சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், அவர் இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ’பத்து தல’ படத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சிம்புவின் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு நேற்று இரவு வெளியாகி உள்ளது. சிம்புவின் நடிப்பில் புதிய படமொன்றைத் தயாரிக்கப் போவதாக பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் புதிய படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கவுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த புகைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத் தாண்டி வருவாயா’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்த ’அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
மேலும் சிம்பு நடிக்கவுள்ள ‘பத்து தல’ படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குநர் கௌதம் மேனன் அவர்களுடன் சிம்பு இணைந்திருப்பது அவரது ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.