சென்னையில் உள்ள சாந்தி தியேட்டர் இடிக்கப்பட்டு அதே இடத்தில் நவீன வடிவில் 4 தியேட்டர்களை உள்ளடக்கிய ஷாப்பிங் மால் கட்டப்படவிருப்பதாக அதன் உரிமையாளர்களில் ஒருவரான நடிகர் பிரபு அறிவித்துள்ளார்.
54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாசாலையில் ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி.உமாபதியால் கட்டப்பட்டது சாந்தி தியேட்டர். 1962-ஆம் ஆண்டு சாந்தி திரையரங்கத்தை ஜி.உமாபதியிடம் இருந்து நடிகர் சிவாஜிகணேசன் வாங்கினார்.
அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன. 2005-ம் ஆண்டு இந்த சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ படம் இந்த சாந்தி திரையங்கில் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.
சென்னையில் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் இந்த சாந்தி திரையரங்கத்தை இப்போது இடித்து விட்டு, அதே இடத்தில் 4 நவீன திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தியை இன்றைக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார் நடிகரும், சாந்தி தியேட்டரின் உரிமையாளர்களில் ஒருவருமான நடிகர் பிரபு.
அக்சயா என்கிற தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து சாந்தி தியேட்டரை இடித்துவிட்டு அதே இடத்தில் 4 சினிமா தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால் கட்டப் போவதாக நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்..!
ஷாப்பிங் மால்களில் இருக்கும் தியேட்டர்கள் என்றால் அதில் நடுத்தர வர்க்கத்தினர்கூட நுழைய முடியாது. ஏழை பங்காளிகள் எங்கே செல்வார்கள். இனி அண்ணா சாலை தியேட்டர்களில் ஏழைகளுக்கு இடமில்லைதான்..!
சந்திரமுகியை இதே சாந்தி தியேட்டரில் 10 ரூபாய் டிக்கெட்டில் 100 நாட்கள் தொடர்ந்து பார்த்த ரசிகர்களெல்லாம் இனிமேல் என்ன செ்யவார்கள்..?