full screen background image

சிகரம் தொடு – சினிமா விமர்சனம்

சிகரம் தொடு – சினிமா விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரியான சத்யராஜ் ஒரு கலவரத்தின்போது அரிவாளால் வெட்டப்பட்டு தனது ஒரு காலை இழக்கிறார். இப்போது குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது ஒரே மகன் விக்ரம் பிரபு. இவரை எப்படியாவது தன்னை போலவே ஒரு சிறந்த போலீஸ் ஆபிஸராக உருவாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் சத்யராஜ்.

ஆனால் மகன் விக்ரம்பிரபுவுக்கோ ஏதாவது ஒரு வங்கியில் தலைவர் பதவிவரையிலும் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்று மனம் நிறைய ஆசை. ஆனாலும் அப்பாவை இப்போதைக்கு ஏமாற்ற விரும்பாமல் ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை டிரெயின் செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தாத்தா வட நாட்டு சுற்றுலாவுக்கு போகும்போது துணைக்கு விக்ரம் பிரபுவையும் அழைத்துச் செல்கிறார். அப்போது அதே டூரில் வரும் ஹீரோயின் மோனலை பார்த்தவுடன் பிரபுவுக்கு காதல் பிறக்கிறது.. துவக்கத்தில் வரும் ஒரு சின்ன சண்டைக்கு பின்பு, சமாதானக் கொடியையெல்லாம் பறக்கவிட்டு கடைசியில் அது காதலில் போய் முடிகிறது.

மோனலுக்கு போலீஸ் வேலையே பிடிக்காது.. போலீஸ் மாப்பிள்ளையே வேண்டாம் என்று நினைப்பவர். தானும் போலீஸ் வேலைக்கு போகப் போவதில்லை.. ஆக இந்த காதல் கன்பார்ம் என்று நினைத்து விக்ரம் பிரபு மகிழ்ச்சியிருக்கும் இருக்கும் நேரத்தில் போலீஸ் வேலை கன்பார்மாகி டிரெயினிங்கிற்கு அழைப்பு கடிதம் வருகிறது..

மோனலிடம் பொய் சொல்லிவிட்டு டிரெயினிங்கிற்கு செல்கிறார். எப்பாடுபட்டாவது நிறைய சொதப்பல்களில் ஈடுபட்டால் தன்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கிறார் பிரபு. ஆனால் காலேஜ் பிரின்ஸிபால் மோனலின் அப்பா என்பது பின்புதான் பிரபுவுக்கே தெரிகிறது..

“1 மாசம் டைம் தரேன்.. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல டிரெயினிங் எஸ்.ஐ.யா சேர்ந்து வேலைய பாரு.. ஒரு மாசம் கழிச்சும் வேலை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் உன்னை விட்டுடறேன். என் பொண்ணையும் உனக்குக் கட்டித் தரேன்…” என்கிறார் மோனலின் அப்பா.

அவர் சொல்படியே ஒட்டேரி காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐ.யாக சேர்கிறார் பிரபு. அப்போதுதான் சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் ஏடிஎம்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி பணம் கொள்ளையடிப்பது அதிகமாகி வருகிறது.

சரியாக ஒரு மாதம் முடிய இருக்கும் நாளில் அந்தக் கொள்ளையர்கள் சத்யராஜின் கண் பார்வையில் படுகிறார்கள். அவர்களுடன் சண்டையிட்டு பக்கத்தில் இருப்பவர்கள் துணையுடன் அவர்களைப் பிடிக்கிறார் சத்யராஜ்.

இப்போது இவர்களை விசாரிக்க வேண்டிய பொறுப்பும், காலையில் கோர்ட்டுக்கு அழைத்துப் போய் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் பிரபுவுக்கு இருக்க.. இன்னொரு பக்கம் வழக்கமான சினிமா ஹீரோயினை போல மோனல் “சினிமா தியேட்டருக்கு வர முடியுமா? முடியாதா?” என்று வெறுப்பேற்றுகிறார்.

பிரபு காதலியைத் தேடி சினிமாவுக்குச் செல்ல.. இங்கே கிடைத்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள். போகும்போது சத்யராஜ் எதேச்சையாக அங்கே வந்துவிட அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறார்கள்..

இப்போது பிரபுவின் மன நிலைமை மாறுகிறது.. போலீஸ் வேலையே வேண்டாம் என்பவர் தன்னுடைய தந்தையை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பிடிக்க வேண்டி வெறியாகிறார். பிடித்தாரா..? இல்லையா..? எப்படி பிடித்தார் என்பதுதான் இந்த திரில்லர் கதையின் முடிவு.

‘அரிமா நம்பி’யின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படம் விக்ரம் பிரபுவிற்கு.. நடிப்பும் கொஞ்சம் கூடியிருக்கிறது..! இன்னமும் டயலாக் டெலிவரியை மட்டும் ஷார்ப்பாக்கிக் கொண்டால் போதும்.. பிரபுவிட்ட இடத்தை இந்த இளைய பிரபு தொடரலாம்..!

வெகு நாட்களுக்கு பிறகு சத்யராஜுக்கு ஒரு சிறப்பான வேடம்.. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேசும்போதே தனது கேரக்டர் ஸ்கெட்ச்சை வெளிப்படுத்தும் விதமாக பொறுப்பாக பேசும்விதமும், தனது மகன் மீது அவர் வைத்திருக்கும் அந்த பாசத்தையும், நம்பிக்கையையும் காட்டும்விதமும் அழகாக பதிவாகியிருக்கிறது..!

மோனல் கஜ்ஜார்.. ஒரு பக்கம் பார்த்தால் பிடிக்காததுபோலத்தான் தோன்றுகிறது.. ‘டக்கு டக்கு’ பாடலின்போது மட்டும் பிடித்திருக்கிறது. அதிகமான, அழுத்தமான காட்சிகள் இல்லை என்பதால் நிறைய ஸ்கோர் செய்யவில்லை.

இவர்களையும் தாண்டி பாராட்டுக்குரியவர் மோனலின் தந்தையாக போலீஸ் டிரெயினிங் காலேஜ் பிரின்ஸிபாலாக நடித்திருப்பவர். அழுத்தம், திருத்தமாக வசனங்களை உச்சரித்து அதற்கேற்ற மரியாதையையும் கொடுத்து அவர் வருகின்ற காட்சிகளை அழுத்தமாக கவனிக்க வைத்திருக்கிறார்.. நன்று..!

ஏடிஎம் கொள்ளை எப்படி நடக்கிறது என்பதை இன்றைக்கு தமிழகமே இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு டீடெயிலாக இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர் கெளரவ். “ஆறு மாதங்களாக ரிசர்ச் செய்துதான் இதன் கதையையும், திரைக்கதையையும் தயார் செய்தேன்…” என்றார் இயக்குநர். பாராட்டுக்கள்.

ஏடிஎம் கார்டை பயன்படுத்துபவர்கள் ஒரு முறையாவது பாஸ்வேர்டை மாத்திரலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காட்சிகளை தந்திருக்கிறார். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இதுவும் வேறு வேறு வடிவத்தில் வரத்தான் செய்யும்.

கிளைமாக்ஸில் வேகம் கூடி எப்படித்தான் பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஒரு ஆர்வத்தை உருவாக்கியதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் கெளரவ். அந்த திரில்லிங் அனுபவம் நிசமாகவே தியேட்டரில் கிடைத்தது.

இத்தனை பெரிய கேஸ் என்று தெரிந்தும் காதலி அழைக்கிறாள் என்று சொல்லி சினிமா தியேட்டருக்கு போகும்போதே பிரபு மீது ஒரு பார்வையாளர்களுக்கு ஒருவித கடுப்பு வருகிறது.. அதை சரி செய்யும்விதமாக சத்யராஜ் மருத்துவமனையில் இருக்கும்போது “இனி நீ என்ன சொன்னாலும் நான் அதை ஒத்துக்குறேன்…” என்று சொல்லி சமாளித்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.. இத்தனை மாதங்களாக  தேடி வரும் கொள்ளையர்களை அவ்வளவு அலட்சியமாக லாக்கப்பில் சும்மாவே அமர வைத்துவிடுவார்களா..? போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டமே இந்நேரம் அந்த ஸ்டேஷனை மொய்த்திருக்காதா..? போலீஸ் கமிஷனர் வெறுமனே போனில் பேசி பாராட்டுகிறார் என்பதோடு கதையை முடித்துவிட்டார் இயக்குநர்.

போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே துப்பாக்கிச் சூடு எனில் போலீஸ் உயரதிகாரிகளும் சும்மா விட்டுவிடுவார்களா..? தனியே பயிற்சி எஸ்.ஐ.யை மட்டுமே இந்த கேஸை ஹேண்டில் செய்ய அனுமதிப்பார்களா..? ஆள் யாரென்று தெரிந்தவுடன் அவர்களே போயிருக்க மாட்டார்கள்..?

ஒட்டு மொத்த போலீஸ் டீமையும் களத்தில் குதிக்க வைத்து ஒரு நிமிடத்தில் பிடிக்க வேண்டியதை ஹீரோயிஸ கதை என்பதால் ஹீரோவுக்காக காத்திருந்து அவருடைய இன்ஸ்ட்ரக்சன்படியே நடந்து பிடிப்பதுபோல ஆக்கியிருக்கிறார்கள் என்று தியேட்டரில் இருந்து சிறிய முணுமுணுப்பு எழத்தான் செய்தது.. வழக்கம்போல இதை இயக்குநருக்கு பாஸ் செய்துவிடுவோம்.. இதில் கதைதான் ஹீரோ.. ஹீரோ இல்லை என்பதை இயக்குநர் ஏன் கடைசியில் மறந்து போனார்..?

விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.. இதைவிட பிரவினின் எடிட்டிங் மகா கச்சிதம். படத்தின் பிற்பாதியில் எடிட்டரின் உதவியால் படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.. இமானின்  இசையில் ‘டக்கு டக்கு’, ‘சீனு சீனு’ பாடல்கள் ஓகே ரகம். பாடல்களைவிடவும் படமாக்கியவிதமும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. ‘அன்புள்ள அப்பா’ பாடல் எதிர்பாராத ஒன்று..! அந்த இடத்தில் பாடல் தேவையா ஸார்..?

தனக்கென்று வந்த பின்புதான் ஒவ்வொருத்தனும் பொது நலத்தை பற்றி சந்திக்கிறான் என்பதை இந்த பிரபு கேரக்டர் மூலமாக இயக்குநர் மறைமுகமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார். நன்றி..!

சில விதிமீறல்கள் இருப்பினும் தியேட்டருக்குள் இருக்கும்போது அது பற்றியே நினைக்க வைக்காமல், திரையை மட்டுமே பார்க்க வைத்து அனுப்பிய இயக்குநரின் இயக்கத் திறமைக்கு நமது பாராட்டுக்கள்..!

‘சிகரம் தொடு’ ஒரு சிறந்த முயற்சி.

Our Score