full screen background image

“பாலியல் புகாரில் சிக்கினால் 5 ஆண்டுகள் தடை” – நடிகர் சங்கம் எச்சரிக்கை!

“பாலியல் புகாரில் சிக்கினால் 5 ஆண்டுகள் தடை” – நடிகர் சங்கம் எச்சரிக்கை!

இன்று காலை சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில், “பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரை செய்யவும் முடிவெடுத்துள்ளனர். மேலும் “பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. “யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும்” என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‛‛பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம்; புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு சினிமா துறையில் மட்டுமல்ல. மீ டூ சர்ச்சையின்போதே விசாகா கமிட்டியை அமைத்துவிட்டோம். நாங்கள் எங்கள் உரிமையை எப்போதும் கேட்போம்..” என்றார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியின் தலைவரான நடிகை ரோகிணி பேசும்போது, “பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது. எங்களுக்கு புகாரளிப்பதற்காக 2019-ம் ஆண்டே நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்தக் கமிட்டியில் உள்ளனர். அப்போதே சில புகார்கள் வந்தன. நாங்களே அதைப் பேசித் தீர்த்துவிட்டோம். அந்த விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அதனை நாங்கள் வெளியே சொல்லவில்லை.

இப்போது பாலியல் புகார்களை சங்கத்திடம் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண்ணை வழங்கியிருக்கிறோம். புகார் கொடுப்பவர்கள் யார் என்பதை வெளியே தெரியப்படுத்த மாட்டோம். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள். அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை. நம் உறுப்பினர்களுக்கு பாலியல் பிரச்னைகள் எங்கே நடந்தாலும் அவர்கள் தைரியமாக புகாரளிக்க முன் வர வேண்டும்…” என்றார்.

Our Score