full screen background image

“ராம் படத்துல ராம அவதாரம் பற்றியா காட்டினார் அமீர்…?” – கண்டித்த இயக்குநர்..!

“ராம் படத்துல ராம அவதாரம் பற்றியா காட்டினார் அமீர்…?” – கண்டித்த இயக்குநர்..!

இது என்ன வகையான பிரமோஷன் டிரிக்குன்னு தெரியலை..? இல்ல நிசமாகவே அமீரை போட்டு தாக்குறாரான்னும் தெரியலை..

ஆடில பேசின பேச்சுக்கு புரட்டாசில வந்து பதில் சொல்ற மாதிரி செப்டம்பர் 2-ம் தேதி இயக்குநர் அமீர் பேசிய பேச்சுக்கு இன்னிக்கு பதில் சொல்லியிருக்காரு ‘திலகர்’ படத்தோட இயக்குநர் பெருமாள் பிள்ளை.

‘திலகர்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தலைமையேற்று பாடல்களை வெளியிட்ட அமீர் தன்னுடைய பேச்சில் ‘திலகர்’ என்ற பெயரைப் பற்றி பேசினார்.

director ameer-1

“இந்தப் படத்தின் போஸ்டர்களை பார்த்தபோது அதிர்ந்துபோய்விட்டேன். ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.

தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக் காப்பற்ற வேண்டும். தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது: எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என்று பேசினார் அமீர்.

அமீரின் அப்போதைய பேச்சால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐ.டி. மக்கள்ஸ் மட்டுமே இணையத்தில் பொங்கியெழுந்து தங்களது எதிர்ப்புகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தத் திலகர் பெயர் விவகாரம் மட்டும் அமுங்கிப் போயிருந்தது. இப்போது இந்தப் படத்தின் இயக்குநர் பெருமாள் பிள்ளையே கொஞ்சம் லேட்டாக பொங்கியிருக்கிறார்..

Thilagar_Director_Perumal Pillai

“விழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களைப் பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது, யார் யார் அதில் நடித்திருக்கிறார்கள்? கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டு வருவார். திரு அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும்.

ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து ‘கதை எதைப் பற்றியது…?’ ‘ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள்..?’ என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன்.

‘திலகர்’ படத்தின் கதையையோ அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்’ கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு, எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப் பஞ்சாயத்து செய்பவன், சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப் போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால்.

இந்தப் படத்தின் தலைப்பு ‘திலகர்’. இது கதாநாயகனின் பெயர். இது ​​முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங் குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது எனது படம். இதற்காகவே எனது தயாரிப்பாளர்கள் இக்கதையை தயாரிக்க முன் வந்தனர்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பொது இடங்களில் பேசக் கூடாது என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டுமே போட்டார்கள். ஒன்று வட இந்தியாவில் பாலகங்காதர திலகர், இரண்டு தென்னிந்தியாவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்கள். அந்த அளவுக்கு இந்த இருவரின் பேச்சும் ஆங்கில அரசுக்கு அச்சம் கொடுத்தது.

இவர்கள் மிதவாதிகளல்ல. இந்த சமூகத்துக்கு​ அடிமைத்தளையை உடைத்தெடுக்கும்​ வகையில்​ வீரத்தையும் மானத்தையும் ​ உயிர் கொடுத்து ஊட்டியவர்கள். ‘திலகர்’, ‘சுபாஷ் சந்திரபோஸ்’ எனப் பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது.​ ​நேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம். ஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர் ​​முக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம்.

‘திலகர்’ மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், ‘கேசரி’ என்ற பத்திரிக்கை ஆசிரியர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதையும் அறிந்தவனாதலால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடுத்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல. அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்’ திரைப்படத்தின் கதை.

எதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக் கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல. மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதைவிட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே.

’ராம்’ படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், ’ஆதிபகவன்’ படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா திரு அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார்..?

இதைப் பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக் கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை திரு அமீர் அவர்கள் சொல்ல வேண்டும்..” –

இப்படி வாரியிருக்கிறார் படத்தின் இயக்குநர் பெருமாள் பிள்ளை..!

இயக்குநர் அண்ணன் அமீருக்கு இதெல்லாம் தேவையா..? போனோமா.. நீத்து சந்திராவை பார்த்தோமோ..? பேசினோமான்னு வராம.. மைக் கிடைச்சிருச்சேன்னு ஏதாவது பேசினால்.. இனிமேல் யாராவது ஆடியோ ரிலீஸுக்கு கூப்பிட்டால் ‘நான் என்ன வேண்ணாலும் பேசுவேன்.. என் பேச்சுக்கு பதில் வரக் கூடாது’ன்னு எழுதி வாங்கிட்டு வாங்கண்ணே..! இல்லைன்னா இப்படித்தான்.. கூப்பிட்டு மூஞ்சில கரியைப் பூசுவாங்க..!

Our Score