தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
சென்னை மற்றும் பல மாவட்டங்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
காலை 9 மணிக்கு செயற்குழு கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
பெண் உறுப்பினர்களான லதா, ரோகிணி, கோவை சரளா, லலிதா குமாரி, பசி சத்யா, சத்யப்ரியா, சோனியா ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்ற பொதுக் குழுக் கூட்டம் துவங்கியது.
சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால் வரவேற்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை துணைத் தலைவர் கருணாஸ் வாசித்தார்.
அடுத்துப் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த வங்கி லோன் கன்சல்டண்ட் ஜெயந்தி கிரிதரன், ஆடிட்டர் ஶ்ரீராம், சட்ட ஆலோசகர் கிருஷ்ணா ரவீந்திரன், சார்லஸ் டார்வின், இலவச மெடிக்கல் செக்கப் செய்து கொடுத்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சந்திரசேகர், ‘சங்கர் ஐ-கேர்’ இலவச கண் முகாம் நடத்திய டாக்டர் விஜய் சங்கர், பத்திரிக்கை தொடர்பாளர் ஜான்சன் ஆகியோருக்கு மேடையில் பொன்னாடை போத்தி மரியாதை செய்யப்பட்டது.
இதையடுத்துப் புதிய கட்டிடம் நிதி திரட்டும் நடவடிக்கை குறித்து பொருளாளர் கார்த்தி, சங்க உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தார்.
தொடர்ந்து சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உதவி அளித்த உலக நாயகன் கமல்ஹாசன், இளைஞர் நலன் – விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சன் ஸ்டார் ஹோட்டல்ஸ் அண்ட் எஸ்டேட்ஸ், நடிகர் நெப்போலியன், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முக்கிய நிகழ்வாக நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அத்துடன் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலர் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
நடிகை விஜயகுமாரி நன்றி தெரிவித்துப் பேசும்போது, “கடந்த நிர்வாகிகள் என்னை மதிக்கவேயில்லை. இப்பொழுது உள்ள பிள்ளைகள் என்னை மதித்து வீட்டிற்கு வந்து அன்பு காட்டினர். இப்பொழுது இருக்கும் முதலமைச்சர் எல்லாவற்றையும் தெரிந்திருப்பவர்.. அவர் நடிகர் சங்கத்தை மனதில் வைத்து கொள்ள அன்பாய் கோரிக்கை வைக்கிறேன்..” என்றார்.
நடிகர் டெல்லி கணேஷ் பேசும்போது, “நேரம் காலம் பார்க்காமல் எவ்வளவோ நல்லது செய்யும் இந்த அணியே மீண்டும் தொடர ஆசைப்படுகிறேன். மீண்டும் உங்களையே நாங்கள் ஜெயிக்க வைப்போம்..” என்றார்.
மேலும், மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோருக்கும் இந்த மரியாதையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஹேமா கட்டியின் எதிரொலியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கமிட்டியின் அமைப்பாளரான நடிகை ரோகிணி பேசும்போது, “சினிமா தொழிலில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால் அதற்கு நாங்கள் இருக்கிறோம். ஏற்கனவே 2019-ம் ஆண்டே நமது சங்கத்தில் ஒரு அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமைப்பும் உடனேயே அமைக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிரச்சனையில் சிக்கும் பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் கொடுக்க வேண்டும்.
இது மாதிரியான பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு முன் மொழியப்படும்…” என்றார்.
இதற்கடுத்து நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடிக்கும்வரையிலும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு, இப்பொழுது பொறுப்பில் இருக்கும் சங்க நிர்வாகிகளே பணியில் தொடரலாம் என்று ஏகமனதாக பொதுக் குழுவில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
தொடர்ந்து சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி எஸ்.முருகன் நன்றியுரை ஆற்றினார்.
முன்னதாக காலை 8 மணி முதல் உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘இலவச மெடிக்கல் செக்கப்’ அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பாகவும், ‘சங்கர் ஐ-கேர்’ சார்பாக இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது.