்.
அந்தக் கலையின் கை வண்ணத்தினால்தான் என்னுடைய 67-வது வயதில் கம்ப ராமாயணத்தில் இருந்து 15 ஆயிரம் பாடல்களைப் படித்து, அதனைச் சுருக்கி ஒரு பேருரையை நிகழ்த்தினேன். மகாபாரதம் பற்றி 4 வருடங்கள் ஆராய்ச்சி செய்து.. அதனை முழுமையாகப் படித்துவிட்டு 6500 மாணவர்கள் முன்பாக மகாபாரத உரையையும் நிகழ்த்தினேன்.
இதற்கெல்லாம் எனக்குள் ஒரு ஆசானாக இருந்தவர் ‘நடிகர் திலகம்’ சிவாஜிதான். என்னால் இது முடிகிறதென்றால் உங்களால் இதையும் தாண்ட முடியும். என்னைவிட நூறு மடங்கு சாதனைகளை உங்களால் செய்ய முடியும். எவராவது, நான் மனனம் செய்த சாதனையை முறியடித்து, கற்று தேர்ந்து என்னை மிஞ்சி சாதனை புரிந்தால், நான் இன்னும் சந்தோஷப்படுவேன்.
நமது வாத்தியார் சிவாஜிக்கு 1995-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது. இதற்காக கலை உலகமே திரண்டு அவருக்கு ஒரு விழா எடுத்தது. அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
அப்போது அந்த மேடையில் நான் வாசித்த வாழ்த்து மடலை இப்போது படிக்கிறேன்.
பள்ளிப் படிப்பு இல்லை..
பரம்பரை பெருமை இல்லை..
இளமையில் வறுமையை இறுகத் தழுவியவன்..
ஆயினும் கலை உலக நாயகி கலைவாணியின் ஆசி பெற்று. திரையுலகில் அழியாத இடம் பிடித்து விட்டான்..
ஒரு சாண் முகத்தில் ஒராயிரம் பாவனை காட்டி, சிம்மக் குரலில் தீந்தமிழ் பேசி, அவன் படைத்தப் பாத்திரங்கள் திரையில் அசைகின்ற ஓவியங்கள்..
கர்ணனாக, கட்டபொம்மனாக, சிவாஜியாக, செங்குட்டுவனாக, அரிச்சந்திரனாக, அசோகனாக, அப்பராக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக, வ.உ.சிதம்பரமாக, வாஞ்சிநாதனாக.. அவன் ஏற்ற வேடங்கள் எங்களுக்குப் பாடங்கள்.
நடக்கும் நடையில் நானூறு வகை காட்டினான்.
மொத்தத்தில் நவரசங்களில் நமக்கு நவராத்திரியைக் காட்டிவிட்டான்.
‘கிறிஸ்துவுக்கு முன்’, ‘கிறிஸ்துவுக்கு பின்’ என மானிட வரலாறு சொல்ல..
‘சிவாஜிக்கு முன்’, ‘சிவாஜிக்கு பின்’ என தமிழகத் திரை வரலாறு சொல்லும்.
வாழ்க சிவாஜி நாமம்..!
ஓங்குக சிவாஜி புகழ்..!
நன்றி.”
என்று தனது வாழ்த்துப் பாடலை பேசி முடித்தார் நடிகர் சிவக்குமார்.